மத்திய அரசில் அங்கம் வகிப்பது பற்றி பேச ஜெயலலிதாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டணி, தோழமை, மத்திய அரசில் அங்கம் வகிப்பது பற்றியெல்லாம் பேசுவதற்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை, தமிழ்நாட்டு மக்கள் இப்போதாவது ஒருக்கணம் சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

முதலமைச்சர் ஜெயலலிதா பேசும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் எல்லாம் மத்திய அரசில் கிட்டத்தட்ட 17 ஆண்டுக் காலம் அங்கம் வகித்த தி.மு.கழகம் தமிழ்நாட்டு மக்களுக்காக என்ன செய்தது என்ற கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டு, அதற்கான விடையினை தி.மு. கழகம் மத்திய அரசிலே அங்கம் வகித்தபோது தமிழ்நாட்டு மக்களுக்காக என்னென்ன திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்றது என்ற பட்டியலை தி.மு. கழகத் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டோம். அதற்குப் பிறகும் அதே கேள்வியை ஜெயலலிதா தொடர்ந்து கேட்டு வந்ததின் பேரில் அந்தப் பட்டியலையும் வெளிப்படையாகத் தெரிவித்தோம். என்றாலும் இப்போதும் முதலமைச்சர் ஜெயலலிதா அதே கேள்வியைத்தான் திரும்பத் திரும்ப ஒவ்வொரு கூட்டத்திலும் கேட்டு வருகிறார்.

Jaya doesn't have rights to talk about alliance: Karunanidhi

மத்திய அரசின் மூலம் சில சலுகைகளை, சாதனைகளைப் பெறுவதற்கு அந்த ஆட்சியிலே அங்கம் வகிக்க வேண்டும் என்பது கூட முக்கியமல்ல! குறிப்பாக தலைமைச் செயலகத்தில், விடுதலை நாளன்று ஆளுநர் தான் கொடியேற்றி வந்தார். ஆளுநருக்குப் பதிலாக, அந்த நாளில் அந்தந்த மாநில முதல் அமைச்சர்களே கொடியேற்றுகின்ற உரிமை என்னுடைய வேண்டுகோளின் பேரில்தான் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும் கிடைத்தது. ஆனால் அப்போது தி.மு.கழகம் மத்திய ஆட்சியிலே அங்கம் வகிக்கவில்லை.

மத்திய அரசில் தி.மு. கழகம் அங்கம் வகித்த நேரத்திலே கூட, தி.மு. கழகத்தின் பலம் என்ன என்பதை உணர்ந்து, அதற்கேற்பத்தான் தமிழகத்தின் வேண்டுகோள்களை மத்திய அரசிடம் தெரிவித்து, அவைகளைப் பெற முடிந்தது. அதனால் தான் அகில இந்திய அளவில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் ஒரு நல்ல தோழமைக் கட்சி என்ற பெயரினை இன்றளவும் பெற முடிந்திருக்கிறது.

ஆனால் அ.தி.மு.க.வுக்கு உள்ள பெயர் என்ன? 1998ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் எல்லாம் சேர்ந்து தமிழகத்திலே தோழமை கொண்டிருந்தன. அப்போது தேர்தலுக்கு முன்பே, அ.தி.மு.க. வின் அவைத் தலைவராக இருந்த நாவலர், "பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் தி.மு.க. அரசைக் கலைக்கக் கோருவோம்" என்ற அறிவிப்பினை வெளிப்படையாகச் செய்தார்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது பற்றி, பா.ஜ.க. தலைவராக இருந்த வாஜ்பாய் அவர்கள் விளக்கம் அளிக்கும் வகையில், "ஊழல் புகார்கள் கூறப்பட்டோர் மீதான குற்றங்கள் உரிய நீதிமன்றங்களில் நிரூபிக்கப்பட்டால் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட குற்றம் சாட்டப்பட்ட கட்சித் தலைவர்களுடனான உறவை பா.ஜ.க. முறித்துக் கொள்ளும்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராக இருந்த கோவிந்தாச்சார்யா கூறும் போது, "தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வுடன் பாரதீய ஜனதா தேர்தல் உடன்பாடு செய்து கொண்டது வழுவல்தான்" என்றார்.

மேலும் அவர், "உத்தரப்பிரதேச அமைச்சரவையில் தேவையற்ற நபர்களை அமைச்சர்களாக்கியது, அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி வைத்தது என்று இரண்டு வழுவல்களை பா.ஜ.க. செய்துவிட்டது, தற்காப்பின் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று கூறினார்.

தேர்தலுக்கு முன்பு 14-2-1998 அன்று மாலை 4 மணி அளவில் கோவையில் அடுத்தடுத்து 13 இடங்களில் குண்டு வெடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். அத்வானி அன்றையதினம் பேசவிருந்த மேடைக்கு அருகே 2 குண்டுகள் வெடித்து, பத்துப் பேர் இறந்தனர்.

இந்தச் சம்பவம் காரணமாக நாடாளுமன்றத் தேர்தல் முடிவு தி.மு.கழகக் கூட்டணிக்குப் பெரிதும் பாதகமாக அமைந்தது. தி.மு.கழகக் கூட்டணி 10 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 30 இடங்களிலும் வெற்றி பெற்றன. அகில இந்திய அளவில், பா.ஜ.க. கூட்டணி 254 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 168 இடங்களிலும், ஐக்கிய முன்னணி 93 இடங்களிலும், மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றி பெற்றன.

நாடாளுமன்ற பா.ஜ.க. தலைவராக வாஜ்பாய் தேர்ந்தெடுக்கப்பட்டார். 9-3-1998 அன்று டெல்லி சென்று, வாஜ்பாய் அவர்களை ஜெயலலிதா சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, "தமிழகத்தில் தி.மு.க. அரசைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்" என்று கூறினார்.

"காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு சோனியா காந்தி வரும் வாய்ப்பு இருக்கிறதே?" என்று செய்தியாளர் கேட்டபோது, "அத்தகைய நிலை ஏற்படுவது இந்த நாட்டுக்கு நேரும் துயரம், 98 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் தலைமை வகிக்கும் திறமையும், தகுதியும் கொண்டவர்கள் எவரும் இல்லையா?" என்று பதிலளித்தார்.

குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன், பா.ஜ.க. தலைவர், வாஜ்பாய் அவர்களை 11-3-1998 அன்று ஆதரவு எம்.பி.க்களின் பட்டியலோடும், ஆவணங்களோடும் வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். ஆனால் வாஜ்பாய் அவர்கள் 11ஆம் தேதியன்று குடியரசுத் தலைவரைச் சந்திக்க முடியவில்லை. காரணம் என்ன தெரியுமா? பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறிய கட்சிகள் எல்லாம் தங்களது ஆதரவுக் கடிதங்களைக் கொடுத்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகளிடமிருந்து பா.ஜ.க. அரசை ஆதரிப்பதாகத் தெரிவிக்கும் கடிதங்கள் வந்து சேராததால், வாஜ்பாய் குடியரசுத் தலைவரைக் குறிப்பிட்ட நேரத்தில் சந்திக்க முடியவில்லை.

நிபந்தனையில்லாமல் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு தருவதாகக் கூறிய ஜெயலலிதா, ஆதரவுக் கடிதம் தருவதற்கு முன்பு, தமிழகத்திலே தி.மு.க. அரசைக் கலைக்க பா.ஜ.க. உத்தரவாதம் தர வேண்டுமென்றும், தன் மீதுள்ள வழக்குகளையெல்லாம் திரும்பப் பெற வேண்டுமென்றும், சுப்பிரமணியன் சுவாமிக்கு நிதி அமைச்சர் பொறுப்பும், வாழப்பாடி ராமமூர்த்திக்கு சட்ட அமைச்சர் பொறுப்பும் வழங்கிட வேண்டுமென்றும் நிபந்தனைகளைத் தெரிவித்திருப்பதாகவும், ஆனால் அந்த நிபந்தனைகளையேற்க பா.ஜ.க. தலைமை திட்டவட்டமாக மறுத்து விட்டது என்றும், 13-3-1998 தேதிய ஏடுகள் செய்தி வெளியிட்டன. அந்தச் செய்திகளை ஜெயலலிதா மறுத்து, தமிழக அரசின் தேவைகள் குறித்து சாதகமான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் தான் ஆதரவுக் கடிதம் கொடுப்பதில் தாமதம் என்று கூறினார்.

14-3-1998 அன்று ஜெயலலிதா செய்தியாளர்களைச் சந்தித்து, வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி மத்தியிலே அமைவதற்கான ஆதரவுக் கடிதங்களை அ.தி.மு.க.வும், கூட்டணிக் கட்சிகளும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டதாகவும், ஆட்சி அமைக்க ஆதரவு உண்டு, ஆனால் அமைச்சரவையிலே சேரமாட்டோம், பா.ஜ.க. என்னை மதிக்கவில்லை, அவமதித்து விட்டது, பா.ஜ.க.வின் போக்கு சரியில்லை என்றும் தெரிவித்தார். ஆனால் 15-3-1998 அன்று மீண்டும் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா, "மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க., பா.ம.க., வாழப்பாடி காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்கும்" என்றார். அவ்வாறே தம்பிதுரை, சேடப்பட்டி முத்தையா, வாழப்பாடி ராமமூர்த்தி, ரங்க ராஜன் குமாரமங்கலம், தலித் எழில்மலை, ஜனார்த்தனம், ஆர்.கே. குமார் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப் பேற்றனர்.

மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழ்நாட்டுக்கு என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தது என்று கேட்ட ஜெயலலிதாவுக்கு விளக்கமாக எங்கள் தேர்தல் அறிக்கையிலேயே அவைகளைப் பட்டியலிட்டிருக்கிறோம். ஆனால் 1998 இல் மத்திய அரசில் பங்கேற்ற அ.தி.மு.க.வின் இலட்சணம் என்ன? என்னென்ன திட்டங்களைத் தமிழகத்திற்காகக் கேட்டுப் பெற்றார்கள்? சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்குகளை நடத்த, ஜெயலலிதா தேர்ந்தெடுத்த 33 அ.திமு.க. வழக்கறிஞர்களுக்கு தம்பிதுரை நியமன உத்தரவுகளை வாங்கிக் கொடுத்தார். அந்த வழக்கறிஞர்கள் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டு, அங்கே ஒவ்வொருவருக்கும் அந்த நியமன உத்தரவை ஜெயலலிதாவே வழங்கினார். "ஸ்டேட்ஸ்மேன்" நாளேடு இதைக் கிண்டல் செய்து அப்போது எழுதியது.

ஒரு மாத காலத்திலேயே அ.தி.மு.க. சார்பில் மத்திய அமைச்சராக இருந்த சேடப்பட்டி முத்தையாவை நீக்கிவிட்டு திண்டுக்கல் சீனிவாசன் என்பவரை மத்திய அமைச்சர் என்று அறிவித்தார். சேடப்பட்டியை நீக்கியதைப் போல குற்றச்சாட்டுகள் தங்கள் பெயரில் கொண்ட மத்திய அமைச்சர்களை பிரதமர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றார் ஜெயலலிதா. வேறு வழியின்றி மத்திய அமைச்சராக இருந்த பூட்டாசிங் அவர்களை பிரதமர் நீக்கினார்.

2-4-1998 அன்று ஜெயலலிதா டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து விட்டு சென்னை திரும்பியதும், விமான நிலையத்திலேயே செய்தியாளர்களிடம், தி.மு.கழக அரசைக் கலைக்க வேண்டுமென்று வலியுறுத்துவோம் என்றார்.

குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி, அதன் மீதான விவாதத்திற்கு பிரதமர் வாஜ்பாய் பதிலளித்துக் கொண்டிருந்த போது, அப்போது காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவும், தற்போது குடியரசுத் தலைவராகவும் உள்ள பிரணாப் முகர்ஜி அவர்கள் எழுந்து, "தமிழ்நாட்டு மக்கள்விரைவில் தி.மு.க. ஆட்சியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று மத்திய அமைச்சர் ரெங்கராஜன் குமாரமங்கலம் சென்னையில் பேட்டி அளித்தது பற்றி பிரதமரின் கருத்து என்ன?" என்று கேட்ட போது, "எந்த மாநிலத்திலும் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதை எங்கள் அரசு கடுமையாக எதிர்க்கும்" என்று பிரதமர் பதிலளித்தார்.

25-4-1998 அன்று மத்திய திட்டக் குழுத் துணைத் தலைவராக இருந்த ஜஸ்வந்த் சிங் சென்னை வந்து ஜெயலலிதாவைச் சந்தித்து விட்டு, பின்னர் செய்தியாளர்களிடம், விரைவில் கூடவுள்ள ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க ஜெயலலிதா ஒப்புக் கொண்டதாகக் கூறினார். அதுபற்றி 26-4-1998 தேதிய "தினமணி" முதல் பக்கத்தில் "கைகேயி வெற்றி - மக்களின் தோல்வி" என்ற தலைப்பில் அருமையான ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது.

மத்திய அரசில் பங்கேற்ற அ.தி.மு.க. நிறைவேற்றிய மற்றொரு மகத்தான சாதனை - மத்திய அரசில் அங்கம் வகித்த அ.தி.மு.க. சார்பாக அமைச்சராக இருந்த ஒருவர் 7-5-1998 அன்று பிறப்பித்த ஆணையில் சென்னையில் ஜெயலலிதாவின் வருமான வரி வழக்குகளை விசாரித்து வந்த அதிகாரிகள் உட்பட89 துணை ஆணையர்களையும், 108 உதவி ஆணையர் களையும் இட மாற்றம் செய்த சாதனையாகும். இவ்வாறு செய்த போதிலும், அவர் ஜெயலலிதாவை வழக்குகளிலிருந்து தப்புவிக்க சரியாக கவனம் செலுத்தாத காரணத்தாலோ என்னவோ, ஒரு சில நாட்களில் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

அ.தி.மு.க.வின் நடவடிக்கைகள் பற்றி, 13-6-1998 அன்று சென்னையில் ப. சிதம்பரம் அவர்கள் அளித்த பேட்டியில், "தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அ.தி.மு.க. சொல்லி வருகிறது. அதற்கு பா.ஜ.க. அரசு பலியாகுமா இல்லையா என்பது தான் கேள்வி" என்றார். மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி அவர்கள் "தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டுமென்று கோரும் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவுக்கு "முடியாது" என்பது தான் பதிலாக இருக்கும்" என்றார். அதைப் பற்றி, "தேசியப் பாதுகாப்பிலே அக்கறை இல்லாத ஒருவர் உள்துறை அமைச்சராக மத்தியிலே இருப்பதற்காக வேதனைப்படுவதாக" ஜெயலலிதா கூறினார்.

3-7-1998 அன்று "தினமணி" நாளேடு "தமிழகத்துக்குத் தலைகுனிவு" என்ற தலைப்பில் எழுதிய தலையங்கத்தில், "மத்திய அரசை நிலைகுலைய வைப்பதே அ.தி.மு.க.வின் சாதனையாக இருக்கிறது" என்று எழுதியது.

15-7-1998 அன்று "ஸ்டேட்ஸ்மேன்" நாளேடு வெளியிட்ட செய்தியில், "மத்திய அரசுடன் ஜெயலலிதா செய்து கொண்டுள்ள தற்காலிக சமாதான உடன்பாட்டைத் தொடர்ந்து, அவர் மீது உள்ள வருமான வரி மற்றும் இதர வழக்குகளில் இருந்து அவரை விடுவிக்க வாஜ்பாய் அரசு வழிவகைகளை மேற்கொண்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளை மேற்பார்வையிட்டு வந்த ஆணையாளர் எஸ்.சி. ஜாதவ் மும்பையில் சிறந்த பதவி எனக் கருதப்படும் ஒரு பதவிக்கு மாற்றப்பட்டார். அவருடைய பதவியை கே. கோபாலன் என்பவர் ஏற்றுக் கொண்டார்.

நேர்மையுடன் செயல்படக்கூடியவரான பி.கே. ஸ்ரீதரன் வேறு ஒரு முக்கியப் பொறுப்புக்கு மாற்றப்பட்டார். அவரது இடத்துக்கு என்.பி. திரிபாதி என்பவர் நியமிக்கப்பட்டார். இப்படிப்பட்ட மாறுதல்கள் மூலம் ஜெயலலிதாவும், சசிகலாவும் அவருடைய உறவினர்களும் ஒரு தற்காலிக விடுதலையை அடையக் கூடும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

ஜெயலலிதாவை சமாதானப்படுத்தியதன் மூலம் பா.ஜ.க. அரசு தனக்குத் தேவையான ஆதரவைப் பெற்றது. அதற்குப் பதிலாக தமிழ்நாட்டில் தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளனர்" என்று எழுதியிருந்தது. 21-7-1998 அன்று "எகனாமிக் டைம்ஸ்" நாளேடும் இதே கருத்தில் கட்டுரை ஒன்றைத் தீட்டியிருந்தது.

இதற்கிடையே 26-2-1999 அன்று அ.தி.மு.க. வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் வாஜ்பாய் அவர்களைச் சந்தித்து, வாழப்பாடி ராமமூர்த்தியிடம் இருந்த பெட்ரோலியத் துறையை அ.தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டுமென்று வலியுறுத்தினர்.

1998ஆம் ஆண்டு இறுதியில் நீதித்துறை வட்டாரங்களில் நடைபெற்ற ஒருசில மாறுதல்கள் ஏடுகளில் முக்கியத்துவம் பெற்றன. ஜெயலலிதா மற்றும் முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான பல கோடி ரூபாய் ஊழல் வழக்குகளில் பா.ஜ.க. அரசு இரட்டை நிலை மேற்கொண்டது. அது பற்றி அருமை நண்பர் மூப்பனார் அவர்கள் தலைமையிலான தமிழ் மாநிலக் காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானத்தில், "உச்ச நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களும் ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகளில் வழக்குத் தொடர போதிய சாட்சியம் இருக்கிறது என்று சொல்லிய பிறகும், பிரதமர் அலுவலகம் இந்த வழக்குகளைப் பழிவாங்கும் செயல் என்று அறிவித்திருப்பது, பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.க. அரசு எதற்கும் தயாராக இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது" என்று குறிப்பிட்டார்கள்.

பா.ஜ.க. இந்த அளவிற்கு நடந்து கொண்ட போதிலும், ஜெயலலிதா குடியரசுத் தலைவரைச் சந்தித்து பா.ஜ.க. ஆட்சிக்கு அளித்து வந்த தனது ஆதரவைத் திரும்பப் பெற்றார். 15-4-1999 அன்று செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து, பா.ஜ.க. அரசுக்கு ஜெயலலிதா கொடுத்த நிர்ப்பந்தம் பற்றிக் கேட்ட போது அவர்களிடம் நான் ஒரு நீண்ட அறிக்கையினை அளித்தேன். அதில் ஜெயலலிதா எந்தெந்த அதிகாரிகளை எப்படியெல்லாம் மாற்ற வேண்டும், யார் யாருக்கு எந்தெந்தப் பதவி தரப்பட வேண்டும் என்று ஜெயலலிதா தன் கைப்பட எழுதிய பரிந்துரைகளையெல்லாம் தொகுத்துக் கொடுத்திருந்தேன்.

தி.மு.க. மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த போது என்ன செய்தார்கள் என்று கூட்டத்திற்குக் கூட்டம் கேட்கிற ஜெயலலிதா அவர்களே, நாங்கள் உங்களைப் போல இப்படியெல்லாம் மத்திய அரசிடம் கேட்கவில்லை தான்; ஆனால் தமிழ்நாட்டிற்குத் தேவையான சேது சமுத்திரம் திட்டத்தைக் கேட்டுப் பெற்றோம்; தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தந்தோம்; சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தைப் பெற்றோம்; சென்னை மாநகருக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தைக் கொண்டு வந்தோம்; ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைக் கேட்டுப் பெற்றோம்; கடல்சார் தேசியப் பல்கலைக்கழகம் கிடைத்தது; இப்படி எண்ணற்ற திட்டங்களையெல்லாம் பெற்றுத் தந்தோம். இப்போதாவது உண்மை புரிகிறதா? நாங்கள் என்ன செய்தோம்? நீங்கள் எப்படிக் கிழித்தீர்கள்? ஒரு மத்திய ஆட்சியை எந்த அளவிற்கு சித்திரவதை செய்தீர்கள்? கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகிய நாளை, பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்கள் மனம் வெதும்பி, "நிம்மதியோடு இன்றிரவு தூங்குவேன்" என்று கூறினார்

என்றால், அ.தி.மு.க.வுடன் கூட்டணி இருந்த காலம்தான் தனது அரசியல் வாழ்க்கையிலேயே மிகவும் வேதனையான காலம் என்று வர்ணித்தார் என்றால், கூட்டணி, தோழமை, மத்திய அரசில் அங்கம் வகிப்பது பற்றியெல்லாம் பேசுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை, தமிழ்நாட்டு மக்கள் இப்போதாவது ஒருக்கணம் சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+