சூளகிரி அருகே காதல் மனைவியை எரித்துக் கொன்ற லாரி டிரைவர்
கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரியை அடுத்து இருக்கும் ஒற்றர்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகன்(25). லாரி டிரைவர். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனி(21) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அண்மை காலமாக கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினமும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த முருகன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து சிவரஞ்சனி மீது ஊற்றி தீ வைத்தார்.
உடலில் தீப்பிடித்தவுடன் சிவரஞ்சனி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு அவர் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளதால் இது பற்றி ஓசூர் துணை கலெக்டர் பிரவின் நாயரும் விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications