என் தம்பி கொலை செய்யப்பட்டார்... பகிரங்கமாக குற்றம்சாட்டும் கனகராஜ் அண்ணன்
என் தம்பியை திட்டமிட்டு கொலை செய்து விட்டனர் என்று கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் புகார் கூறியுள்ளார்.
சென்னை: கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆனால் இது விபத்தல்ல திட்டமிட்ட கொலை என்று கனகராஜின் அண்ணன் தனபால் குற்றம் சாட்டியுள்ளார்.
கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். பங்களாவில் இருந்த ஆவணங்கள், நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக நீலகிரி தனிப்படை போலீசார், கனகராஜிடம் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்தனர்.
இந்த நிலையில்தான் சாலை விபத்தில் சிக்கி கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது மர்ம மரணமாக கருதப்படும் நிலையில் இது விபத்தில்லை திட்டமிட்ட கொலை என்று ஆரம்பம் முதலே அவரது அண்ணன் தனபால் கூறியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதும் புகார் கூறியுள்ளார்.

பங்காளி குடும்பம்
நாங்களும், முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் பங்காளி குடும்பம். எனது தம்பி கனகராஜ், 2008ம் ஆண்டு இறுதியில் போயஸ் கார்டனில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது, அதிமுக மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த சமுத்திரம் சரவணன்தான், அவரை வேலைக்கு சேர்த்து விட்டார்.

போயஸ் தோட்டத்தில் டிரைவர்
சென்னை போயஸ் தோட்டத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டிலும், கொடநாட்டிலும் கார் டிரைவராக கனகராஜ் பணியாற்றினார். 2 ஆண்டுக்கு முன்பு, கலைவாணி என்ற பெண்ணை கனகராஜ், காதல் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு கனகராஜ் போயஸ் கார்டனில் இருந்து வெளியே வந்தார்.

விபத்தல்ல கொலை
தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் நிர்ப்பந்தத்தால்தான், என் தம்பி பணியில் இருந்து விலகினார். அதன் பிறகு சொந்தமாக கார் வாங்கி ஓட்டி வந்தார். ஏப்ரல் 27ஆம் தேதி மனைவி குழந்தைகளுடன் சொந்த ஊர் வந்த கனகராஜ், விபத்தில் சிக்கி மரணமடைந்து விட்டதாக தகவல் கிடைத்தது. விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்த்தேன். அங்கு விபத்து நடப்பதற்கான வாய்ப்பே இல்லை. அது திட்டமிட்ட கொலை என்றும் கூறியுள்ளார் தனபால்.

முதல்வர் மீது சந்தேகம்
2016ஆம் சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கேட்ட காரணத்தால் அதிமுகவில் இருந்து என்னை நீக்கிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. தம்பியின் மரணத்தின் பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக சந்தேகம் உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் தனபால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications