வாக்குறுதிகளை அளித்துவிட்டு இல்லை என முழுப்பூசணிக்காயை சோற்றிலே மறைக்கும் ஜெ.: கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கேள்வி:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் ஆணையத்திற்கு அளித்த பதிலில் ஏற்காடு தேர்தல் பிரசாரத்தின் போது, தான் எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை, புதிய திட்டங்களை அறிவிக்கவில்லை என்றெல்லாம் தெரிவித்திருக்கிறாரே?
பதில்:- நவம்பர் 28-ந் தேதி, ஏற்காடு தொகுதியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரசாரம் செய்தபோது பேசிய பேச்சு தமிழக நாளேடுகளில் வெளிவந்திருக்கிறது. ஆனால் தற்போது எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை என்று தேர்தல் கமிஷனுக்கு எழுதியிருக்கிறார். தேர்தல் கமிஷனுக்கு முதல்-அமைச்சர் பதவியில் இருப்பவர்கள் உண்மைக்கு மாறான தகவலை கடிதம் மூலமாக தெரிவிப்பதே பெரிய தவறாகும்.
ஏற்காடு தொகுதி மக்களுக்காக என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற இருப்பதாக உறுதி அளித்து பேசிவிட்டு தற்போது வாக்குறுதியே அளிக்கவில்லை என்று ஜெயலலிதா மறுத்திருப்பது "முழுப்பூசணிக்காயை இலைச்சோற்றிலே மறைக்க" முயற்சிக்கின்ற காரியம் மட்டுமல்லாமல்; ஏற்கனவே இந்தியத் தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்தபடி, "தேர்தல் விதிகளை மீறிய குற்றமும்" ஆகும்.
கேள்வி:- தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்யும் நடவடிக்கை எப்போது தான் முடியும்?
பதில்:- எத்தனை வேண்டுகோள்கள், எத்தனை கடிதங்கள், எத்தனை அறிக்கைகள் விடுத்த போதிலும் இந்த கொடுமை நீங்கவில்லை. இது பற்றி பிரான்ஸ் கூட வருந்துகிறது; நம்முடைய மீனவர்களின் நிலைக்காக, தமிழர்களின் நிலைக்காக உலகம் முழுவதும் மனித நேயம் கொண்ட அனைவரும் வருந்துகிறார்கள்;
ஆனால் இத்தகைய நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவித்திட வேண்டிய இந்திய அரசோ, ராஜபக்சேயின் தம்பியை ரகசியமாக அழைத்து கை குலுக்கி உறவாடி உவகையை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறது!
கேள்வி:- அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், ராஜேந்திர பாலாஜி, 8 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கியிருக்கிறார் என்றும் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறதே?
பதில்:- குறிப்பிட்ட இந்த அமைச்சரை பொறுத்தவரை, மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டபோது, தனக்கு 18.88 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் சொத்தும், 19.11 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்தும் இருப்பதாக வேட்பு மனுவிலே தெரிவித்திருக்கிறார்.
அமைச்சரான பிறகு, ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாய்க்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாகவும், அந்த நிலத்தின் உண்மையான மதிப்பு 6 கோடி ரூபாய் என்றும் இதைப்பற்றி ராஜா என்பவர், லஞ்ச ஊழல் போலீசில் புகார் தந்ததாகவும், ஆனால் அங்கே அது விசாரிக்கப்படாததால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாகவும் கூறியிருக்கிறார்.
அமைச்சர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருவதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால், வழக்கு அப்போது முடிக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு திருத்தங்கல் பகுதியில் 2012 டிசம்பர் 11-ந் தேதி 23.35 லட்சம் ரூபாய்க்கு இரண்டு வீட்டுமனையும், இந்த ஆண்டு ஏப்ரல் 20-ந் தேதி 4.23 லட்சம் ரூபாய்க்கு 75 சென்ட் நிலமும் வாங்கியிருக்கிறார்.
இந்த சொத்தின் சந்தை மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம். அமைச்சரான பிறகு எட்டு கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கியிருக்கிறார். இந்த சொத்துக்களை வாங்குவதற்கு அரசிடம் முன் அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு, தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்பியதாகவும், அதற்கு தகவல் அளிக்கவில்லை, எனவே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவிலே கோரியிருக்கிறார்.
இந்த மனுவினை நீதியரசர்கள் சுதாகர், வைத்தியநாதன் ஆகியோர் விசாரித்து, மனுவுக்கு பதில் அளிக்க தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்பு இயக்குநர் மற்றும் பொதுத்துறை செயலாளர் ஆகியோருக்கு "நோட்டீஸ்" அனுப்ப உத்தரவிட்டிருக்கிறார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications