திடீர்னு காங்கிரஸ் ஜெயிக்கப் போகுது பாருங்க.. 'மிரட்டும்' ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்!
ஈரோடு: எங்களுக்கு தோல்வி பயம் என்பது கிடையாது. எத்தனையோ முறை காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடித்திருக்கிறது. எங்களுக்கான வாக்கு வங்கி அப்படியே உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மக்கள் காங்கிரசை ஆதரிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஜெயலலிதாவின் துரோகம்
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தன்னுடைய தேர்தல் பிரசாரத்தில் தமிழக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டது. எனவே அந்த கட்சியை இந்தியாவை விட்டே துரத்த வேண்டும் என்று பேசிவருகிறார்.உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியான கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு லோக்சபா தேர்தலில் சீட் ஒதுக்காமல் துரோகம் செய்தது ஜெயலலிதா தான்.

திமுக உடன் கூட்டணி
கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த தி.மு.க. தற்போது நடைபெற இருக்கின்ற தேர்தலில் எங்களுடன் கூட்டணி வைக்கவில்லை என்பதற்காக கருணாநிதி காங்கிரசுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று நான் கூறமாட்டேன். கூட்டணி வேண்டாம் என்று முடிவெடுத்தது திமுகதான்.

கருணாநிதி வார்த்தை ஜாலம்
மீண்டும் கூட்டணி அமையுமா என்று நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. கருணாநிதி ஒருமுறை மனைவி என்பார் மற்றொரு முறை துணைவி என்பார். அந்த வார்த்தை ஜாலம் எனக்கு வராது. சொல்லப்போனால், திமுகவில் தற்போது கருணாநிதிக்கு எந்தப் பவரும் இல்லை.

அழகிரியை அழைக்கவில்லை
காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூட்டணிக்காக தி.மு.க.விடம் பேசவில்லை. ஆனாலும் துரோகம் இளைப்பதில் கருணாநிதி சளைத்தவர் அல்ல. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் விருப்பம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அதில் இணையலாம். எனவே அழகிரியும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் அதனை வரவேற்போம். ஆனால் நான் அழகிரியை காங்கிரஸ் கட்சியில் இணையும்படி கூறவில்லை.

பரிதாபப்பட வேண்டாம்
காங்கிரஸ் கட்சி வேறு வழியில்லாமல் தனித்து போட்டியிட தள்ளப்பட்டிருக்கிறது என்று யாரும் பரிதாப்பட வேண்டாம். அவர்களைப் பார்த்து நான் பரிதாப்படுகிறேன்.

காங்கிரஸ் கட்சியின் பலம்
எத்தனையோ முறை காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடித்திருக்கிறது. எங்களுக்கான வாக்கு வங்கி அப்படியே உள்ளது. தனித்துப் போட்டியிடும் போதுதான் எங்களின் பலம் தெரியவரும்.

தேமுதிக உடன் பேச்சு
எந்த கட்சியும் கூட்டணிக்கு வராத என்று காங்கிரஸ் ஏங்கியதில்லை. தேமுதிக உடன் நட்பு ரீதியில் பேசினோம். அது ஒத்து வரவில்லை, அதனால் எங்களுக்கு வருத்தமும் இல்லை. அரசியலில் இப்படி நடப்பது சகஜம்தானே?.

ஜி.கே. வாசனுக்கு வாழ்த்து
தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாட்டில் காங்கிரசின் மிகவும் முக்கியமான தலைவர் ஜி.கே.வாசன். எனவே அவர் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் சென்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வேண்டி உள்ளது. எனவேதான் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று முடிவு செய்து அறிவித்தார். இந்த முடிவு எடுத்ததற்காக ஜி.கே.வாசனுக்கு என்னுடைய பாராட்டுகள்.

தோல்வி பயமில்லை
தமிழகத்தில் எந்த கட்சியும் எங்களுக்கு எந்த ஆதரவும் கொடுக்கவில்லை. அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
நான் திருப்பூரில் போட்டியிட மனு கொடுத்துள்ளேன். எங்கள் கட்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் சீட் கேட்டு மனு கொடுத்துள்ளனர். அதே சமயம் தங்கபாலு, ஜெயந்தி நடராஜன் ஆகியோர் போட்டியி தயங்குகிறார்கள் என்று கூறுவது பற்றி எனக்குத் தெரியாது.

மக்கள் ஆதரவு இருக்கு
ஆனால் வருகின்ற லோக்சபா தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத அளவில் தமிழக மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்பிக்கையோடு கூறியுள்ளார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்












Click it and Unblock the Notifications