கிருஷ்ணகிரி: 2 குழந்தைகளை வெட்டிக் கொன்று, தந்தை தற்கொலை!

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்துள்ள நெல்லூர்பேட்டையைச் சேர்ந்தவர் முனியப்பன். இவர் தனது மனைவி புனிதாவோடு, கிருஷ்ணகிரியை அடுத்துள்ள காவேரிப்பட்டிணம் ஸ்ரீராமுலு நகரில் வசித்து வந்தார்.
இவர்களுக்கு 7ஆம் வகுப்பு படிக்கும் மெய்யரசன் என்ற மகனும், 4ஆம் வகுப்பு படிக்கும் ஜீவா என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்களுடன் முனியப்பனின் பெற்றோர் கமலேசனும், நகராணியும் வசித்து வருகின்றனர்.
கார்த்திகை தீப விழாவுக்காக புனிதா வியாழக்கிழமையன்று மாலையில் இரண்டு குழந்தைகளையும் கணவர் முனியப்பனிடம் விட்டுவிட்டு திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு வீட்டினுள் அலறல் சத்தம் கேட்டது. உடனே தாத்தா, பாட்டியான கமலேசனும் நாகராணியும் ஓடிபோய் பார்த்திருக்கிறார்கள். அப்போது இரண்டு குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர். அவர்களைக் கண்டதும் முனியப்பன் வீட்டிலிருந்து ஓடிவிட்டதாக சொல்லப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடனடியாக புனிதாவுக்கு தகவல் தெரிவித்தனர்.
திருவண்ணாமலையில் இருந்து வீட்டிற்கு வந்த புனிதா நடந்த சம்பவம் கேள்விப்பட்டு அலறினார். எனது கணவருக்கு எந்தவிதமான கெட்டப் பழக்கமும் கிடையாது, குடும்பத்திலும் எந்த பிரச்னையும் இல்லை. எனது கணவர் கொலை செய்திருக்க மாட்டார் என போலீசில் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, முனியப்பனை பிடித்தால் மட்டுமே குழந்தைகள் கொலைகளுக்கான காரணம் தெரியுமென முனியப்பனை 3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று மதியம் தர்மபுரி எம்.ஜி,ஆர் நகர் அருகில் உள்ள தண்டவாளத்தில் ஒருவரின் சடலம் கிடக்க, அது முனியப்பனாக இருக்க கூடுமோ என்று சந்தேகித்து அவரது மனைவியை தர்மபுரிக்கு அழைத்து வந்து காண்பித்துள்ளனர், அது முனியப்பனின் உடல்தான் என்று அவரது மனைவி உறுதி செய்துள்ளார்.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு, முனியப்பனும் தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இரண்டு குழந்தைகளை கொன்று, தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications