கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை - ஆட்சியர் தகவல்
கன்னியாகுமரி: வாட்ஸ் அப்பில் பரவிய தகவலில் உண்மையில்லை என்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் சஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் சுமத்ராவுக்கு தென்மேற்கே இன்று மாலை 6.50 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக்கோலில் 7.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுமத்ரா பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் தற்போது அது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தியாவை இந்த சுனாமி அலைகள் தற்போதைய நிலையில் உடனே தாக்க வாய்ப்பில்லை என்று ஹைதராபாத் சுனாமி முன்னெச்சரிக்கை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்படும் விளைவை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக கன்னியாகுமரி கடல் பகுதியில் சுனாமி அலைகள் உருவாகலாம் என்ற வதந்தி வாட்ஸ் அப்பில் பரவியது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜன்சிங் சவான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. வாட்ஸ் அப்பில் வெளியான தகவலில் உண்மையில் இல்லை என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
