மு.க. ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து சைதை துரைசாமி வழக்கு... நவ.2 வரை விசாரிக்கத் தடை!
சென்னை: கொளத்தூர் சட்டசபைத் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு நவம்பர் 2ம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக பொருளாளர் ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சைதை துரைசாமி களமிறங்கினார். அத்தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

ஆனால், ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சைதை துரைசாமி வழக்குத் தொடர்ந்தார். அதில், ‘தேர்தலின்போது மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் பொறுப்பில் இருந்ததால், அவர் தேர்தல் வெற்றிக்காக தனது பதவிக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தினார். பண பலம், ஆள் பலம், அதிகார பலம் ஆகியவற்றின் மூலம் தேர்தலில் ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டதால்தான் அவரால் வெற்றி பெற முடிந்தது. எனவே, அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது, சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஸ்டாலின் மனுத் தாக்கல் செய்தார்.
அதில், ‘உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொளத்தூர் தொகுதி தேர்தலுக்கு எதிரான வழக்கின் மனுதாரர் (சைதை துரைசாமி) தரப்பில் தேர்தலின்போது ரூ.30 லட்சம் பட்டாசு வெடித்தல் போன்ற கொண்டாட்டங்களில் செலவிடப்பட்டதாக குற்றம்சாட்டி அதற்கு ஆதாரமாக சில வீடியோ பதிவுகளை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த பதிவுகள் மூலப்பதிவில் இருந்து எடுக்கப்பட்ட பிரதிகள் என்பதையும் அவர் தெரிவித்து இருந்தார். தேர்தல் விதிகளின்படி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடுக்கப்படும் வழக்குகளில் வீடியோ உள்ளிட்ட ஆவணங்களின் நகல்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் மூல ஆவணங்களே தாக்கல் செய்யவேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து மீண்டும் மூல ஆவணங்களை தாக்கல் செய்வதற்காக சைதை துரைசாமி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டு மார்ச் 6-ந் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
இது தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது. எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும். இந்த மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் முடிவடையும் வரை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை நடத்திய நீதிபதி, சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கு விசாரணையை நவம்பர் 2ம் தேதி வரை விசாரிக்கக் கூடாது என தடை விதித்தார்.












Click it and Unblock the Notifications