தொடரும் மழை: தண்ணீரில் மிதக்கும் பட்டாசுக் கடைகள்... கண்ணீரில் வாடும் வியாபாரிகள்
சென்னை: நாளை மறுதினம் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பட்டாசு விற்பனை பதபதத்துப் போயுள்ளது.
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதை பட்டாசுச் சத்தங்களே காட்டிக் கொடுத்து விடும். பட்டாசுக்கள் வெடித்து காசையும் கரியாக்கி, காற்றையும் மாசு படுத்தாதீர்கள் என விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்யப் பட்டாலும், விலையேற்றத்தைப் பற்றிக் கவலைப் படாமல் வாங்கி வெடிக்கும் பட்டாசுப் பிரியர்கள் நம்மில் ஏராளம்.
இந்நிலையில், இந்தாண்டு தீபாவளி பெருத்த ஆரவாரமில்லாமல் காணப்படுவதற்கு மழை முக்கியக் காரணம் ஆகும். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையால் மக்கள் வீட்டை விட்டே வெளியேற அஞ்சுகின்றனர்.

4வது நாளாக மழை...
அதிலும் குறிப்பாக சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக பெய்து வரும் மழையால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது.

18 செ.மீ. மழை...
கடந்த நான்கு நாட்களில் சென்னையில் பெய்த மழையின் அளவு 18 செ,மீ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சென்னையில் 40 மரங்கள் விழுந்துள்ளதாகவும், 12 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விற்பனை மந்தம்...
மழை காரணமாக மக்கள் வெளியே வர அஞ்சுவதால் இந்தாண்டு பட்டாசு விற்பனை குறைந்துள்ளது. அதிலும், பெரும்பாலான பட்டாசுக் கடைகள் மழையில் நனைந்ததால், பட்டாசு வியாபாரம் சூடு பிடிக்கவில்லை.

120 கடைகள்...
சென்னையில் தீவுத் திடலில் கடந்த 13ம் தேதி மாலை பட்டாசுக் கடைகள் திறக்கப்பட்டன. சுமார் 120 கடைகளில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன.

குறைவான எண்ணிக்கை...
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், இங்கு பட்டாசு வாங்க வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

பதபதத்துப் போகும் பட்டாசுகள்...
மழை காரணமாக சில கடைகள் ஒழுகுவதாகவும் வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் பட்டாசுகள் பதத்துப் போகும் வாய்ப்பிருப்பதால், வியாபாரம் மேலும் மந்தமாகும் சூழல் இருப்பதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

மழை பயம்...
இது தவிர மழை எப்போது நிற்கும் எனச் சரியாக தெரியாத நிலையில் பட்டாசுகளை வாங்கி வெடிக்க முடியாமல் போய் விட்டால் என்ன செய்வது என பொதுமக்கள் சிந்தித்து வருகின்றனர். எனவே, அதிக தொகைக்கு அவர்கள் பட்டாசு வாங்க தயங்கும் சூழல் காணப்படுகிறது.

முடக்கம்...
மழை காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட போதும், மகிழ்ச்சியாக பட்டாசுக்கள் வெடிக்க இயலாமல் அவர்களும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.,

புகார் எண்...
இதற்கிடையே மழை பாதிப்பு தொடர்பான புகார்களுக்கு 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications