என்னைவிட வயதானவர்கள் கட்சியில் உள்ளனர்...: 100 வயது தொண்டரை வாழ்த்திய கருணாநிதி
சென்னை: சில தினங்களுக்கு முன்னர் தான் சந்தித்த 100 வயது கட்சித் தொண்டர் ஒருவரைப் பற்றியும், அவரைத் தான் வாழ்த்தியது குறித்தும், அதன் மூலம் தன்னை விட வயதானவர்கள் திமுகவில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
மேலும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அந்த 100 வயது தொண்டரைச் சந்தித்ததன் மூலம் கட்சியின் மூத்த தொண்டர் அவர் தான் என்றும், அவரது ஊர் காஞ்சிபுரம் என்பதன் மூலம் காஞ்சியில் தான் அண்ணாவைச் சந்தித்த நாட்களை அசை போட்டதாகவும் கூறியுள்ளார் கருணாநிதி.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது....

காரை வழிமறித்த தொண்டர்....
கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவாலயத்தில் இருந்து நான் புறப்படத் தயாரானபோது, ஒரு முதியவர் என்னை நெருங்கினார். ‘‘யார்? என்ன வேண்டும்?'' என்றேன். ‘‘நான் கட்சிக்காரன் அய்யா, எனக்கு ஒன்றும் வேண்டாம்; உங்களைப் பார்க்கவேண்டும்; அவ்வளவுதான்'' என்றார். கார் அருகே அழைத்தேன்.

மனநிறைவு....
‘‘எனக்கு 100-வது வயது பிறக்கப்போகிறது; உங்களிடம் வாழ்த்துப் பெறுவது ஒன்றுதான் என்னுடைய விருப்பம்'' என்றார். அவரை நான் வாழ்த்திவிட்டுப் புறப்பட்டேன். அந்தப் பெரியவருக்கு மிகப்பெரிய மன நிறைவு.

திமுக குடும்பம்....
அவர் என் கையிலே கொடுத்த மனுவைப் படித்தேன். அதில், ‘‘நான் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் ஏழை ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்தவனாகும். எனக்கு வயது 100 ஆகிறது. ஆதி முதல் இன்று வரை நான் தி.மு.க. ஈசூர் கிளையில் உறுப்பினராக இருந்து தொண்டாற்றி வருகின்றேன். எங்கள் குடும்பமே தி.மு.க.வை சேர்ந்ததாகும். தி.மு.க.வின் கொள்கை பிடிப்போடு இன்று வரை நான் இருந்து வருவது எங்கள் பகுதிவாழ் மக்கள் அறிந்த ஒன்றாகும்.

நல்லாசி வேண்டி...
எனக்கு வருகிற 27-9-2013-ந் தேதி 100-வது வயது பிறக்கப் போகின்றது. எனக்கு உங்களுடைய நல்லாசி கிடைக்க வேண்டி இம்மனுவைச் சமர்பிக்கின்றேன்'' என்று எழுதியிருந்தார்.இவரது 100-வது பிறந்த நாள் 27-9-2013 என்பதை அறிந்த நான் ஸ்டாலினிடம் மாவட்ட செயலாளரை அவருடைய இல்லத்திற்கே சென்று வாழ்த்தும்படி கூறியதோடு, அவர் கொடுத்த, அந்த மனுவினை ஸ்டாலினிடம் கொடுத்துவிட்டு நான் புறப்பட்டேன்.

பொன்னாடை மரியாதை...
சாமிக்கண்ணுவையும், அவருடைய துணைவியாரையும் ஸ்டாலின் அவருடைய அறைக்கு அழைத்துச்சென்று பொன்னாடை அணிவித்து, ஆயிரம் ரூபாய் நிதியினையும் அளித்து அனுப்பி வைத்திருக்கிறார்.

பிறந்தநாள் வாழ்த்து...
மேலும் நான் கூறியதன்படி ஸ்டாலின் காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசனைத் தொடர்பு கொண்டு, சாமிக்கண்ணுவின் பிறந்தநாள் அன்று அவருடைய இல்லத்திற்கே சென்று அவரை கழகத்தின் சார்பில் கவுரவப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அண்ணாவைச் சந்தித்த நாட்கள்...
அண்ணா இருந்தபோது, காஞ்சீபுரம் நகருக்கு எத்தனை முறை அவரைச் சந்திக்கச் சென்றிருப்போம், எப்படியெல்லாம் பழகினோம், என்னென்ன கருத்துகளைக் கேட்டிருப்போம் என்பதையெல்லாம் அசை போட்டுக் கொண்டே இல்லம் சென்றேன். இதற்கெல்லாம் காரணமாக இருந்த காஞ்சீபுரம் மாவட்டம் சாமிக்கண்ணுவிற்கு 100 வயது என்பதும் என் நினைவிற்குவந்தது.

பொற்கிழி வழங்கி புகைப்படம்...
காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் அன்பரசனும் மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட கட்சி முன்னணியினரும் 27-ந் தேதியன்று சாமிக்கண்ணுவின் இல்லத்திற்கே சென்று அந்தத் தம்பதியினருக்கு மாலை மரியாதை செய்து, என் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்து, மாவட்டக் கழகத்தின் சார்பில் பொற்கிழியும் வழங்கி, அதைப் புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

100ம் ஆண்டுத் தொடக்கவிழா....
திராவிட இயக்கத்தின் 100-ம் ஆண்டு தொடக்க விழாவினை 27-2-2012 அன்று கழகத்தின் சார்பில் எடுத்தோம். அந்த விழாவில் நானும், பொதுச்செயலாளர் பேராசிரியர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நீதிபதி மோகன், பேராசிரியர் மா.நன்னன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டோம்.

திமுகவின் விழுதுகள்...
அந்தத் திராவிட இயக்கம் எனும் ஆலமரத்தின் விழுதுகளான சாமிக்கண்ணுவைப் போன்ற எண்ணற்ற தொண்டர்கள் கட்டிக்காத்து வருவதுதான் நமது இயக்கம். அந்த இயக்கத்தின் வளர்ச்சியே நம்முடைய வாழ்க்கை.

மனமார வாழ்த்துகிறேன்...
அந்த இயக்கத்தின் வளர்ச்சியைத் தவிர தனக்கு வேறொன்றும் தெரியாது என்று 100-வது வயதிலும் முழங்கும் அருமை சாமிக்கண்ணுவை, நூறாண்டு காலத்திற்கு மேல் அகவை உடைய திராவிட இயக்கத்தின் சார்பில், ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த, 100 வயதான, ஆதி முதல் இன்று வரை கழகத்தின் தீவிர உறுப்பினரான சாமிக்கண்ணுவையும் அவரது துணைவியாரையும், கழகத்தின் தலைவர் என்ற முறையில் மனமார வாழ்த்துகிறேன்.

மூத்தத் தொண்டர்...
நமக்குத் தெரிந்தவரை, இப்போதுள்ள நிலவரப்படி, நமது கழகத்தின் மூத்த தொண்டர் காஞ்சீபுரம் சாமிக்கண்ணு என்றுதான் கருதுகிறேன். அந்த மூத்த கழகத் தொண்டருக்கு நாம் அனைவரும் சேர்ந்து வாழ்த்துக் கூறுவோம். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications