For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளம் பாதித்த சென்னைவாசிகளை கைவிட்ட தமிழக அரசு! நிவாரணத்தை வழிப்பறி செய்யும் அ.தி.மு.க. கும்பல்!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: உலக நாடுகளே சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளத்துக்காக ஆறுதல் தெரிவித்துக் கொண்டிருக்கிறது...தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய எந்த ஒரு முறையான நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் 'நிராதரவாக' நடுத்தெருவில் பிச்சைக்காரர்களைப் போல அலையவிட்டிருப்பதால் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர் மக்கள். நிவாரண உதவி செய்ய வரும் தன்னார்வலர்களையும் ஆளும் கட்சியினர் 'இது எங்க ஏரியா' என மிரட்டி விரட்டி பறித்துக் கொண்டு தாங்கள் உதவி செய்வது போல 'பாவ்லா' காட்டுவது மக்களை கடும் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.

No rescue actions taken by TN Govt

பருவமழை காலம் தொடங்கும் போது ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுப்பது, அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது, தங்குவதற்கு முறையான முகாம்களை ஏற்பாடு செய்வது, உணவு, உடை ஆகியவற்றுக்கான உதவிகளை ஒழுங்கு செய்வது என்பது ஒரு அரசின் கடமை. இந்த பணியை நடைமுறைப்படுத்த வேண்டியது உள்ளாட்சி அமைப்பின் முதல் கடமை.

வரலாறு காணாத பருவமழை சென்னையில் கொட்டுகிறது... சென்னையைச் சுற்றிய ஏரிகள் நிரம்புகின்றன... பெரிய ஏரிகளான செம்பரம்பாக்கமும் புழலும் நிரம்புகின்றன... ஏரிகளில் நீர் திறந்துவிடப்படுவதாக அறிவிப்பும் வெளியாகின்றன.. இந்த நீர் திறந்துவிடும் வரை இயங்கிய அரசு நிர்வாகம் அதன் பின்னர் எந்த தேசத்துக்கு கப்பலேறிப் போனது என்பதுதான் தெரியவில்லை.

எந்த ஒரு பகுதி மக்களையும் பாதுகாப்பாக வெளியேறுங்கள் என எச்சரிக்கவிடுக்கவில்லை. இதனால் வழக்கம் போல அடையாற்றிலும் கூவம் ஆற்றிலும் வெள்ளம் ஓடும்... அப்புறம் வடிந்து போய்விடும் என்ற நம்பிக்கையோடு குடியிருப்புகளில் முடங்கிக் கொண்டனர்.. செம்பரம்பாக்கத்திலும் புழல் ஏரியிலும் 10 ஆயிரம் கன அடி நீருக்கு அதிகமாக நீரைத் திறந்துவிட தெரிந்த அரசு, அதனால் ஏற்படப் போகும் விளைவுகளை உணர்ந்து எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையுமே மேற்கொள்ளவில்லை..

பொதுவாக பருவமழை காலங்களில் பள்ளிக்கூடங்களை ஏற்பாடு செய்து வெள்ளத்தில் சிக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்டு அந்த பள்ளிகளுக்கு கொண்டு சேர்த்து உணவு வழங்கி தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் உடைகளை வழங்குவது ஒரு அரசின் செயல்பாடு. ஆனால் தமிழக அரசோ ஒட்டுமொத்தமாக செயலிழந்து போய் கிடக்கிறது.

பொது முகாம் இல்லை; உதவி மையம் இல்லை; பொது சமையல் எதுவும் இல்லை எந்த ஏற்பாட்டையுமே சென்னை மாநகராட்சி செய்யவும் இல்லை... அதை செய்ய தமிழக அரசு உத்தரவிடவும் இல்லை. பிறகு எதற்கு இந்த அரசு இருக்கிறதாம்? சென்னை மாநகராட்சி என்னதான் செய்கிறதாம்?

வெள்ளத்தில் சிக்கிய மக்கள் தவியாய் தவிக்க.. அடித்து செல்லும் வெள்ள நீரில் மூழ்கிக் கொண்டிருக்க.... சமூக வலைதளங்கள், தன்னார்வ அமைப்புகள், மீனவர் குழுக்கள் என இந்த 'மக்கள் சமூகம்'தான் பரபரப்போடும் பதற்றத்தோடும் மீட்புப் பணியில் போராடிக் கொண்டிருந்தது... இதை வேடிக்கை பார்க்கத்தான் சென்னை மாநகராட்சி மேயரும் அமைச்சர் பெருமக்களும் வந்து வந்து போனார்களே தவிர இரக்கமற்றவர்களாக மீட்புக்காக ஒன்றையுமே செய்யாமல் போனார்கள்...

அட அதுதான் போய்த்தொலைகிறது என்றால் ஒருவழியாக மீட்கப்பட்ட மக்களுக்கும் பொதுமக்கள் தாங்களாக முன்வந்து உணவு, உடை, மருந்து பொருட்கள் என வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்... அப்போதும் கூட இந்த அரசும் அரசு அதிகாரிகளும் எங்கே போய் தொலைந்தார்கள் எனத் தெரியவில்லை..

இதில் உச்சகட்ட கொடுமை, பிணத்தின் நெற்றியில் வைக்கப்பட்ட காசைப் பறிக்கும் கேடுகெட்டவர்களைப் போல, பொதுமக்கள் தாங்களாக முன்வந்து கொடுக்கும் நிவாரணப் பொருட்களை, உணவுப் பொருட்களை வழிப்பறி செய்து கொண்டு, எங்கள் அம்மாவின் புகைப்படத்தைப் போட்டுத் தருவோம்; இது எங்கள் ஏரியா; நாங்கள்தான் தருவோம் என்று அ.தி.மு.க. கட்சியினர் உருமாறிப் போய்விட்ட கொடுமை அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைகக் வேண்டிய உணவுப் பொருட்களும் நிவாரண உதவிகளும் முறையாக சேராமல் போய்க் கொண்டிருக்கிறது.. இது பொதுமக்களை பெருங்கோபத்தில் தள்ளிக் கொண்டிருக்கிறது...

பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் இப்போதைய ஒற்றை கேள்வி "எங்கே எங்கள் கவுன்சிலர்? எங்கே எங்கள் எம்.எல்.ஏ.? எங்கே எங்கள் எம்.பி?... "ஓட்டு வாங்க வரத் தெரியுதுல்ல... செத்துகிட்டு இருக்கோமே இப்ப ஏன் வரலை?" என்பதுதான்..

இது அவலக் குரல் அல்ல... அரசு மீதான மிக லேசான ஆதங்க குரல்... ஆனால் இதுதான் சட்டசபை தேர்தலில் உக்கிரமெடுக்கப் போகும் பெருங்கோபத்தின் முதல் வெளிப்பாடு என்பதை இனியேனும் ஆளும் அ.தி.மு.க. அரசு புரிந்து கொள்ளுமா? புரிந்து கொள்ளும் திறன்தான் இந்த அரசுக்கு இருக்கிறதா?

English summary
TN Govt. don't take rescue and releif actions in Flood-hit Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X