5 பெண்களை கொன்ற காமக் கொடூரனுக்கு 5 ஆயுள் தண்டனை: மகிளா கோர்ட்டு தீர்ப்பு
புதுக்கோட்டை: 5 பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்த காமக் கொடூரனுக்கு 5 ஆயுள்தண்டனைகளை அளித்து தீர்ப்பளித்துள்ளது மகிளா நீதிமன்றம்.
புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே உள்ள கொன்னையம்பட்டியை சேர்ந்தவர் வேலுஅம்பலம் மகன் குப்புசாமி (வயது 36). இவர், கடந்த 9.4.2009-ந் தேதியன்று அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த நமணசமுத்திரம் அருகில் உள்ள தெற்கு தாளம்பட்டியை சேர்ந்த அஞ்சலை(19) என்ற பெண்ணின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து, அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை கொள்ளையடித்தார்.
இதைத்தொடர்ந்து 17.5.2009-ந் தேதி உடையாளிப்பட்டி அருகே உள்ள சாத்தினிபட்டியை சேர்ந்த செல்வம் என்கிற செல்லம்மாள் (65) என்பவர் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது, அவரது கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து, அவர் அணிந்திருந்த 3 கிராம் தோடு மற்றும் மோதிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
மற்றொரு சம்பவத்தில் 5.6.2009-ந் தேதி விராலிமலை கோட்டைகாரன்பட்டியை சேர்ந்த வள்ளிக்கண்ணு(38) என்ற பெண் மாடு மேய்த்து கொண்டிருந்த போது, அவரை பலாத்காரம் செய்துவிட்டு கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையடித்து கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
மேலும் புத்தாம்பூரை சேர்ந்த திருவாயி (40) என்ற பெண் அருகில் இருந்த குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றபோது அவரை வழிமறித்து அவரிடம் இருந்த 8 கிராம் தங்க சங்கிலியை பறித்ததோடு, அவரது கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்துள்ளார். அன்றைய தினமே புத்தாம்பூரை சேர்ந்த கருப்பாயி (70) என்ற மூதாட்டியை வழிமறித்து, அவர் கையில் இருந்த ரூ.400 பணத்தை பறித்து, அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இந்த 5 கொலை, கொள்ளை மற்றும் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குப்புசாமியை போலீசார் கைது செய்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பிச்சம்மாள் புதன்கிழமையன்று தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில், 5 கொலை செய்த குற்றத்திற்காக குப்புசாமிக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை வீதம் 5 ஆயுள் தண்டணையும், கொலை மற்றும் பலாத்காரத்திற்காக தலா 10 வருட சிறை தண்டனையும் மற்றும் அபராத தொகையாக மொத்தம் ரூ.11 ஆயிரமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.











Click it and Unblock the Notifications