ஆட்சியில் தலையிட்ட ஆளுநர் சென்னா ரெட்டியை ஜெயலலிதா எப்படி எதிர்த்தார் தெரியுமா?
Recommended Video

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவது அவ்வளவு பெரிய விஷயம் ஒன்றுமில்லை என்ற பாணியில் தமிழக அமைச்சர்கள் பேசி வருகிறார்கள்.
ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாக அடிக்கடி கூறிக்கொள்ளும், இவர்களோ, அதே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இப்படி ஆட்சியில் தலையிட்ட ஒரு ஆளுநருக்கு எப்படி எதிர்ப்பு காட்டப்பட்டது என்பதை இவர்கள் அறிந்திருக்கவில்லை போலும்.
கோவையில் அரசு அதிகாரிகளையும் மாவட்ட நிர்வாகத்தையும் அழைத்து ஆய்வுக் கூட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பன்வாரிலால் புரோஹித்.

எதிர்க்க வேண்டியவர்கள் வரவேற்பு
எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய ஆளும் கட்சியினரை தவிர அத்தனை கட்சியினரும் இந்த செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்துவிட்டனர் என்பதுதான் இதில் விந்தை. எனவேதான், "இனி ஒவ்வொரு மாவட்டமாகச் செல்லப் போகிறேன்" என்று அதிரடியாக ஆளுநர் அறிவிக்க முடிந்துள்ளது. அசாம் மாநில ஆளுநராக இருந்தபோதும் அவர் இதே போல் தான் செயல்பட்டுள்ளார் என்கின்றன அங்கிருந்து வரும் தகவல்கள்.

சற்று பின்னால் திரும்பி பார்க்கவும்
இப்போது ஒரு குட்டி பிளாஷ்பேக்.. தமிழக ஆளுநராக எம்.சென்னாரெட்டி இருந்த காலம் அது. முதல்வராக ஜெயலலிதா முதல் முறை அதிகாரத்திற்கு வந்திருந்ததும் அந்த காலகட்டம்தான். 1993 ஆகஸ்ட் மாதம் சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. பெருத்த சேதத்துடன் உயிர் பலியும் ஏற்பட்டது. ஆளுநராக இருந்த சென்னாரெட்டி பதறியடித்து ஓடிவந்து நேரடியாக வந்து கள ஆய்வு செய்தார்.

பிரதமருக்கு கடிதம்
இப்படி ஒரு இடர் காலத்திலும் கூட, ஆளுநர் அங்கு சென்றதற்கு, ஜெயலலிதா கடுமையான ஆட்சேபணை எழுப்பினார். இதன்பிறகு 1995ல் மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற சென்னாரெட்டி மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டுச் சில விவரங்கள் கேட்டார். ஆனால் அதையும் எளிதில் விடவில்லை ஜெயலலிதா. ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஆளுநருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதினார்.

வாகனத்தை மறித்த அதிமுகவினர்
அது மட்டுமா, மாநில அரசின் அதிகாரங்களில் ஆளுநர் தலையிடுகிறார் என்று கூறி சென்னாரெட்டி வாகன அணிவகுப்பைத் திண்டிவனம் அருகே வழிமறித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி ஷாக் கொடுத்தனர். மேலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு நாளன்று ஆளுநர் நடத்தும் மாலை நேரத் தேநீர் விருந்துகளை ஜெயலலிதா புறக்கணித்தார். அதுமட்டுமல்லாது, அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆளுநரின் தேநீர் விருந்துக்கு போகக் கூடாது என்று கடும் உத்தரவும் பிறப்பித்தார்.

சென்னா ரெட்டி மீது பகிரங்க குற்றச்சாட்டு
சென்னா ரெட்டி ஆளுநராக இருந்தபோதுதான், தன்னிடம் அவர் தகாத முறையில் நடந்துகொண்டார் என்று குற்றம் சாட்டினார். அப்போதைய தூத்துக்குடி எம்.எல்.ஏ. ரமேஷ் தலைமையில் அதிமுகவினர் ராஜ்பவனுக்கு ஊர்வலமாகச் சென்று ஆளுநருக்கு நெருக்கடியை அதிகரித்தனர். இப்படியெல்லாம் ஜெயலலிதாவும், அவர் சொல்படி அதிமுகவினரும் கொடுத்த நெருக்கடிகளால், அதன்பிறகு தமிழகத்தில் எந்த ஆளுநரும் அரசின் ஆட்சி அதிகாரங்களில் தலையிட்டதே கிடையாது. திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டங்களிலும் ஆளுநர் என்பவர் ஒரு அரசியல் சாசன பதவியில் வலம் வருவோராக மட்டுமே இருந்தார்.

ஜெ. வழியில் ஆட்சி
ஆனால் இப்போது ஆளுநர் ஆய்வு நடத்துவதை அதிமுக அமைச்சர்கள் வரவேற்கின்றனர். மேலும் சில ஆளும் பிரமுகர்களோ இது ஆரோக்கியமானது தான் என்று கூட வர்ணிக்கின்றனர். ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று கூறிக்கொண்டே இதை அவர்கள் செய்வதுதான் ஆகப்பெரிய முரண்.












Click it and Unblock the Notifications