அவதூறு வழக்குகளையும் ஆயுதங்களாக்கிக் கொண்டிருக்கும் கருணாநிதி!
-ஆர்.மணி
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி தம் மீதான அவதூறு வழக்குகளையும் அரசியல் ஆயுதங்களாக்கிப் போரிட்டுக் கொண்டிருக்கிறார்.
இன்று காலையில் சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் கருணாநிதி நேரில் ஆஜரானார். இரண்டு மாதங்களுக்கு முன்பு ‘ஆனந்த விகடன்' வார இதழில் ‘என்ன செய்து விட்டார் ஜெயலலிதா' என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வெளியாகியிருந்தது. கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் ஜெயலலிதா உருப்படியாக எதையும் செய்யவில்லை என்று புள்ளி விவரங்களுடனும், மறுக்க முடியாத ஆதாரங்களுடனும் விவரித்திருந்தது அந்தக் கட்டுரை.

ஜெயலலிதா வை விமர்சனம் செய்ய பெரும்பாலான தமிழகத்தின் அச்சு ஊடங்களும், இந்த பூமியில் சூரியனுக்கு கீழே நடக்கும் எல்லா விஷயங்களையும் விலா வாரியாகப் பிரிந்து மேயும் தேசிய ஆங்கில நாளிதழ்களும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கையில், ஜெயலலிதாவின் நான்கரை ஆண்டுகால ஆட்சியை மட்டைக்கு இரண்டு கீற்றுகளாக கிழித்தெறிந்திருந்தது அந்தக் கட்டுரை.
இதன் ஒரு பகுதியை திமுக வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி மறுபிரசும் செய்திருந்தது. இந்தக் கட்டுரைக்காக வழக்கம் போலவே ‘ஆனந்த விகடன்' மீது அவதூறு வழக்கினை தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, அதனை மறுபிரசுரம் செய்த ‘முரசொலி' மீதும், கருணாநிதி மீதும் சேர்த்து வழக்குப் போட்டு விட்டார். இந்த வழக்கில்தான் இன்று கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சென்னை உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் அமைந்திருக்கும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கருணாநிதி வந்தததால் அந்த வளாகமே இன்று சுமார் ஒரு மணி நேரம் அமளிக்காடானது. சென்னை உயர் நீதிமன்றம் மத்திய தொழிற் படை பாதுகாப்பின் கீழ் உள்ளது. ஆனால் முதன்மை அமர்வு நீதிமன்ற வளாகம் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. காலை 10.30 மணிக்கு நீதிமன்றம் கூடியவுடன் முதலில் ஜாமீன் வழக்குகளும் பின்னர் முன் ஜாமீன் வழக்குகளும்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதன் பின்னரே வழக்கமாக அவதூறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

ஆனால் கருணாநிதி வழக்கு இன்று முதல் வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரனைக்கு எடுத்துக் கொண்ட இரண்டு நிமிடங்களிலேயே வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் 10 ம் தேதிக்கு ஒத்தி வைத்ததாகக் கூறினார் நீதிபதி ஆதிநாதன்.
பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி பத்திரிகைகள் மீது தொடர்ந்திருக்கும் அவதூறு வழக்குகள் அனைத்தையும் ஜெயலலிதா திரும்பப் பெற வேண்டும் என்று கூறினார்.
கருணாநிதியுடன், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினும், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் உடன் வந்திருந்தனர். தமிழக அரசு கருணாநிதி மீது தொடர்ந்திருக்கும் 13 அவதூறு வழக்குகள் இதே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ஸ்டாலின் மீது இதை விட அதிகமான எண்ணிக்கையில் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் எல்லாமே கிட்டத்தட்ட மூன்றாண்டு காலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக போடப் பட்டவை. இதுவரையில் ஒரு வழக்கு விசாரணையில் கூட அப்பாவும், மகனும் ஆஜரானது கிடையாது. திடீரென்று இன்று கருணாநிதி நேரில் ஆஜனாரானார்.
இதற்கு தேர்தல்கள் வெகு அருகில் வந்தது ஒரு காரணம் என்றாலும் மற்றோர் காரணம் - இதுதான் முக்கியமான காரணமாக பார்க்கப் படுகிறது - திமுக தன்னுடைய கட்டுப்பாட்டில்தான் இன்னமும் இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிறுவுவதும், அதன் மூலம் துவண்டு போய் கிடக்கும் தொண்டனை தட்டி எழுப்புவதும்தான். ஆம் ... கடந்த ஒரு வருட காலமாக ஸ்டாலினின் கை திமுகவுக்குள் வலுப்பெற்று வரும் நிலையில், இதன் காரணமாக கட்சிக்குள் ஒரு தரப்புக்கு ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலை களைவது இதன் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.
‘மூன்று நிகழ்வுகளை நீங்கள் உற்றுப் பார்க்க வேண்டும். இதில் இரண்டு நிகழ்ந்து விட்டவை. மூன்றாவது இனி மேல் நிகழவிருப்பது. சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகர மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் ஜெ அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து திமுக நடத்திய ஆர்பாட்டத்தில் கருணாநிதியே தலைமை தாங்கினார். இந்த ஆர்பாட்டத்தில் முழுக்க, முழுக்க கருணாநிதியின் படம்தான் இருந்தது. எங்கும் ஸ்டாலின் படம் இல்லை. தற்போது நீதிமன்றத்திற்கும் வந்து விட்டார் கருணாநிதி. வரும் 21 ம் தேதி கூடவிருக்கும் சட்ட மன்றத்துக்கும் வரவிருக்கிறார் கருணாநிதி. இது எல்லாமே திமுக தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை அவர் நிலைநாட்டிக் கொண்டிருப்பதன் வெளிப்பாடுதான்' என்று கூறுகிறார் வட மாவட்டத்தைச் சேர்ந்த, எப்போதும் கருணாநிதியுடன் இருக்கும் திமுக மூத்த தலைவர் ஒருவர்.
திமுக வுடன் கூட்டணியில் சேர வாய்ப்புள்ளதாக கருதப்படும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கும் இது முக்கியமானதோர் சமிக்ஞையாகப் பார்க்கப்படுகின்றது.
அவதூறு வழக்கில் நீதிமன்றத்திற்கு வந்ததன் மூலம் ஜெ வுக்கு எதிரான அரசியல் போரை தெருவுக்கு கொண்டு வந்து விட்டார் திமுக தலைவர் என்பது உண்மையானதுதான். ஆனால் அதை விட முக்கியம் திமுக வின் உண்மையான அதிகார மையம் தான் மட்டுமே என்பதை நிருபித்திருப்பதும்தான்.
திங்கட்கிழமை காலையில் வந்த ‘முரசொலியில்' வந்த மற்றோர் செய்தி முக்கியமானது. அது திமுக தலைமைக் கழகம் விடுத்திருக்கும் செய்தி. திமுக வினர் பேனர்கள், ஃபிளக்ஸூகள் போன்றவற்றை பொது மக்களுக்கு இடையூறாக வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறும் அறிக்கை, போஸ்டர்களில் திமுக தலைவர், பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் பொருளாளர் ஸ்டாலின் படங்களைத் தவிர வேறெதையும் வைக்கக் கூடாதென்றும் தெரிவிக்கின்றது.
சமீபத்தில் கனிமொழி பிறந்த நாள் கொண்டாட்டங்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டதன் பின்னணியிலும், பல ஊர்களில் கனிமொழியின் ஆதரவாளர்கள் அவரது படத்தைப் போட்டு பொதுக் கூட்டங்களை நடத்துவதனையும் களைந்தெறியும் நோக்கத்துடன் செய்யப் பட்டதுதான் இந்த அறிக்கை என்றும் திமுக வில் விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

எல்லா கட்சிகளிலும் கோஷ்டிகள் தனித்தனியாக இருக்கும். ஆனால் எல்லா கோஷ்டிகளையும் தன் குடும்பத்திற்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பதுதான் கருணாநிதியின் திறமை. இது ஜனநாயகமா என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. சந்தேகம் வேண்டாம். இன்றைய திமுக வின் நிலைமை இதுதான். ஆனால் 91 வயதிலும் குடும்பத்திற்குள் இருக்கும் எல்லா கோஷ்டிகளையும் சமாளித்து, நீதி மன்றத்தின் நெடிய படிக்கட்டுகளிலும் ஏறிக் கொண்டிருக்கும் கருணாநிதி, அசைக்க முடியாத சக்தியாக இன்று தமிழக அரசியலை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் சர்வ வல்லமை கொண்ட ஜெயலலிதா வுக்கு மட்டுமல்ல, நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களாக இருக்கும், வெற்றுக் கூச்சலில் ஊளை உதார் விட்டுக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கும் கூட சவால்தான்.
குடும்ப அரசியல் இன்று திமுக வின் பிரிக்க முடியாத ஓரங்கமாக மாறி விட்ட சூழ்நிலையிலும் கூட திமுக தலைவர் தமிழக அரசியலை தன்னைச் சுற்றியே வட்டமிட வைத்துக் கொண்டிப்பது நிச்சயம் பேராச்சரியம் அளிக்க கூடிய, சுவாரஸ்யமான யதார்த்தம். இது தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலுக்கும், ஜனநாயக பண்புகள் வளரவும் வழி வகுக்குமா என்று யாராவது கேட்டால், அதற்கு பதில் வேறாகத்தான் இருக்க முடியும்!












Click it and Unblock the Notifications