வானிலை, ரயில்வே, தொலைதொடர்பு.. மத்திய அரசின் மூன்று துறைகளின் தோல்வி! வெள்ள பாதிப்பின் சோக பக்கம்
தூத்துக்குடி: வரலாறு காணாத கனமழையில் கடந்த 3 நாள்களாகச் சிக்கித் தவித்த தென்மாவட்டங்களில் இன்று முதல் சூரிய உதயம் தொடங்கியுள்ளது. ஆனாலும் மக்கள் இயல்புநிலைக்கு இன்னும் முழுமையாகத் திரும்பிவிடவில்லை.
இந்த இயற்கை பேரிடர் ஏற்படுத்தி இருக்கும் சேதம் என்ன? என்பது பற்றி முழுமையான தகவகல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், லட்சக்கணக்கான மக்கள் தங்களின் உடைமையை இழந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகளையே இழந்துள்ளார். சமூகவலைத்தளத்தில் ஒரு வீடு அப்படியே நிலைதடுமாறிச் சரியும் காட்சி காண்பவர்களைக் கதிகலங்க வைத்துள்ளது.
சமவெளியில் சரித்திர சாதனை:
இந்த வரலாறு காணாத மழையைப் பற்றி திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி, “இந்தியாவிலேயே அதிக மழை பெய்யும் பகுதியான மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில் ஒரு நாளில் பெய்த அதிகபட்ச மழை 103.6 செ.மீட்டர்தான்.
கடந்த 1876ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த மழை அளவு பதிவாகியிருக்கிறது. அது மலைப்பிரதேசம். ஆனால் ஒரு சமவெளிப் பகுதியில் 95 செ.மீட்டர் மழைப் பதிவாவது இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு நிகழ்வு.
நேற்று காலை 6 மணியிலிருந்து இன்று காலை 6 மணிக்குள் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீட்டர் மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது” எனக் கூறியுள்ளார்
நேற்றுவரை மழைதான் பிரச்சினையாக இருந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ் போட்ட ஒரு பதிவினால் அந்தப் பிரச்சினை மத்திய அரசின் அமைப்பான இந்திய வானிலை மையம் பக்கம் திரும்பத் தொடங்கி இருக்கிறது.
அமைச்சர் மனோ தங்கராஜ், “இவ்வளவு பெரிய சேதத்திற்கு ஒன்றிய அரசின் அமைப்பான இந்திய வானிலை மையம் சரியாகக் கணிக்கத்தவறியதே காரணம்” என்று ஒரு நீண்ட பதிவில் விமர்சித்துள்ளார்.
அந்தப் பதிவில் அவர், “வானிலை முன்னறிவிப்பில் துல்லியம் இல்லை. இந்தப் பெரிய இழப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் சரியாகக் கணித்து முன்கூட்டியே தெரிவித்திருந்தால் மக்களின் சொத்துகள் அதிகம் சேதமாகாமல் தடுத்திருக்கலாம்.
மக்களையும் பெரிய பாதிப்பில் சிக்கவிடாமல் தவிர்த்திருக்கலாம். காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய ஒரு பிரச்சினை. அது இப்போது நம்மை நேரடியாகப் பாதித்திருக்கிறது.
சர்ச்சையில் இந்திய வானிலை மையம்:
ஆகவே மத்திய அரசு தனது அணுகுமுறையில் மறுசீரமைப்பு தேவை. மேலும் மத்திய அரசின் நடவடிக்கைகள் மேலும் நவீனப்படுத்த வேண்டியது அவசியம். தகவல்தொடர்பு நிலையங்களை நாம் மேம்படுத்த வேண்டும்.
முன்கூட்டியே துல்லியமாக இந்திய வானிலை மையம் கணித்திருந்தால் எச்சரிகையாகச் செயல்பட்டிருக்கலாம். தயாராக இருந்திருக்கலாம். இதில் நாம் கூட்டுப் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அழிவைத் தடுப்பதற்கும் குறைப்பதற்கும் அது உதவியாக இருக்கும்” என்றவர், மற்றொரு பதிவில் இன்னொரு கருத்தையும் முன்வைத்திருக்கிறார்.
அடுத்த பதிவில், “பேரிடர் காலங்களில் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முறையான ஒரு கட்டமைப்பை ஒன்றிய அரசு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்களாக வைத்து வருகிறோம்.
ஒகி புயலின் போது இந்த கோரிக்கை மிக அழுத்தமாக முன்வைக்கப்பட்டது. பேரிடர் மீட்புக்குத்தக்கத் தருணத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் முப்படைகள், குறித்த நேரத்தில் வெகு தொலைவிலிருந்து வந்து சேர்வது சவாலாக இருப்பதைக் கருத்தில் கொண்டு ஒரு நிரந்தர கட்டமைப்பைக் கன்னியாகுமரி பகுதியில் ஏற்படுத்த வேண்டும்” என்று பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்
அவரது பதிவைக் கண்ட பாஜகவினர் உள்ளே புகுந்து தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து பின்னூட்டம் போட்டு வருகின்றனர். சொல்லப்போனால், இந்திய வானிலை மையம் கொஞ்சம் புதுப்பிக்க வேண்டி கட்டாயத்தில்தான் உள்ளது. அதன் ஆய்வுகளில் இன்னும் அதிகம் துல்லியம் தேவைப்படுவதும் உண்மைதான்.
இந்திய வானிலை மையம், அமைச்சர் மனோ தங்கராஜ் சொல்வதைப் போலக் காலநிலை மாற்றத்திற்குத் தக்க ஆய்வுகளை மேம்படுத்த வேண்டும். இந்தியா விண்வெளி ஆய்வில் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. நிலவைச் சென்றடையும் அளவுக்கு முன்னேறி உள்ளது.அப்படியான காலத்தில் வெறும் மழை அறிவிப்பை மட்டுமே செய்தியாகச் சொல்லாமல், அதன் விளவுகள் எந்தளவுக்கு இருக்கும் என்று கணித்துச் சொல்லக் கூடிய அளவுக்கு நவீன உபகரணங்களைக் கொண்டு ஆராய்ந்து மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
அந்தளவுக்கான முன்னேற்றம் இந்திய வானிலை மையத்திடம் இல்லை என்பதி சென்னை கனமழையும் தென் மாவட்டங்களில் இப்போது கோரத்தாண்டவம் ஆடி இருக்கும் பேரிடரும் நமக்குச் சொல்கின்றன. இன்றைய கள நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் 275 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தூத்துக்குடியிலும் 275 பேர் களத்தில் முழு வீச்சுடன் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக மாநில, தேசிய பேரிடர் படையினர் 550 வீரர்கள் களத்தில் முழு நேரமும் மீட்புப் பணியிலிருந்து வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல் 168 ராணுவ வீரர்களும் நிவாரணப் பணியில் ஈட்டுப்பட்டு வருகின்றன. 2 ஹெலிக்காப்டர்கள் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இது தவிர 130 பேர் நடமாடும் மருத்துவ சேவையில் ஈடுபட்டுவருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 50 படகுகள் தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டு உள்ளது. அதற்கு முன்னதாகவே 279 படகுகள் தூத்துக்குடியில் மீட்புப் பணியில் இயங்கி வருகின்றன. இதற்காக 141 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2 நாள்களில் மட்டும் 1082 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
682 ஜேசிபி போன்ற வாகனங்கள் களத்தில் இயங்கி வருகின்றன. இவை மட்டுமல்லாமல் 100 மோட்டார் பம்புகள் இன்று சென்னையிலிருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆறு அமைச்சர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து சேவையைப் பொறுத்தவரையில் மொத்தமாகத் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 1661 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் 302 பேருந்துகளில் 82 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. திருநெல்வேலியில் 386 பேருந்துகளில் 99 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில்வே துறையின் அலட்சியம்:
ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 4 பயணிகளை இதுவரை மீட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். அதில் ஒரு கர்ப்பிணி அவரது குடும்பத்தினருடன் மீட்கப்பட்டுள்ளார். ரயிலில் சிக்கித்தவிக்கும் பயணிகளுக்கு ஹெலிக்காப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்ய உள்ளனர். சுமார் 300 பேர் ரயில் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுமார் 200 அருகில் உள்ள பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ வைகுண்டத்தில் கிட்டத்தட்ட 37 மணிநேரத்திற்கும் மேலாகப் பயணிகள் சிக்கித்தவித்து வருகின்றனர். கடந்த 3 நாள்களாகப் பயணிகள் பட்டினியில் கிடக்கின்றனர். அத்துடன் மன உளைச்சல் வேறு. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தவித்து வந்த அவர்களை மீட்க இப்போதுதான் 13 பேருந்துகள் தயார்நிலையில் வந்துசேர்ந்துள்ளன. இவ்வளவு கடுமையிலும் இந்த ரயிலை ரத்து செய்யாமல் இயக்கி உள்ளது ரயில்வே துறை. செந்தூர் விரைவு ரயிலானது ஸ்ரீ வைகுண்டம் அருகே வந்து கொண்டிருந்தபோது ரயில் தண்டவாளங்கள் வெள்ளநீரில் அடித்துக்கொண்டு சென்றன. அதன் விளைவாக ரயில் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொடங்க ஆரம்பித்தது. ஆகவே, ரயிலானது காட்டுப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டது.
இவ்வளவு பெரிய பேரிடர் காலத்தில் எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் ரயில்வே துறை செயல்பட்டுள்ளதற்கு இதைவிட வேறு சான்று தேவை இல்லை. வழக்கம் போல் பயணிகளை அழைத்துக் கொண்டு சென்றுள்ளது. இது இந்திய ரயிலே துறையின் மிகப் பெரிய அஜாக்கிரதை. இதை இன்றைக்குத் தமிழக தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனாவும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
காலைவாரிய தகவல் தொடர்பு:
அடுத்து தகவல் தொடர்பைப் பொறுத்தவரைத் தென் தமிழ்நாட்டில் உள்ள 4 மாவட்டங்கள் முடங்கிப் போய் உள்ளது. அதில் தூத்துக்குடி மாவட்டம் முற்றிலுமாக முடங்கிவிட்டது. அங்கே சில கோபுரங்கள் இயங்கவில்லை. குறிப்பாக பி.எஸ்.என்.எல் கோபுரங்களில் தொடர்பு முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. அரசு நிறுவனமான இந்தத் துறை இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். புதிய கருவிகளைக் கொண்டு புதுப்பிக்கப்பட வேண்டும். அந்த மாற்றத்தை மத்திய அரசு செய்வதற்கான பாடத்தை இதன் மூலம் கற்றுக்கொண்டுள்ளதா? என்பது மிகப் பெரிய கேள்வி.
ஒட்டுமொத்தமாகத் தூத்துக்குடியில் மட்டும் 15626 தொலைத்தொடர்பு கோபுரங்கள் உள்ளன. அதில் 1754 தொலைத்தொடர்பு கோபுரங்கள் மூலம் தகவல் தொடர்பு செய்ய முடியவில்லை. அவை முற்றாக இயங்கவில்லை. இந்தளவில்தான் ஒரு பேரிடரை இந்தியா எதிர்கொண்டு வருகிறது என்பது அவலம் இல்லையா?
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications