தேய்பிறை தேமுதிகவிலிருந்து வந்து வளர்பிறை அதிமுகவில் அமைச்சரான மாஃபா பாண்டியராஜன்!
சென்னை: தமிழக அமைச்சரவை இன்று திங்கட்கிழமை திடீரென மாற்றி அமைக்கப்பட்டது. புதிய அமைச்சராக மாபா பாண்டியராஜன் எம். எல். ஏ., நியமிக்கப்பட்டு உள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்கட்சி தலைவர் வரிசையில் அமர்ந்தார் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்.

வெற்றி பெற்ற ஓராண்டுக்குள்ளாகவே, தேமுதிக - அதிமுக இடையே பிரச்சினை உருவாகவே, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ சுந்தரராஜன் மற்றும் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின் தொடக்கக் கால உறுப்பினராக இருந்து திட்டக்குடி எம்.எல்.ஏவாக ஆன தமிழழகன் ஆகியோர் கடந்த 2013ம் ஆண்டு சந்தித்தனர்.
தொகுதி பிரச்சினைக்காக முதல்வரை சந்தித்ததாக கூறிய அவர்கள், விஜயகாந்தை விமர்சித்தனர். பின்னர் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்களாக செயல்பட தொடங்கினர். அவர்களது பாணியிலேயே, திருத்தணி அருண் சுப்ரமணியம், பேராவூரணி அருண்பாண்டியன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், சேந்தமங்கலம் சாந்தி, செங்கம் சுரேஷ்குமார், விருதுநகர் மாஃபா பாண்டியராஜன் என்று அடுத்தடுத்து எம்.எல்-ஏக்கள் முதல்வரைச் சந்தித்து அதிமுக ஆதரவாளராக மாறினர்.
இதையடுத்து அதிமுகவிற்கு ஆதரவு எம்.எல்.ஏக்களாக செயல்பட்டு வந்த தேமுதிக எம்.எல்.ஏக்கள் 8 பேரும் ராஜினாமா செய்யவே, எதிர்கட்சித்தலைவர் அந்தஸ்தை இழந்தார் விஜயகாந்த். இதேபோல புதிய தமிழகம் அதிருப்தி எம்.எல்.ஏ. ராமசாமி, பா.ம.க. எம்.எல்.ஏ. கலையரசு ஆகியோரும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.
இதன் பின்னர் இவர்கள் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துகொண்டனர். இதையடுத்து அதிமுக தலைமை இந்த 8 பேரையும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது. ஆனால் மாஃபா பாண்டியராஜனுக்கு மட்டும் அதிமுகவில் லக் அடித்தது. அதற்கு காரணம் பல்வேறு தொழில்நிறுவனங்கள், மனித வளமேம்பாடு பயிற்சி, வேலை வாய்ப்பு முகாம் மூலம் இளைஞ்ரகளுக்கு ஊக்கம் அளித்து வந்தார். மேலும் அறிவுசார்ந்த அரசியல்வாதியாகவும் அறியப்பட்டவர் பாண்டியராஜன்.
இதனிடையே நடந்து முடிந்த 2016 சட்டசபை தேர்தலில் ஆவடி தொகுதியில் அவருக்கு வாய்ப்பு வழங்கினார் ஜெயலலிதா. வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவியேற்ற பாண்டியராஜன், அதிமுக சார்பில் டிவி விவாதங்களில் பங்கெடுத்து வந்தார். அரசின் சாதனைகளை புள்ளி விவரத்துடன் அவர் கூறிவந்தது ஜெயலலிதாவை பெரிதும் கவர்ந்தது.
இந்நிலையில், மாஃபா பாண்டியராஜன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையும் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications