Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"திராவிட" கட்சிகளின் முன்னோடி... நீதிக் கட்சியின் நூற்றாண்டு விழா - கருணாநிதி வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திராவிட கட்சிகளின் முன்னோடியான நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத்தின் சார்பில் நீதிக் கட்சியின் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி திராவிடர் கழகம் சிறப்பு மலர் வெளியிடுகிறது.

இந்த மலருக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்து செய்தி:

நீதிக் கட்சியின் நூற்றாண்டு விழாவும், சுயமரியாதை இயக்கத்தின் தொண்ணூறாமாண்டு விழாவும் திராவிடர் கழகத்தின் சார்பில் கொண்டாடவிருப்பதும், அதனையொட்டி சிறப்பிதழ் ஒன்று வெளியிடவிருப்பதும் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்திடும் செய்திகளாகும். இதுபற்றி எண்ணும்போது, என் மனதிலே எத்தனை த்தனையோ நினைவுகள்! தந்தை பெரியார் அவர்களோடும், பேரறிஞர் அண்ணா அவர்களோடும் உடனிருந்து பணியாற்றிய பயனுள்ள நாட்கள் நிழலாடுகின்றன.

Karunanidhi centennial year of the Justice Party

நீதிக் கட்சியின் வரலாற்றினைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், முரசொலி மாறன் எழுதிய "திராவிட இயக்க வரலாறு" - கே.ஜி. இராதாமணாளன் எழுதிய "திராவிட இயக்க வரலாறு" - க. திருநாவுக்கரசு எழுதிய "நீதிக் கட்சி வரலாறு" - டி.வி.வரதராஜுலு நாயுடுவால் தொகுத்து அளிக்கப்பட்டுள்ள 1917; The Justice Movement - 1917; Justice Year Book - 1927 ஆகிய நூல்களையெல்லாம் படித்திட வேண்டும்.

சென்னை மாநகரில் பணியாற்றிய பிற்படுத்தப்பட்டப் பிரிவுகளைச் சார்ந்த சில அரசு அலுவலர்கள், தாங்கள் பணியில் புறக்கணிக்கப்பட்டதையும், பணி உயர்வு போன்ற நியாய மாகக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டதையும் உணர்ந்து, மனம் புழுங்கிக் கலந்துரையாடவும், இணைந்து செயல்படவும், ஒன்றுபட்டு தங்கள் குறைகளை எடுத்துரைக் கவும், உரிமைகளுக்காகப் போராடவும் 1912ஆம் ஆண்டு "மெட்ராஸ் யுனைட்டெட் லீக்" என்ற அமைப்பினை உருவாக்கினர்.

அந்த அமைப்பிற்கு வழிகாட்டியாகவும், துணையாகவும் இருந்தவர்தான் டாக்டர் நடேசனார். அந்த 1912ஆம் ஆண்டினை ஆரம்பப் புள்ளியாக கருத்திலே கொண்டுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2012ஆம் ஆண்டு திராவிட இயக்க 100ஆம் ஆண்டு தொடக்க விழா 27-2-2012 அன்று நடைபெற்றது.

1916ஆம் ஆண்டு, தென்னக வரலாற்றில் ஒரு புது யுகம் பிறந்த ஆண்டாகும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆமைகள் போல அடங்கிக் கிடந்த சமுதாயம், முதல் முறையாக உரிமைக் குரல் கொடுத்தது அந்த ஆண்டிலேதான்! ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை; மாண்டிடும் புழுவே மகுடம் கழற்று! என்று போர்க் குரல் எழுந்தது அந்த ஆண்டிலேதான்!

கண் மூடிக் கொள்கைகளால் கண்ணிருந்தும் குருடர்களாய்க் காலம் எல்லாம் வாழ்ந்தவர்களுக்கு முதல் முறையாகக் கண் திறப்பு ஏற்பட்டது அந்த ஆண்டிலேதான்! மனிதரில் பேதம் செய்த மனுநீதியை மாற்றி, சமுதாய நீதி கேட்டுச் சண்டமாருதம் எழுந்தது அந்த ஆண்டிலேதான்!

அந்த 1916ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 20ஆம் நாளன்று தொடங்கப்பட்ட இயக்கம்தான் நீதிக் கட்சி!

1912இல் மெட்ராஸ் யுனைட்டெட் லீக் ஆக - 1913இல் திராவிடர் சங்கம் ஆக - 1916இல் நீதிக் கட்சி ஆக - 1925இல் சுயமரியாதை இயக்கமாக - 1944இல் திராவிடர் கழகமாக - 1949இல் திராவிட முன்னேற்றக் கழகமாக - பரிணாமம் பெற்றதுதான் திராவிட இயக்கம்.

திராவிட இயக்கம் என்பது - ஆய்வாளர் க. திருநாவுக்கரசு எழுதி இரண்டு தொகுதி களாக வெளிவந்துள்ள "நீதிக்கட்சி வரலாறு" என்ற நூலுக்கான எனது அணிந்துரையிலேயே குறிப்பிட்டிருப்பதைப் போல -

"திராவிட இயக்கம் என்பது, சாமானியர்கள் உயர, சாமானியர்களால் சரித்திரம் படைக்கப்பட்ட - தொடர்ந்து படைக்கப்பட்டு வரும் உயரிய வரலாற்றை கொண்டது. அதனை இன்றைய தமிழக இளைஞர்கள் தெளிவாக அறிந்து உணர்ந்து, திராவிட இயக்கக் கோட்பாடுகளைப் பின்பற்றி அதனைக் கட்டிக் காத்திடும் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்று எழுதினேன்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் மாநிலங்கள வையில் 1962ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பேசும்போது, "......I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidian. That does not mean that I am against a Bengali or a Maharashtrian or a Gujarati. As Robert Burns has stated, "A man is a man for all that". I say that I belong to the Dravidian stock and that is only because I consider that the Dravidians have got something concrete, something distinct, something different to offer to the Nation at large"." என்றார்.

அதாவது "நான் திராவிட மரபு வழிப் பிரிவைச் சேர்ந்தவன். நான் என்னைத் திராவிடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். இதற்குப் பொருள், நான் ஒரு வங்காளிக்கோ, அல்லது மராட்டியனுக்கோ அல்லது குஜராத்திக்கோ எதிரானவன் என்பதல்ல. ராபர்ட் பேர்ன்ஸ் குறிப்பிடுவது போல "என்னவாக இருந்தாலும் மனிதன் மனிதன்தான்". திராவிடர்களிடம் திண்ணியமானதும், தனித்தன்மை பெற்றதும், வித்தியாசமானதுமான ஒன்று நாட்டிற்கு வழங்குவதற்கு இருக்கிறது என்பதுதான் நான் திராவிடன் என்று சொல்லிக் கொள்வதற்கான ஒரே காரணமாகும்" என்றார் அண்ணா.

"ஜஸ்டிஸ்" என்ற தலைப்பில் தொடங்கப்பட்ட ஆங்கில நாளேடு ஆக்கபூர்வமான ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் காரணமாக "தென்னிந்திய நல உரிமைச் சங்கம்" என்கிற கட்சியின் பெயரே ஆங்கிலத்தில் "ஜஸ்டிஸ் கட்சி" என்றும், தமிழில் "நீதிக்கட்சி" என்றும் அழைக்கப்படலாயிற்று.

நீதிக் கட்சி தொடங்கப்பட்ட 1916ஆம் ஆண்டைப் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் 11-8-1957 அன்று மதுரையில் பேசும்போது, "1916இல்தான் தமிழ்நாடு உண்மையிலேயே தன்னை உணரத் தலைப்பட்டது. தான் ஒரு தனி இனம் என்பதையும், தன்னுடைய இனம் தாழ்த் தப்பட்டிருக்கிறது என்பதனையும் உணர்ந்த, அந்த இனம் தாழ்த்தப்பட்டிருந்தாலும் அது மறுபடியும் தளைகளை உடைத்துக் கொண்டு முன்னேற முடியும் என்கிற தன்னம்பிக்கை 1916இலே தான் பிறந்தது" என்று குறிப்பிட்டார்.

1920ஆம் ஆண்டு நவம்பரில் புதிய அரசியல் சீர்திருத்தச் சட்டத்தின்படி சென்னை மாகாணச் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 127க்கு 81 இடங்களில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதுபற்றி சென்னை மாகாணத்தின் நிர்வாக அறிக்கையில்; "இந்திய வரலாற்றில் முதன் முறையாக சென்னை மாகாணத்தின் கீழ்ச்சாதி மக்கள் உயர்சாதி ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து அரசியல் அதிகாரத்தை தமது சொந்தக் கரங்களைப் பயன்படுத்தி பறித்துக் கொண்டார்கள். அண்மையில் நடைபெற்ற அரசியல் சட்டத் திருத்த மாற்றத்தினால் சாதிய உணர்ச்சி அரசியலில் புயலாய் மையம் கொண்டு வெற்றியாய் மலர்ந்தது" என்று குறிப் பிடப்பட்டிருக்கிறது.

நீதிக் கட்சி ஆட்சி யில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கும், தாழ்த்தப்பட்ட பிரிவின ருக்கும் ஏராளமான உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்பட்டன. அந்தச் சாதனைச் சரித்திரத்தின் தொடர்ச்சி யாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி 1967இல் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலும், பின்னர் 1969இல் எனது தலைமையிலும் பொறுப்பேற்று தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் புகழேணியின் உச்சிக்குக் கொண்டு சென்றது.

நீதிக் கட்சியின் நூறாண்டு கால வரலாற்றைத் தொடர்ந்து கூற வேண்டுமேயானால் அதற்கு இந்த வாழ்த்துச் செய்தி போதாது, நூல் தான் எழுத வேண்டும். எனினும் திராவிடர் கழகத்தின் சார்பாக நீதிக் கட்சியின் நூற்றாண்டு விழாவினைச் சிறப்பாக நடத்துவது பாராட்டுவதற்குரிய செயலாகும். திராவிடர் கழகத் தலைவர் இளவல் கி. வீரமணியின் சீரிய முன் முயற்சியினால் நடைபெறும் இந்த நூற்றாண்டு விழா திராவிட இயக்க வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

இந்த நூற்றாண்டு விழாவின் அனைத்து நிகழ்வுகளும் திராவிட இயக்கத் திற்கு மேலும் புகழும் பெருமையும் சேர்த்திடும் வகையிலும், திராவிட இயக்கத்தின் மைய கருத்தோட்டங்களை இன்றைய இளைஞர்களுக்கு கொண்டு சேர்க்கும் முறையிலும், நடைபெறும் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்.

விழாவினையொட்டி வெளிவரும் சிறப்பு மலர் தன்மான - சுயமரியாதை - சீர்திருத்தக் கருத்துகளைத் தாங்கி என்றென்றும் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டிய பெட்டகமாக வெளிவர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+