விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு.. ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்க உள்ளார்.
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க வேண்டும், விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் 18 வது நாளை எட்டியுள்ளது.
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கடும் வெயில் மற்றும் குளிரையும் பொருட்படுத்தாமல் வயது முதிர்ந்த நிலையிலும் விவசாயிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராடி வரும் விவசாயிகளை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி நேரில் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் டெல்லியில் தீவிரமாகப் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். ஏற்கனவே திமுக எம்.பிக்கள் திருச்சி சிவா, கனிமொழி ஆகியோர் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications