பள்ளியில் பந்தல் சரிந்து 30 மாணவர்கள் காயம்.. அலறித் துடித்து ஓடிய பெற்றோர்.. திருச்சியில் பரபரப்பு!
திருச்சி: திருச்சியில் நடந்த பள்ளி விழாவின்போது, சாமியானா பந்தல் சரிந்து விழுந்து 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காயமடைந்தனர். இந்த தகவல் அறிந்து பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி கருமண்டபம் பகுதியில் ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

இதற்காக அங்கு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு, அதில் அனைத்து வகுப்பு மாணவர்களும் அமர வைக்கப்பட்டு இருந்தனர். விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பலத்த காற்று வீசியதால் சாமியானா பந்தல் திடீரென சரிந்து விழுந்தது. பந்தல் போட பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள் மாணவர்கள் மீது விழுந்தது. இதில் சில மாணவர்களின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
மேலும் சில மாணவர்கள் பந்தலுக்குள் சிக்கி கை, கால்களில் காயம் ஏற்பட்டது. ஆசிரியர் ஒருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், பள்ளிக்கு மருத்துவக்குழுவும் வரவழைக்கப்பட்டு, லேசான காயம் அடைந்த மாணவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த ஏராளமான பெற்றோர் பள்ளி முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தங்களது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என பெற்றோர்கள் தேடினர். ஒரு சில பெற்றோர் காயம் அடைந்த தங்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தபிறகு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மற்ற குழந்தைகளையும் விருப்பமுள்ள பெற்றோர் வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஒரு சிலர் தங்கள் குழந்தைகளை அழைத்து சென்றனர். மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தகவல் அறிந்த செசன்ஸ் நீதிமன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பள்ளி ஆசிரியர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து, ஷாமியானா பந்தல் போட்ட 5 தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவம் கருமண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications
