மாசி அமாவசை: மேல்மலையனூரில் மயானக்கொள்ளை; குவியும் பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரி உற்சவத்தின் முக்கிய அம்சமாக இன்று நள்ளிரவு மயானக்கொள்ளை நடைபெறுகிறது.

அங்காளம்மன் நடக்கும் மயானக் கொள்ளை நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது. இதனைக் காண தமிழகத்தின் முக்கிய ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் மேல்மலையனூரில் குவிந்துள்ளனர்.

மயானக் கொள்ளை தினத்தன்று அங்காளி கோப வடிவினளாக அலங்கரிக்கப்பட்டு (ஒரு பக்தர் இவ்விதம் அலங்கரிக்கப்படுவார்) கையில் முறம் ஒன்றில் அவல், பொரி, கடலையுடன், ஆட்டு நுரையீரல் ஒன்றும் அங்காளம்மன் வாயில் வைத்தபடி ஊர்வலமாக அழைத்து வரப்படுவார்.

இந்த அங்காளம்மனைச் சூழ்ந்து பூத கணங்களாக கருப்பு சேலை அணிந்த பூதங்கள் போல வேடம் தரித்து கூத்தாடியபடி ஊர்வலத்தில் கலந்து வருவர். அப்போது அங்காளம்மனுக்கும், அவரது பேய் பூத கணங்களுக்கும் பக்தர்கள் காணிக்கை செலுத்தி விழுந்து வணங்குவார்கள்.

மயானத்தில் சூறை

நள்ளிரவு நேரத்தில் மயானத்தில் சூறையாடும் நிகழ்ச்சி நடத்தப்படும். இந்த சூறையில் கிழங்குகள், பழ வகைகள், காய்கறிகள், பட்சணங்கள் முதலியவை வாரி இறைக்கப்படும். இப்படி இறைக்கப்படும் பொருட்களை பக்தர்களும், விவசாயிகளும் போட்டி போட்டுக் கொண்டு எடுப்பார்கள்.

Mayana Kollai Celebration in Tiruvannamalai

விவசாயம் செழிக்கும்

இந்தப் பயிரை எடுக்கும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிர் செய்யும்போது இந்தப் பயிரையும் சேர்த்து விதைப்பார்கள்.

அப்போது வழக்கத்தை விட அதிக அளவில் மகசூல் கிடைக்கிறதாம். அம்பாளிடம் தாங்கள் வைத்த வேண்டுதல்கள் நிறைவேறியதும் பக்தர்கள் மனமுவந்து, அங்காளம்மனுக்கு நன்றிக்கடன் செலுத்துவதும் உண்டு.

பக்தர்கள் நேர்த்திக்கடன்

தங்களின் நேர்த்திக் கடனாக பல்வேறு அபிஷேகங்களை அங்காளம்மனுக்கு செய்து மனம்குளிரக் கண்டு மகிழுவர். இது ஒருவகை நேர்த்திக் கடன். இன்னொரு வகை, அம்மனுக்கு விதவிதமான பட்டுப் புடவைகளைக் காணிக்கையாகக் செலுத்தி தங்கள் கடனைப் பூர்த்தி செய்யும் வழக்கமும் இங்கு உண்டு. வஸ்திர நேர்த்திக்கடன் என்று இதனைக் கூறுவர்.

மயான கொள்ளைக்கு கட்டுப்பாடு

மயானக்கொள்ளையை முன்னிட்டு இரும்பு உலோகத்தால் செய்யப்பட்ட சூலம், வேல் போன்ற ஆயுதங்களை எடுத்து வரக்கூடாது, பூ மாலைகளை மின் கம்பிகளில் வீசக்கூடாது, காந்தி சிலை முதல் மயானம் வரை மேளதாளம் ஏதும் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பிரம்மனின் தலையை கொய்த சிவன்

மேல்மலையனூரில் மட்டுமல்லாது அங்காளம்மன் குடிகொண்டுள்ள அனைத்து ஆலயங்களிலும் மயானக்கொள்ளை நடைபெறுகிறது. இதற்கு கதை ஒன்று கூறப்படுகிறது.

ஐந்து தலைகளுடன் விளங்கிய பிரம்மன், திலோத்தமை என்ற தேவ மங்கையின் அழகில் மயங்கி அவளைத் துரத்தினான். திலோத்தமை கயிலாயத்தில் அடைக்கலம் புகுந்தாள். பார்வதியின் வேண்டுகோளுக்கிணங்க, பிரம்மனின் ஆணவத்தை அழிக்க, விஷ்ணுவின் ஆலோசனைப்படி, பிரம்மனது ஒரு தலையை சிவபெருமான் வெட்டி எறிந்தார். ஆனால், அது மீண்டும் மீண்டும் முளைக்கவே, அதனைத் தன் கையிலேயே தாங்கிக் கொண்டார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.

சரஸ்வதியின் சாபம்

இதனால் சிவனின் உருவமே பொலிவிழந்தது. இதனை அறிந்த பிரம்மனின் மனைவியான சரஸ்வதி சாபமிட்டாள். இதனால், சிவபெருமான் பிச்சை எடுக்கும் கோலத்தையும், அன்னை பார்வதி அலங்கோல வடிவத்தையும் பெற்றனர். இதையடுத்து விஷ்ணு, தன் தங்கை பார்வதியிடம், ‘கலங்காதே! நீ மலையரசன் பட்டினத்தில் (மேல்மலையனூர்) பூங்காவனத்துப் புற்றில் பாம்பு வடிவில் இருக்கும்பொழுது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்' என வழிகாட்டினார்.

அங்காளபரமேஸ்வரியாக

அகோர உருவம் கொண்ட அன்னை பார்வதி நாடெல்லாம் அலைந்து திரிந்து திருவண்ணாமலை வந்து சேர்ந்தாள். அன்னை புற்று வடிவமெடுத்து, மேல்மலையனூர் அரண்மனையில் உள்ள பூங்காவனத்தில் ஐந்து தலை நாகமாக வாழ்ந்து வந்தாள்.

புற்றுக்குள் அன்னை

பூங்காவனத்தில் பெரிய புற்று இருப்பதைக் கண்டு, மலையரசன் அதனை இடிக்க ஆள் அனுப்பினான். அந்த ஆட்கள் அனைவரையும் அன்னை புற்றுக்குள் மறைந்தாள். மீண்டும் ஆள் அனுப்ப, அவர்களும் புற்றுக்குள் மறைந்தனர். இதைக் கண்டு அஞ்சிய மலையரசன், தன் தவறை உணர்ந்து புற்றை வணங்கி, நின்றபோது அன்னை காட்சி கொடுத்தாள்.

சிவன் சாபம் நீங்கியது

அச்சமயம் மலையனூர் வந்த சிவனின் குரல் கேட்ட பார்வதி, விஷ்ணுவை மனதில் நினைத்து தியானம் செய்தாள். விஷ்ணுவின் ஆலோசனைப்படி, விநாயகப்பெருமானைக் காவல் நிற்கச் செய்து, அன்னபூரணி மூலம் சுவையான உணவைச் சமைத்து, அதை மூன்று கவளமாக்கினாள். இரண்டு கவளங்களைச் சிவனின் கையில் இருந்த கபாலத்திற்கு ஊட்ட, அதன் சுவையில் மயங்கிய கபாலம் ஆசை தீர உண்டது.மூன்றாவது கவளத்தை வேண்டுமென்றே கீழே தவற விட, சுவையில் மயங்கிய கபாலம் தரையிறங்கியது.

மயானங்களில் பூஜை

இதற்காகவே காத்துக் கொண்டிருந்த அன்னை அங்காள பரமேஸ்வரி, கபாலத்தைத் தன் காலால் நசுக்கித் தரையில் அழுத்தினாள். உடனே சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி சுயநிலையை அடைந்தார். இந்த ஐதீகத்தை நினைவுபடுத்தும் வகையிலேயே மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அனைத்து ஊர் மயானங்களிலும் மயானக்கொள்ளை உற்சவம் நடத்தப்படுகிறது.

தோஷ நிவர்த்தி

ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி பிரம்மனின் தலையை தன் காலால் மதித்து சிவனை பிரம்ம ஹத்தி தோஷத்திலிருந்து விடுவிக்கின்றால் இதனால் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி உக்கரம் அடைகிறாள். எனவே அம்மனை சாந்தி படுத்தவே அமாவாசை நள்ளிரவில் அம்மனை ஊஞ்சலில் அமரவைத்து தாலட்டு பாடல்கள் பாடி அம்மனை சாந்தி படுத்துகின்றனர். அன்றைக்கு அம்மனைக் காண வரும் பக்கதர்களுக்கு அம்மன் அருள் பூர்ணமாக கிடைப்பதாக நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+