"விலகுவேன்.. ஓடுவேன்".. மீண்டும் சூட்டைக் கிளப்பிய கமல்ஹாசன்!
சென்னை: முன்பு நாட்டை விட்டு போவேன் என்றார். இன்றோ சினிமாவை விட்டு விலகுவேன் என்று கூறியுள்ளார். வேறு யார், நம்ம கமல்ஹாசன்தான்.
ஆ ஊன்னா மிரட்டல் தொணியில் பேசுவது கமல்ஹாசனின் ஸ்டைலாக மாறி வருகிறது. முன்பு அவரது விஸ்வரூபம் படத்திற்கு சிக்கல் வந்தபோது நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறியிருந்தார் கமல்ஹாசன். அப்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தார்.

இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் சினிமாவை விட்டு விலகுவேன் என்று கூறி கலங்கடித்தார். அடுத்த மாதம் 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வருகிறது. இதில் சினிமாத் துறைக்கு 28 சதவீத வரி விதிப்பை போட்டுள்ளனர்.
இதனால் தியேட்டர்களில்தான் முதலில் டிக்கெட் கட்டணத்தில் கை வைப்பார்கள். சும்மாவே திருட்டு விசிடியால் மற்றும் ஆன்லைன் படங்களால் தியேட்டர்கள் காற்று வாங்கிக் கொண்டுள்ளன. இதில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் சுத்தமாக தியேட்டர் பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள் என்ற நிலை.
இந்த நிலையில் தென்னிந்திய வர்த்தக சபை நிர்வாகிகள், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கமல் பேசுகையில், மத்திய அரசு விதித்திருக்கும் ஜி.எஸ்.டி வரியால் திரைப்படத்துறை பெரிதும் பாதிக்கப்படும். சினிமா சூதாட்டம் போன்றது அல்ல; சினிமா என்பது ஒரு கலை. திரைத்துறையை நம்பி ஏராளமானோர் உள்ளனர். சினிமாவை சரியாகவும் தவறாகவும் பயன்படுத்திய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.
ஜி.எஸ்.டி வரியை தேசிய அளவில் வெளியிடப்படும் பாலிவுட் படங்களுக்கு நிகராக மாநில அரசுகளுக்கு விதிக்கக்கூடாது. அதேநேரத்தில், ஹாலிவுட் படத்திற்கு நிகராக இந்திய சினிமாவுக்கு ஜி.எஸ்டி வரிவிதிப்பதும் சரியல்ல. இதனால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது.
பிராந்திய மொழிப் படங்களின் வளர்ச்சியும் பின்தங்கிவிடுகிறது. பிராந்திய மொழி படங்கள்தான் இந்தியாவின் பலம். எனவே, சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் முடிவை கைவிடுவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். டிக்கெட் மீதான ஜி.எஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரியை குறைக்காவிட்டால் நான் சினிமாவை விட்டு விலகுவேன் என்றார் கமல்ஹாசன்.
கமல்ஹாசனின் இந்த எச்சரிக்கைப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஸ்வரூபம் பிரச்சினையின்போது நாட்டை விட்டுப் போவேன் என்றார். இப்போது ஜிஎஸ்டி பிரச்சினையில் சினிமாவை விட்டே போய் விடுவேன் என்கிறார்.












Click it and Unblock the Notifications