ஜூலை 17ல் திமுகவுடன் 'மக்கள் தேமுதிக' இணைப்பு! தேமுதிகவை உடைக்க சந்திரகுமார் சுற்றுப்பயணம்
சென்னை: சட்டசபை தேர்தலில் விஜயகாந்த், மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதை கண்டித்து, தேமுதிக முக்கிய நிர்வாகிகளான சந்திரகுமார், பார்த்தீபன் போன்றோர் பிரிந்து வந்து 'மக்கள் தேமுதிக' என்ற அமைப்பை ஆரம்பித்தனர்.
இதில் சந்திரகுமார் உள்ளிட்ட மூவருக்கு திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் மூவரும் தோல்வியை தழுவினர்.
இந்நிலையில் இரு தினங்கள் முன்பு சென்னையில் மக்கள் தேமுதிக அமைப்பினர் கூடி, தங்கள் அமைப்பை திமுகவோடு ஐக்கியப்படுத்த தீர்மானம் நிறைவேற்றினர்.

கருணாநிதியுடன் சந்திப்பு
இதை தொடர்ந்து, சென்னை, கோபாலபுரத்தில் இன்று திமுக தலைவர், கருணாநிதியை சந்திரகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று காலை 11 மணியளவில் சந்தித்து பேசினர்.

இணைப்பு
மக்கள் தேமுதிக நிறைவேற்றிய தீர்மானத்தை கருணாநிதி கவனத்திற்கு எடுத்து சென்றனர். இதன்பிறகு தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

தேமுதிக கவலைக்கிடம்
கருணாநிதி வீட்டுக்கு வெளியே நிருபர்களுக்கு சந்திரகுமார் அளித்த பேட்டி: தேமுதிக நிலை கவலைக்கிடமாக உள்ளது. தொண்டர்கள், நிர்வாகிகள் என்ன பேச என தெரியாமல் கஷ்டத்தில் உள்ளனர்.

சுற்றுப்பயணம்
தேமுதிக கட்சிக்குள் வெம்பி கிடப்போரை சந்தித்து திமுகவில் சேர்ப்பது எங்களின் அடுத்த கட்ட பணி. மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் சென்று, தேமுதிக தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்து அதிருப்தியிலுள்ளோரை திமுகவில் இணைக்க உள்ளோம்.

ஜூலை 17ல் விழா
மக்கள் தேமுதிக அமைப்பு கலைக்கப்படவில்லை; திமுகவோடு இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பு விழா ஜூலை 17ம் தேதி சேலத்தில் ஸ்டாலின் தலைமையில் பிரமாண்டமாக நடைபெறும். அதற்குள்ளாக பல தேமுதிக நிர்வாகிகளை கட்சியில் சேர்ப்போம்.

யாரும் தேடவில்லை
உள்ளாட்சி தேர்தலில் திமுக தரப்பில் இருந்து கூட்டணிக்காக விஜயகாந்த்தை அழைக்கவில்லை. ஊடகங்களில்தான் அப்படி செய்தி வந்துள்ளது. தேமுதிகவிலுள்ளோர்தான் திமுக நோக்கி வந்து கொண்டுள்ளார்கள். விஜயகாந்த்தை யாரும் கூட்டணிக்கு திரும்பி கூட பார்ப்பதில்லை என்பதுதான் இப்போதுள்ள நிலை. அந்த கட்சியில் மிச்சம் மீதியுள்ள தேமுதிகவினர் நல்ல முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சந்திரகுமார் பணி
சட்டசபை தேர்தலில் கருணாநிதியே அழைப்புவிடுத்தும், புறக்கணித்த விஜயகாந்த்துக்கு தக்க பாடம் கற்பிக்க சேலத்தில் நடைபெற உள்ள இணைப்பு விழாவிற்கு முன்பாக, தேமுதிகவிலிருந்து பல ஆயிரக்கணக்கானோரை திமுகவில் இணைக்கும் 'அசைன்மென்ட்' சந்திரகுமாருக்கு தரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications