ஓ, அதற்காகத் தான் அதிமுக அரசு 1,200 பள்ளிகளை மூடுகிறதா?: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் பள்ளிகளும், சுயநிதிப் பள்ளிகளும் அதிக அளவில் ஆதாயம் பெற வேண்டுமென்பதற்காக அ.தி.மு.க. அரசு 1200 பள்ளிகளை இழுத்து மூட முடிவு செய்திருக்கிறதா என்ற முக்கியமான கேள்வி சமூக முன்னேற்றத்தில் ஆர்வம் உடையோர் மத்தியில் எழுந்துள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக அ.தி.மு.க. அரசில் எந்தத் துறையில் குளறுபடிகள், முறைகேடுகள் அதிகம் நடக்கின்றன என்ற ஒரு கேள்வி கேட்டால், எந்தத் துறையும் ஒன்றுக்கு ஒன்று சளைக்காது என்று தான் கூற வேண்டும். குறிப்பாக நிதி நிலை அறிக்கையில் கல்வித் துறைக்குத் தான் அதிகமான தொகை ஒதுக்கப்படுவதாக இந்த அரசினர் பெருமை யாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இந்த ஆண்டு - பள்ளிக் கல்வித் துறைக்கு 20,936.50 கோடி ரூபாயும், உயர் கல்வித் துறைக்கு 3,696.82 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த அளவுக்குத் துறை ஒதுக்கீடு செய்தும் ஆக்கப் பூர்வமான விளைவுகள் அருகிப் போய் விட்டனவே?

பள்ளிகள் மூடல்

பள்ளிகள் மூடல்

1,200 அரசுப் பள்ளிகளை தமிழகம் முழுவதும் மூடுவதென்று தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது என்று செய்தி வெளி வந்துள்ளது. தனியார் பள்ளிகளும், சுயநிதிப் பள்ளிகளும் அதிக அளவில் ஆதாயம் பெற வேண்டுமென்பதற்காக அ.தி.மு.க. அரசு 1200 பள்ளிகளை இழுத்து மூட முடிவு செய்திருக்கிறதா என்ற முக்கியமான கேள்வி சமூக முன்னேற்றத்தில் ஆர்வம் உடையோர் மத்தியில் எழுந்துள்ளது.

ராஜாஜி

ராஜாஜி

1952இல் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் முதலமைச்சராக இருந்த போது குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வருவதற்காக, இப்படித் தான் ஆயிரக் கணக்கான பள்ளிகளை இழுத்து மூடினார். அப்படி மூடப்பட்ட பள்ளிகளையெல்லாம் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக வந்த பிறகு தான் மீண்டும் திறந்தார். அதைப் போல தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் மூடப்பட்ட இந்த 1200 பள்ளிகளும், அடுத்து வரவிருக்கின்ற ஆட்சியிலே தான் மீண்டும் திறக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

குழந்தைகள்

குழந்தைகள்

ஆட்சிக்கு வந்தவுடன் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் அ.தி.மு.க. அரசின் நிதி நிலை அறிக்கையில், பத்தி 80இல், "அ.தி.மு.க. அரசு அனைத்துக் குழந்தைகளையும், தொடக்கப் பள்ளிகளிலும், இடைநிலைப் பள்ளிகளிலும் சேர்த்துத் தரமான கல்வியை வழங்கும். அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து தொடர்ந்து 100 விழுக்காடு மாணவர்களும் தொடக்கக் கல்வி பெறுவதற்கு வழிவகை செய்வதே இந்த அரசின் குறிக்கோளாகும்" என்று உறுதியேற்றுக் கொண்டார்களே, அதற்கும், தற்போது 1200 பள்ளிகளை மூட முடிவு செய்திருப்பதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? தமிழக மக்களுக்குக் கொடுத்த வேறு பல உறுதிமொழிகளை மறந்து விட்டதைப் போல, பள்ளிக் கல்வி தொடர்பாகக் கொடுத்த உறுதி மொழியையும் அ.தி.மு.க. அரசு மறந்தேவிட்டது! இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர், க. மீனாட்சிசுந்தரம் என்னை வந்து சந்தித்து, ஆசிரியர்களின் மனக்குறைகளையெல்லாம் சுட்டிக் காட்டி, தாங்கள் நடத்தவிருக்கும் போராட்டத்திற்கு கழகத்தின் ஆதரவைக் கோரிய போது, ஆசிரியர்களின் நியாயமான இந்தப் போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு என்றும் உண்டு என்று தெரிவித்து அனுப்பினேன்.

தனியார் பள்ளிகள்

தனியார் பள்ளிகள்

தமிழ்நாட்டில் உள்ள ஐந்தாயிரம் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், இரண்டாயிரம் பள்ளிகள் அரசின் அங்கீகாரம் பெறாமலே நடைபெறுவதாக ஏடுகளில் செய்தி வந்தது. அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கதி பிற்காலத்தில் என்னவாகும்? மேல் படிப்புக்கும், பணிக்கும் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதும் தெரியவில்லை. செயல்பட்டு வரும் ஒரு பள்ளிக்கு அருகிலேயே மற்றொரு பள்ளியைத் தொடங்க யாராவது விரும்பினால், ஏற்கனவே நடைபெற்று வரும் பள்ளிகளிடம் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்ற சான்றிதழ் ஒன்றைப் பெற்றிட வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட சான்றிதழ் தற்போது வலியுறுத்தப் படுவதில்லையாம். கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் எந்தவிதமான அங்கீகாரமும் தரத் தயாராக இருக்கிறார்களாம். ஆனால் அதனைக் கொடுக்க முன் வராதவர்கள் தான் அரசின் அங்கீகாரம் இல்லாமலேயே பள்ளிகளை நடத்தி வருகிறார்களாம்.

ஆசிரியர்கள்

ஆசிரியர்கள்

"ஒரு பள்ளியில் ஓராண்டு பணியிலே இருந்தால் அந்த ஆசிரியர் மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்" என்று இதுநாள் வரை இருந்த விதியை மாற்றி, மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் 1-6-2012க்கு முன் பணியில் 3 கல்வி ஆண்டு பணியாற்றிய பின்னே நான்காவது ஆண்டு தான் மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் எனக் கூறும் அரசாணை, அதிகார வர்க்கத்தினர் ஆதாயம் கருதிச் செய்யும் நிர்வாக மாறுதலுக்குத் தான் வழி வகை செய்யும். மேலும் பணி நிரவலே கூடாது என்று ஆசிரியர் சங்கங்கள் அனைத்தும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கடந்த காலங்களில் பள்ளிகளுக்குத் ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்பட்டு வந்த நிலையை மாற்றி இப்போது பணி நிரவல் மூலம் காலி இடங்களை நிரப்புவதற்கான குறுக்கு வழி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ் வழிக் கல்வி

தமிழ் வழிக் கல்வி

அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி என்ற கொள்கைக்குக் குந்தகம் ஏற்படுத்திடும் வகையில், ஆங்கில வழிக் கல்வி முறையைத் துவக்கப் பள்ளிகளில் அ.தி.மு.க. அரசு அறிமுகப்படுத்திய போதிலும், அதற்குத் தேவையான ஆசிரியர்களை நியமிக்கவில்லை. குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை இருப்பதாகக் கூறி, அரசுப் பள்ளிகளை மூட தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சியை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். கல்வி வளர்ச்சியைக் கருத்திலே கொள்வதுடன் 1200 பள்ளிகளை மூடுகின்ற முடிவினை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கை

அதிமுக தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளை, அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று சொன்னார்களே, இதுவரை ஒரு முறையாவது அழைத்துப் பேசியிருக்கிறார்களா? பிளஸ் 1 பாடப் புத்தகத்தில் அதன் முன்னுரையில் எனக்கு நன்றி கூறியிருந்த காரணத்தால், கடந்த ஆண்டுகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த புத்தகத்தை இந்த ஆண்டு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்ட பிறகு திடீரென்று தடை விதித்து, அந்தப் புத்தகத்தையே திரும்பப் பெற்ற ஆட்சி தான் இந்த அ.தி.மு.க. ஆட்சி. கடந்த ஆண்டுகளிலும், என்னுடைய பெயர் எழுதப்பட்டிருந்ததே, அப்போது மாணவர்கள் அந்தப் புத்தகங்களைத் தானே வாங்கிப் படித்தார்கள்; அவர்களை எல்லாம் இப்போது என்ன செய்வது? அந்தப் புத்தகங்களைப் படித்த மாணவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று இந்த ஆட்சியினர் தேடிப் போய், தயவு செய்து அதை மறந்து விடுங்கள் என்று கேட்டுக் கொள்ளப் போகிறார்களா? இந்த ஆண்டு பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நெருங்கி விட்டது. ஆனால் பல்லாயிரம் மாணவர்களுக்கு இன்னும் இலவசப் பாடப் புத்தகங்கள் அரசால் தரப்பட வில்லை. கல்வித் துறை அமைச்சர், தன் துறைக்கான பணிகளை முறையாக ஆற்றுகிறாரோ இல்லையோ, முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டிற்கு முன் "அம்மா" போற்றி விளம்பரங்களை வைப்பதற்கு மட்டும் அக்கறை காட்டத் தவறவில்லை.

அதிமுக அரசு

அதிமுக அரசு

சமச்சீர்க் கல்வித் திட்டத்தின் போது எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள்? நீதி மன்றங்கள் எல்லாம் அதனை எப்படிக் கண்டித்தன? மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களையெல்லாம் திரும்பப் பெற்று வேறு புத்தகங்களைப் புதிதாக அச்சடித்துக் கொடுத்தார்களே, அதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? அந்தத் தொகை மக்களின் வரிப் பணம் அல்லவா? சமச்சீர்ச் கல்விப் புத்தகத்தில் இடம் பெற்ற தி.மு.க. ஆட்சிக் காலத்தைப் பற்றிய கருத்துகள், படங்கள், பாடல்களை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்த கொடுமையும் இந்த ஆட்சியில் நடைபெற்றது. மொத்தத்தில் இந்த நான்காண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், சமச்சீர்க் கல்விக்கு எதிரான நடவடிக்கைகளும், அச்சடித்த பாடப் புத்தகங்களில் "ஸ்டிக்கர்கள்" ஒட்டி மறைப்பதும், விநியோகம் செய்யப்பட்ட பாடப் புத்தகங்களைத் திரும்பப் பெறுவதும் என்று மாணவர்களின் கல்விக் கெதிரான காரியங்களும், ஆசிரியர்கள் நலனை அலட்சியப்படுத்தும் காரியங்களுமே நடைபெற்றிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிக் கல்வி பேரபாயத்தில் சிக்கிப் படும்பாடு, அனைவரையும் பதறச் செய்யக் கூடியதாகும்!.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+