உரிமைக்காக போராடிய மேலூர் விவசாயிகள் மீது பாய்ந்தது வழக்கு!
வைகை அணை நீர் உரிமையைக் காப்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்ட மேலூர் விவசாயிகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலூர் : வைகை அணை நீரைப் பாசனத்துக்கு திறந்து விடக் கோரி அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 1250 விவசாயிகள் மீது மேலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வைகை அணையிலிருந்து முல்லை பெரியாறு பிரதான கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி ஒரு போகம் பயிர் செய்யும் விவசாயிகள் பொதுப் பணித் துறையினரிடம் மனு அளித்தனர். எனினும் தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பயனடையும் வகையில் பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களுக்கு வைகை அணை நீர் திறக்கப்பட்டது.

இதனால் மேலூர் விவசாயிகள் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த திங்கள்கிழமை திரண்டனர். அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 2 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
வைகை அணையிலிருந்து முல்லை பெரியாறு பிரதான கால்வாய்க்கு நீர் திறந்து விடும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி சாலையில் சாமியானா பந்தல் போட்டு அமர்ந்துக் கொண்டனர். சுமார் 5 மணி நேர இவர்களது போராட்டம் நீடித்தது.
இதையடுத்து வைகை அணையிலிருந்து மேலூர் விவசாயிகளுக்கு 900 கனஅடி நீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இதையேற்று விவசாயிகள் தற்காலிகமாக தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில் அனுமதியின்றி விவசாயிகள் போராட்டம் நடத்தியதாக மேலூர், நாவினிப்பட்டி, சூரைக்குண்டு உள்ளிட்ட கிராமங்களின் விஏஓக்கள் போலீஸில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து மேலூர் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 1250 விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துளனர்.












Click it and Unblock the Notifications