காவேரி மருத்துவமனை அருகே பெருகிய தள்ளு வண்டி கடைகள்.. கேண்டீனில் போலீசார் அத்துமீறல்?
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27ம் தேதி நள்ளிரவு முதல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
27ம் தேதி நள்ளிரவில், கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து 28ம் தேதி, அதிகாலை 2.30 மணிக்கு காவேரி மருத்துவமனை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், "திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்த குறைவு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்பிறகு 11வது நாளாக இன்றும் காவேரி மருத்துவமனையில், கருணாநிதிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் திமுக தொண்டர்கள் பெருமளவில் அங்கு குவிந்துள்ளனர். இரவும், பகலும் ஆண், பெண் பேதமின்றி தொண்டர்கள் அங்கு நின்று, எழுந்து வா, தலைவா என கோஷமிட்டு வருகிறார்கள்.

இதனால், அங்கே திடீர் நடமாடும் கடைகள் முளைத்துள்ளன. டீ, தின்பண்டங்களை தள்ளு வண்டிகளில் தள்ளியபடி வருவதை பார்க்க முடிகிறது. இதை சாப்பிட்டு பசியாறுகிறார்கள் திமுக தொண்டர்கள். சிறிது தூரம் நடந்து சென்றால் ஹோட்டல்களும் உள்ளன. ஆயினும் நள்ளிரவு நேரத்தில் பசியாற நடமாடும் கடைகளே உதவுகின்றன.

அதே நேரம் பத்திரிகையாளர்களுக்கும், போலீசாருக்கும் காவேரி மருத்துவமனை கேண்டீனுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கேண்டீனுக்கு சென்று பசியாறி வருகிறார்கள். நேற்று காவேரி மருத்துவமனை கேண்டீனில், சில போலீசார் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க மறுத்ததாகவும் சர்ச்சை எழுந்தது. வேகமாக உணவை கொண்டுவர கேண்டீன் ஊழியர்களை அதட்டியதாகவும் முணுமுணுப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications