சென்னை விமான நிலைய ரன்வேயில் திடீர் தீ – கோவை விமானம் தப்பியது!
சென்னை: கோவையில் இருந்து சென்னை வந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஜெட் விமானம், ஓடுபாதை அருகேயுள்ள புல்வெளி திடீரென தீப்பற்றி எரிந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டது.
விமானங்கள் உயர கிளம்பும் அல்லது தரையிறங்கும் வேளைகளில் ஓடுபாதை அருகே வட்டமிடும் பறவைகளை விரட்டுவதற்காக விமான நிலைய ஊழியர்கள் அவ்வப்போது வெடிகளை வெடிப்பது வழக்கம்.
அவ்வகையில் இன்று வெடிக்கப்பட்ட வெடிகளில் இருந்து பறந்த தீப்பொறி உள்நாட்டு விமானங்களுக்கான ஓடுபாதையின் 20 ஆவது தடத்தின் ஓரமுள்ள காய்ந்த புல்வெளியில் விழுந்தது. அதனால், அங்கிருந்த சருகுகள் தீப்பற்றி எரிய தொடங்கின.

திறந்தவெளியான அப்பகுதியில் பலத்த காற்று வீசியதால் வேகமாக பரவிய தீ, ஓடுபாதை சாலை வரை நீண்டது. அப்போது கோவையில் இருந்து சென்னை வந்த தனியார் நிறுவன ஜெட் விமானம் அந்த ஓடுபாதையில் தரையிறங்க முயன்றது.
தீப்பற்றி எரியும் பகுதியை தவிர்த்து, அந்த விமானத்தை ஓடுபாதையின் நடுவில் நிறுத்தும்படி கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானிக்கு தகவல் அளித்தனர்.
அதற்குள் விரைந்து வந்த 3 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்த பின்னர் வழக்கமான நிறுத்துமிடத்திற்கு வந்த அந்த விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக கீழே இறங்கி சென்றனர். இச்சம்பவம் குறித்த விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications