'கத்தி': தியேட்டர் தாக்குதல் வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்: திருமா
சென்னை: திரையரங்குகள் மீதான தாக்குதலில் தொடர்பில்லாத நபர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கும் காவல்துறை உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடித்துச் சிறைப்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அண்மையில் சென்னை சத்யம், உட்லண்ட்ஸ் ஆகிய திரையரங்குகள் மீது கல்வீச்சு நடந்துள்ளது. இதனால் அத்திரையரங்குகளின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இதனையொட்டி வழக்குப் பதிவு செய்த சென்னை மாநகர காவல்துறை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 5 பேர் மற்றும் கல்லூரி மாணவர்கள் 3 பேர் என 8 பேரை கைது செய்து சிறைப்படுத்தியிருக்கிறது.
திரையரங்குகள் மீதான தாக்குதலில் தொடர்பில்லாத நபர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கும் காவல்துறை உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடித்துச் சிறைப்படுத்த வேண்டும் எனவும், கைது செய்யப்பட்ட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், அவர்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்பதில் காவல்துறையினர் கண்ணுங் கருத்துமாகச் செயல்பட வேண்டும் என்பதைப் போல நிரபராதிகள் பாதிக்கப்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications