சண்முகநாதன்கள் இருக்கும் வரை திமுகவை அழிக்க முடியாது- கருணாநிதி
சென்னை: என்னுடைய செயலாளர் கோ.சண்முகநாதன் போன்ற தூண்கள் இருக்கின்ற வரையில் இந்த இயக்கத்தை, இந்த இயக்கத்தினுடைய எழுத்துக்களை, அந்த எழுத்துக்களால் விளைகின்ற எண்ணங்களை, அந்த எண்ணங்களால் பூக்கின்ற மலர்களை யாரும் அழித்துவிட முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று சென்னையில் நடந்த தனது செயலாளர் சண்முகநாதன் இல்ல மண விழாவில் கலந்து கொண்டு தலைமை தாங்கி திருமணத்தையும் நடத்தி வைத்தார்.
இந்தத் திருமண விழாவில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
திருமண விழாவில் கருணாநிதி ஆற்றிய தலைமையுரை...

குட்டி பி.ஏ.
நம்முடைய தம்பி, ‘குட்டி பி.ஏ.' என்று உங்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற சண்முகநாதன் இல்லத்தில் நடைபெற்றுள்ள இனிய மணவிழா நிகழ்ச்சியையொட்டி நடைபெறுகின்ற இந்தப் பாராட்டு விழா நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டு என்று சொல்வதை விட, நான்தான் கலந்து கொள்ள வேண்டும் என்ற அந்த உரிமையோடு கலந்து கொண்டிருப்பதிலே மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகின்றேன்.

தம்பி மகன் விக்ரம்
திண்டிவனம் முரளி - மலர்விழி ஆகியோருடைய அன்பு மகள் செல்வி நிஷாந்திக்கும் - என்னுடைய தம்பி சண்முகநாதனுடைய இளவல் ராமதாஸ் - அமுதா ஆகியோருடைய அன்பு மகன் செல்வன் விக்ரமிற்கும் இனிய மணவிழா நிகழ்ச்சி நடைபெற்று நம்முடைய வாழ்த்துகளெல்லாம் வழங்கப்பட்டுள்ளது.

அகத்திலே இருந்து பணியாற்றுபவர்
சண்முகநாதனைப் பொறுத்தவரையில், அவர் என்னுடைய அலுவலகத்திலே வேலை பார்ப்பவர் என்பதை விட, என்னுடைய அகத்திலே இருந்து பணியாற்றிடுபவர் என்று சொல்வதுதான் பொருத்தமே ஆகும்.

கருணாநிதியின் அகம்
‘அகம்' என்பதற்கு நீங்கள் கொள்ள வேண்டிய பொருள், உள்ளம் என்பது மாத்திரமல்ல, ‘அகம்' என்பதற்கு நீங்கள் கொள்ள வேண்டிய பொருள், அது கருணாநிதியினுடைய உள்ளம் என்ற பொருளைக் கொள்வீர்களேயானால்தான், நான் சொன்னது சரிதான் என்று புலனாகும்.

குட்டி பத்மினி மாதிரி அல்ல…
வேடிக்கையாக அல்ல, ‘குட்டி பி.ஏ.' என்று அவரை அழைத்தார்கள் என்றால், என்ன குட்டி பத்மினி மாதிரி, ‘குட்டி பி.ஏ.' என்கிறார்களே என்று யாரும் கருதக்கூடாது. இங்கே நண்பர்கள் அளித்த விளக்கத்தைப் போல், அவர் என்னிடத்திலே வந்து பணியாற்றிய பி.ஏ.க்களில் மிக இளையவராக, மிகச் சிறியவராக, சிறிய உடல் படைத்தவராக விளங்கிய காரணத்தால், அடையாளம் தெரிந்து கொள்வதற்காக ‘குட்டி பி.ஏ.' என்று அழைத்தார்கள்.

குட்டி.. கெட்டி
அந்த ‘குட்டி பி.ஏ.' இன்றைக்கு தமிழகத்திலே உள்ள எல்லா பி.ஏ.க்களையும் விட, இவர்தான் ‘கெட்டி பி.ஏ.' என்று சொல்கின்ற அளவுக்கு அவ்வளவு திறமையானவராக விளங்குகின்றார்.

எப்படி அறிமுகமானார்
அவரைப் பொறுத்தவரையில், அவர் எப்படி எனக்கு அறிமுகமானார் என்பதை உங்களுக்குச் சொல்லியாகவேண்டும். தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி தொடங்குவதற்கான சூழல் உருவாகி, அண்ணா அவர்களுடைய தலைமையிலே அந்த ஆட்சி அமையப் போகிறது என்ற நேரத்தில், அண்ணா அவர்கள் அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுகிறார்கள் என்று குறிப்பிட்டபோது, அவர்களிலே என்னையும் ஒருவராகத் தேர்வு செய்து, எனக்கு யாரை பி.ஏ.வாக வைத்துக்கொள்வது என்று கேட்டபோது, நான் யோசித்துப் பார்த்தேன்.

சண்முகநாதன் உருவம்
அப்போது என்னுடைய கண்களுக்கு, மனத்திற்குத் தென்பட்ட ஒரு உருவம், சண்முகநாதனுடைய உருவம். எப்படி திடீரென்று சண்முகநாதனுடைய உருவம் என் நினைவிற்கு வந்தது, என் கண்ணுக்குத் தென்பட்டது என்பதை விளக்க வேண்டும்.

அனுப்பப்பட்ட பேச்சுப்படி
அப்பொழுதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பேச்சுக்களை, செய்திகளை, என்னைப் போன்றவர்கள், பேராசிரியரைப் போன்றவர்கள் ஆற்றுகின்ற பொதுக்கூட்ட உரைகளை உடனுக்குடன் படியெடுத்து காவல்துறை மூலமாக அனுப்புகின்ற ஒரு பணி துப்பறியும் இலாக்காவினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்த நேரத்திலே அதுபோல அனுப்பப்பட்ட ஒரு பேச்சுப்படியை நான் பார்க்க நேரிட்டது.

எல்லாப் பேச்சும்.. அப்படியே
அது என்னுடைய பேச்சு, என்னைச் சார்ந்த கழகத் தோழர்களுடைய பேச்சு, அந்தப் பேச்சை வைத்துக்கொண்டு எங்கள் மீது போலீசாரால் வழக்கெல்லாம் கூட போடப்பட்டது. அப்படிப் போடப்பட்ட அந்த வழக்கு நடைபெற்றபோது, என்ன தவறாகப் பேசிவிட்டோம் என்று வாங்கிப் பார்க்கலாம் என்று அந்தத் தாள்களை வாங்கிப் பார்த்தால், என் பேச்சு, நம்முடைய பேராசியருடைய பேச்சு, மற்றுமுள்ள நம்முடைய கழக நண்பர்களுடைய பேச்சுக்களெல்லாம் அந்தத் தாளிலே பதிவாகியிருந்தது. எப்படி இது பதிவாயிற்று என்றால், சுருக்கெழுத்தாளர் மூலமாக பேச்சுக்கள் எடுக்கப்பட்டு அந்தப் பேச்சுக்கள் பதிவாகியிருக்கின்றன என்ற தகவல் எனக்குக் கிடைத்தது.

ஒரு எழுத்துக் கூட மாறாமல்
அந்தப் பேச்சுக்களை நான் சரி பார்த்தபோது, உண்மையிலேயே நான் பேசியதுதான், நாங்கள் பேசியதுதான் பதிவாகியிருந்தது. ஒரு எழுத்துக்கூடத் தவறாமல் அத்தனை எழுத்துக்களும் அந்தப் பேச்சுக்களிலே பதிவாகி, அது வழக்கிற்கு வந்தது. வழக்கிற்கு வந்து எங்கள் மீது போலீசாரால் புகார் தரப்பட்ட போது, ‘‘நீங்கள் இப்படிப் பேசியது உண்டா?'' என்று நீதிமன்றத்தில் கேள்விகள் கேட்ட நேரத்தில், ‘‘மனச்சாட்சிப்படி உண்மைதான், நாங்கள் பேசியது'' என்று சொல்ல நேரிட்டது.

அச்சு பிசறாமல்
அந்தப் பேச்சுக்களையெல்லாம் வைத்துக்கொண்டு, நீதிபதி தன்னுடைய தீர்ப்பை அளித்தார். பிரமாதமாக ஒன்றும் எங்களைத் தண்டித்தோ அல்லது நாங்கள் பேசியது தவறு என்று குறிப்பிட்டோ நீதிமன்றத்தில் எதுவும் சொல்லவில்லை. நான் அந்தப் பேச்சுப்படிகளை பிறகு வாங்கிப் படித்துப் பார்த்தபோது, அச்சாக, சிறிதுகூட தவறாமல் நாங்கள் பேசியது பதிவாகி இருந்ததைக் கண்ணுற்றேன்.

யார் .. யார்… யார்
நான் பிறகு, ‘‘யார் இவ்வளவு சரியாக நாங்கள் பேசியதை, நான் பேசியதை, அறிஞர் அண்ணா பேசியதை, பேராசிரியர் பேசியதை, மற்றுமுள்ள கழக நண்பர்கள் மனோகரனைப் போன்றவர்கள் பேசியதை இப்படி அச்சு அசலாகப் படியெடுத்திருப்பார்கள்?'' என்று கேட்டபோது, போலீசாருக்கு அதைப் படி எடுத்துக் கொடுத்தவர்களே நம்முடைய சண்முகநாதனைப் போன்றவர்கள்தான். இவர்களெல்லாம் அப்பொழுது போலீசில் வேலை பார்த்தார்கள்.

போலீஸ் ஆட்கள்
போலீஸ் துறையிலே அவர்களுக்கு குறிப்புகள் எடுத்துத் தருகின்ற சுருக்கெழுத்தாளர்களாகப் பணியாற்றினார்கள். அதன் பிறகு ஆட்சி மாறியதும் என்னை, ‘‘நீங்கள் யாரை சுருக்கெழுத்தாளராக வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்?'' என்று கேட்டபோது, ‘‘இந்தப் பையனை நான் வைத்துக்கொள்கிறேன்'' என்று சொன்னேன்.

அந்தப் பையன்தான் வேண்டும்
யார் அந்தப் பையன்? நான் பேசியதை அப்பழுக்கில்லாமல் அப்படியே படி எடுத்து போலீசாருடைய அந்தத் துறைக்கு அனுப்புகிற, பேச்சுக்களை எடுப்பதிலே படு சுட்டி, பேச்சுக்களை எடுப்பதிலே மிகத் திறமைசாலி என்று பெயரை வாங்கியவர் இந்த சண்முகநாதன் என்பதை அப்போதுதான் தெரிந்துகொண்டேன்.

அந்தப் பையன்தான் இந்த சண்முகநாதன்
நான் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பணியாற்றிய அந்த நேரத்திலே எனக்குப் பயன்படக்கூடிய சுருக்கெழுத்தாளராக இந்தப் பையன்தான் வேண்டும் என்று சொன்னேன், அந்தப் பையனை அனுப்பினார்கள், அந்தப் பையன்தான் இந்த சண்முகநாதன் என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

உறவினர் வீட்டுப் பிள்ளை
அப்படி என்னை வந்து சேர்ந்த சண்முகநாதன், எனக்கு ஒரு வகையிலே நீண்ட காலத்திற்கு முன்பே உறவினராக இருந்தவருடைய வீட்டுப் பிள்ளை என்பதும் அபபோதுதான் எனக்குத் தெரிந்தது. அவர் கோதண்டபாணி என்ற என்னுடைய உறவினருடைய மகன். கோ.சண்முகநாதன். அந்த சண்முகநாதனை நான் என்னுடைய பேச்சை படி எடுக்கின்ற உதவியாளராக, மன்னிக்கவும், உதவியாளர்களிலே ஒருவராக நியமித்துக்கொண்டபோது, இந்த அளவிற்கு அவர் வளர்வார், இந்த அளவிற்கு அவர் விளம்பரமாக ஆவார், பலருடைய மதிப்பைப் பெறுவார் என்று நான் கருதவில்லை.

யாரோ ஒரு பையன்
யாரோ ஒரு பையன், சின்னப் பையன், அவன் நமக்கு இன்றைக்கு உதவியாளராகக் கிடைத்திருக்கிறான் என்றுதான் எண்ணினேன். ஆனால் சண்முகநாதனுடைய வளர்ச்சி என்னை, என்னைப் போன்ற கழகத் தோழர்களை, கழகத் தலைவர்களையெல்லாம் வளரச் செய்கின்ற அளவிற்கு அந்த வளர்ச்சி இருந்தது என்று சொன்னால், அது மிகையாகாது.

ஆல் போல் தழைத்து.. அருகு போல் வேரோடி
‘‘ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி'' என்பார்களே அதைப் போல, தம்பி சண்முகநாதன் ஒரு சாதாரண எழுத்தாளராக, ‘குட்டி பி.ஏ.' என்று செல்லமாக அழைக்கக்கூடிய ஒரு செயலாளர்களிலே ஒருவராக வந்து என்னிடத்திலே சேர்ந்தவர், இன்றைக்கு என்னிலே ஒரு அங்கமாகவே மாறிவிட்டார் என்று சொன்னால், அதை யாரும் மறுக்க இயலாது.

பற்றுள்ள சண்முகநாதன்
அப்படிப்பட்ட சண்முகநாதனால், அவர் ஆற்றுகின்ற பணிகளால் திராவிட முன்னேற்றக் கழகத்தை, ஆட்சிப் பொறுப்பிலே அது இல்லா விட்டாலும் எங்களால் வளர்க்க முடிகிறது என்றால், அதற்கு சண்முகநாதனைப் போன்ற சிலர் இன்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகப் பற்றுள்ளவர்களாக இருப்பதுதான் என்பதை எடுத்துக்காட்ட நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.

சம்பளத்திற்காக வந்தவரல்ல
சம்பளத்திற்காக வருவது வேறு, அந்த வேலை முடிந்ததும் விடைபெற்றுச் செல்வது வேறு. இவர்கள் சம்பளத்திற்காக வந்தவர்களும் அல்ல, சம்பளம் பெறுவதற்காக எங்களோடு இருப்பவர்களும் அல்ல. இன்றைக்கும் சொல்லுகின்றேன், சண்முகநாதன் இப்போது பி.ஏ. அல்ல, குட்டி பி.ஏ. அல்ல, அவர் என்னுடைய செயலாளர் அல்ல, என்னுடைய எழுத்துக்களை படி எடுப்பவர் அல்ல, என்னுடைய பேச்சுக்களை படி எடுப்பவர் அல்ல.

இயக்கத்தோடு கலந்து விட்டவர்
இல்லாவிட்டாலும் அவர் என்னோடு இருக்கிறார் என்றால், அவர் இந்த இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக்கொள்கின்ற அளவிற்கு என்னோடு கலந்துவிட்டவர், என்னோடு இணைந்து விட்டவர் என்பதாலேதான் இன்றைக்கும் என்னோடு இருக்கின்றார்.

என்னடிடம் உள்ள தம்பிமார்கள்
அவரைப் போன்ற நண்பர்கள் ஒரு சிலர், அவருக்கு இணையாக திராவிட முன்னேற்றக் கழகத்திலே தொடர்ந்து வளர்ந்து, என்னிடத்திலே பணியாற்றுகின்ற ராஜமாணிக்கம் போன்ற தம்பிமார்களும் என்னிடத்திலே இருக்கின்றார்கள்.

சண்முகநாதனை விட்டால் ஆள் இல்லை
ஆனால் இரவு பகல் கண் விழித்து, கண்கள் சிவக்கச் சிவக்க இரவெல்லாம் எழுதி, நான் தூங்கினாலும் தான் தூங்காமல், நான் ஒரு ஊரில் என்ன பேசினேனோ, அந்தப் பேச்சு முழுவதையும் படி எடுத்து, அதை மறுநாள் ‘முரசொலி' பத்திரிகைக்கும் மற்றும் வேறு நாளேடுகளுக்கும் அனுப்புகின்ற அந்தப் பணியைச் செய்வதற்கு சண்முகநாதனை விட்டால், எனக்கு வேறு ஆள் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக என்னால் சொல்லிக்கொள்ள முடியும்.

ஆற்றலும் ஆர்வமும்
அப்படிப்பட்ட அருமைத் தம்பி இரவெல்லாம் கண்விழித்து, நான் தூங்கினாலும் எழுப்பாமல், தூங்கட்டும் என்று எனக்கு ஓய்வு கொடுத்து, நான் ஒரு ஊரிலே ஒரு மணி நேரம் பேசியதை, இரவோடு இரவாக படி எடுத்து எழுதி அதை அச்சுக்கோத்து, அதற்குப் பிறகு அதைப் படிப்பதற்கு ஏற்ற வகையிலே டைப் செய்து, அதை மறு நாள், நாங்கள் கோயம்புத்தூரில் இருந்தாலும், மறுநாள் சென்னையிலே உள்ளவர்கள் படிக்கின்ற அளவிற்கு அதை செய்தியாக, கட்டுரையாக தரக்கூடிய அந்த ஆற்றலும், ஆர்வமும் சண்முகநாதனுக்கு மாத்திரம்தான் உண்டு.

மகிழ்ச்சி - பெருமை
என்னைப் போலவே இங்கே கூடியிருக்கின்ற கழகத் தோழர்களெல்லாம் சண்முகநாதனுடைய சுற்றத்தார் என்ற அளவிற்கு, சண்முகநாதனுடைய உற்றார் உறவினர் என்ற அளவிற்கு அந்த பாத்தியதையோடு, அந்தப் பரிவோடு குழுமியிருக்கின்றீர்கள். உங்கள் அத்தனைபேருடைய இனிய வாழ்த்துக்களும் மணமக்களுக்கு கிடைப்பதைப் பார்க்கும் போது நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன், பெருமையடைகின்றேன்.

எத்தனை புயலடித்தாலும்.. எவ்வளவு அடிகள் விழுந்தாலும்
சண்முகநாதனைப் போன்ற சிலர் அலுவலர்களாக, காரியமாற்றுகின்ற காரியஸ்தர்களாக இந்தக் கழகத்திலே இருக்கின்ற காரணத்தால்தான், எவ்வளவுதான் அடிகள் விழுந்தாலும், எவ்வளவு பெரிய புயலடித்தாலும், அதையெல்லாம் தாங்கிக்கொள்ளக்கூடிய, சுழன்று சமாளிக்கக்கூடிய அந்த பலத்தை நாங்கள் பெற்றிருக்கின்றோம் என்றால், அதற்கு இந்தத் தூண்கள்தான் காரணம் அதிலே ஒரு தூண்தான் சண்முகநாதன் என்ற தூண்.

யாரும் அழிக்க முடியாது
இந்தத் தூண்கள் இருக்கின்ற வரையில் இந்த இயக்கத்தை, இந்த இயக்கத்தினுடைய எழுத்துக்களை, அந்த எழுத்துக்களால் விளைகின்ற எண்ணங்களை, அந்த எண்ணங்களால் பூக்கின்ற மலர்களை யாரும் அழித்துவிட முடியாது என்ற அந்த நம்பிக்கையைத் தெரிவித்து, அவர்களுடைய இல்லத்திலே இன்றைக்கு மணமக்களாக வீற்றிருக்கின்ற சண்முகநாதனுடைய இளவல் இராமதாசின் அன்பு மகன் விக்ரமும், திண்டிவனம் முரளி - மலர்விழி ஆகியோரது அருமை மகள் நிஷாந்தியும் வாழ்க! வாழ்க!! என்று வாழ்த்துகின்றேன். ‘

தமிழுக்கு ஏற்றமும்.. வெற்றியும்
வாழ்த்தும்பொழுதே எனக்குள்ள உரிமையில், நான் சொன்னால் சண்முகநாதன் கேட்டுக்கொள்வான் என்ற அந்த எண்ணத்தோடு ஒரு கருத்தினைத் தெரிவிக்க விரும்புகிறேன். நான் நடத்தி முடித்தது தமிழ்த் திருமணம், இந்தத் தமிழ்த் திருமணத்திலே மணமக்களுடைய பெயர்கள் என்று உச்சரிக்கப்பட்டிருப்பவை, விக்ரம் - நிஷாந்தி என்பவைகளாகும். முடிந்தவரையில் தமிழுக்கு ஏற்றமும், வெற்றியும் தரக்கூடிய அளவிற்கு நாம் நடந்துகொள்ள வேண்டும். இப்போது நாம் விட்டுவிட்டால் தமிழைக் காப்பாற்ற, தமிழுக்கு நேரும் ஆபத்துக்களை தடுத்து நிறுத்த யாருமே இருக்க மாட்டார்கள்.

தமிழ் இருக்குமா என்ற கேள்வி…
எதிர் காலதிலே தமிழ் இருக்குமா என்ற கேள்வியோடு இன்றைக்கும் நாம் இருக்கின்றோம். ஏனென்றால் அப்படிப்பட்ட புயல் இந்தியாவிலே வீசி, அது தென்னகத்திலே தவழ்ந்து, தமிழகத்திலும் அது புயலாக மாறியிருக்கிறது, அந்தப் புயலைத் தடுத்து நிறுத்த சண்முகநாதனுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன்.

தமிழில் மாற்றுங்கள்
‘விக்ரம்' என்கின்ற மணமகனுயை பெயரையும், ‘நிஷாந்தி' என்கின்ற மணமகளுடைய பெயரையும் கூடுமான வரையிலே தமிழ்ப் பெயர்களாக மாற்றி தமிழுக்குப் பெருமை தேடித்தாருங்கள் என்று கேட்டு - என்னையே அவர்கள் இருவருக்கும் இங்கேயே பெயர் வைக்குமாறு சண்முகநாதன் கூறுகிறார்.

வீட்டுக்குப் போய்ச் சொல்கிறேன்
நல்ல பெயர்களாகச் சிந்திப்பதற்கு எனக்கு சிறிது நேரம் வேண்டும், ஆகவே அந்தப் பெயர்களை நான் வீட்டுக்குப் போன பிறகு நிச்சயமாகச் சொல்லுவேன். மணமக்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ்க! வாழ்க! என்று வாழ்த்துகிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications