வாரத்தில் 2 நாட்கள் கைத்தறி ஆடைகள்! அரசு அலுவலர்களிடம் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!
சென்னை: வாரத்தில் 2 நாட்கள் அரசு அலுவலர்கள் கைத்தறி ஆடைகள் உடுத்தி நெசவாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கோரிக்கை வைத்திருப்பதாகவும், தாமும் அதையே வலியுறுத்துவதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேசிய கைத்தறி கண்காட்சி விற்பனையை சென்னையில் தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி பேசியதாவது;

தந்தை பெரியார் அவர்களும் அவரின் கீழ் இயங்கிய நம் தலைவர்களும் கைத்தறி பொருட்களை தலையில் சுமந்து விற்பனை செய்த வரலாறு நமக்கு உண்டு. இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வாரத்தில் 2 நாட்கள் அரசு அலுவலர்கள் கைத்தறி உடுத்தி கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள்.
அதே கோரிக்கையினை நானும் வலியுறுத்துகிறேன். இந்த நேரத்தில் எங்கள் துறை சார்பாகவும் ஒரு கோரிக்கையை யோசனையை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கோ-ஆப்டெக்ஸ், தமிழ்நாடு முழுவதும் இருக்ககூடிய 1200 கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றன,
இந்த ஆண்டு மட்டும் 200 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டினை விட 29 கோடி ரூபாய் அதிகம். முந்தைய ஆட்சியின் போது 7 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய இந்த நிறுவனம் இன்றைக்கு 9 கோடியே 46 இலட்சம் ரூபாய் லாபத்தில் இயங்குகிறது.

இந்த 23-மாதங்களிலும் தமிழ்நாடு அரசால் நெசவாளர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10-ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப்பூங்கா புத்துயிர் பெற்றுள்ளது. நெசவாளர் குறைதீர்க்கும் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 24,684-பயனாளிகளுக்குரூபாய். 120.80 கோடி கடன்கள் வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் 42-இலட்சம் மாணவ-மாணவியர்களுக்கு சீருடைத் துணிகள் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளர்களுக்கு வீடுகள் கட்ட மானியமாக வழங்கப்படும் தொகைரூ. 4.00 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படி சொல்லிக்கொண்டே போகலா, இவை அனைத்தும் 20-மாத காலத்தில் செய்து தரப்பட்ட திட்டங்கள் ஆகும்.












Click it and Unblock the Notifications