கொஞ்சம் பட்டாணியை வாயில் போட்டு தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்பிய நாராயணசாமி!
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வராகியுள்ள நாராயணசாமிக்கு ஒரு பெரிய சோகப் பின்னணி உள்ளது. ஆரம்ப காத்தில் அவரது குடும்பம் வறிய நிலையில்தான் இருந்துள்ளது. அந்த கஷ்டமான நிலையிலும் கூட விடாமல் போராடி படித்துப் பட்டம் பெற்று வக்கீலும் ஆகியுள்ளார் நாராயணசாமி. அவரது தந்தை வேலுதான், நாராயணசாமி சிரமப்பட்டு படிக்க வைத்துள்ளார். அவர் போன பின்னர் அவரு தாயார் ஈஸ்வரி, தனது மகனை சிரமத்திற்கு மத்தியில் வளர்த்து ஆளாக்கியுள்ளார்.
இன்று பெரிய பெரிய இடத்தில் இருப்பவர்கள் எல்லாம், ஒரு காலத்தில் கஷ்ட காலத்தில் இருந்தவர்கள்தான். அதேபோலத்தான் நாராயணசாமியும். அவரை ஏர்போர்ட் என்றும் நாசா என்றும் பலரும் கலாய்த்தாலும் கூட விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு நாராயணசாமி சரியான உதாரணமாக இருக்கிறார்.
புதுச்சேரிக்கு அருகே உள்ள பூரணாங்குப்பம் கிராமம்தான் நாராயணசாமியின் சொந்த ஊராகும். இவரது தந்தை பெயர் வேலு. தாயார் ஈஸ்வரி. வேலு பல வருடதிதற்கு முன்பே இறந்து விட்டார். தாயாருக்கு தற்போது 95 வயதாகிறது.
மகன் முதல்வராகியிருப்பது அவரது தாயாரை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தனது மகன் உயர் பதவியை அடைந்திருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மாலைமலருக்கு ஈஸ்வரி அளித்துள்ள பேட்டி:

ஏழைக் குடும்பம்
நாங்கள் மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆரம்பத்தில் ஒரு குடிசை வீட்டில் தான் வசித்து வந்தோம். எனது கணவர் பனை மரம் ஏறும் தொழிலாளி. அவர் கொண்டு வரும் பதனீர், கள் மூலமே எங்கள் குடும்பத்தை நடத்தி வந்தோம். எங்களுக்கு மூத்த மகனாக நாராயணசாமி பிறந்தான். இதுதவிர சுப்பிரமணி, கோதண்டபாணி, உத்ராபதி ஆகிய மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். கோதண்டபாணி, உத்திராபதி இருவரும் அரசு வேலைகளில் இருக்கிறார்கள். சுப்பிரமணி விவசாயம் செய்து வருகிறான்.

படிப்பாளி நாராயணசாமி
நாராயணசாமி நன்றாக படிப்பான். எனவே நிறைய படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினோம். புதுவையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு முடித்ததற்கு பிறகு சென்னையில் சட்ட கல்லூரியில் சேர்ந்து படித்தான். படிக்கிற காலத்திலேயும் வீட்டு வேலைகளை தவறாமல் செய்வான். அவரது தந்தை கொண்டு வரும் பதநீரை நாங்கள் விற்பனை செய்வோம். ஒரு கடை போல வைத்து அங்கிருந்து விற்பனை செய்து வந்தோம். நாராயணசாமியும் அந்த கடையில் இருந்து பதநீர் விற்பான். எங்களுக்கு விவசாய நிலம் இருந்தது. தோட்டத்திற்கு சென்று தண்ணீர் பாய்ச்சும் வேலையும் செய்வான்.

பட்டாணி சாப்பிட்டு பசியாற்றினார்
சென்னையில் சட்டகல்லூரியில் படித்த போது செலவு செய்ய எங்களிடம் போதிய பணம் இல்லை. சிறிதளவே பணம் அனுப்புவோம். அது சாப்பாட்டுக்கு போதுமானதாக இல்லாமல் இருந்தது. அப்போது பட்டாணியை சாப்பிட்டு தண்ணீர் குடித்து பசியை போக்கிக் கொண்டதாக என் மகன் சொல்வான். இது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அங்கும், இங்கும் பணத்தை வாங்கி மணிஆர்டர் மூலம் அனுப்பி வைப்போம். இப்படித்தான் கஷ்டப்பட்டு படித்தான்.

லேம்பி ஸ்கூட்டர்
வக்கீல் படிப்பு முடித்த பிறகு கோர்ட்டுக்கு சென்று வக்கீல் தொழிலை செய்தான். ஊரில் இருந்து புதுவை கோர்ட்டுக்கு செல்வதற்கு வாகன வசதி இல்லை. மிகவும் கஷ்டப்பட்டு ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி கொடுத்தோம். நாங்கள் வாங்கி கொடுத்த முதல் ஸ்கூட்டரை இப்போதும் பத்திரமாக வைத்துள்ளான். பின்னர் அரசியலுக்கு சென்று எம்.பி.யாகி விட்டான்.

எல்லோருக்கும் நல்லது
எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்றே எப்போதும் கருதுவான். நாங்கள் வீட்டில் கஷ்டப்பட்டு கொண்டிருந்த நேரத்தில் கூட யாராவது உதவி என்று வந்தால் நாராயணசாமி முடிந்த அளவு உதவி செய்வான். பசி என்று வந்தால் எங்களுக்கு உணவு இல்லை என்றால் கூட, வந்தவர்களுக்கு உணவு வழங்குவோம்.

பிரசவம் பார்ப்பேன்
நாராயணசாமி பிறக்கும் போது இங்கு மருத்துவ வசதி கிடையாது. இதனால் வீட்டில் தான் பிறந்தான். நானே இங்குள்ள பெண்களுக்கு பிரசவம் பார்ப்பேன். ஊரில் யாருக்கு குழந்தை பிறந்தாலும் என்னை தான் கூப்பிடுவார்கள். விடிய, விடிய உட்கார்ந்து கூட பிரசவம் பார்ப்பேன். பிரசவம் பார்ப்பது மிகவும் புண்ணியமான செயல் என்று சொல்வார்கள். நான் செய்த அந்த புண்ணியத்தால் தான் என் மகன் இந்த அளவிற்கு வளர்ந்து வந்திருக்கிறான். நிச்சயம் ஒரு நாள் அவன் முதல்வராக வருவான் என்று எதிர்பார்த்தேன். எங்கள் ஊரில் உள்ள அங்காளம்மன் அருளால் முதல்வராகி இருக்கிறான். நான் கும்பிட்ட தெய்வம் அவனுக்கு உதவி இருக்கிறது.

பாசம் அதிகம்
நான் எனது மகன் கோதண்டபாணி பராமரிப்பில் இங்கு இருக்கிறேன். வாரம் ஒரு தடவை எப்படியாவது என்னை சந்தித்து விடுவான். டெல்லியில் நீண்ட நாள் இருந்தால் ஊருக்கு வந்தவுடன் என்னை சந்திக்க வந்துவிடுவான். என் மீது மிகவும் பாசம் காட்டுவான். எனது மருமகள் (நாராயணசாமி மனைவி) இறந்து விட்டதால் அவன் கஷ்டப்படுகிறானே என்று எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. முதல்வராகி இருக்கும் நாராயணசாமி புதுவை மக்களுக்கு மிகவும் நல்லதை செய்வான் என்று நான் எதிர்பார்த்திருக்கிறேன் என்றார் ஈஸ்வரி அம்மாள்.

சொந்தக் கார்
இதற்கிடையே, முதல்வர் நாராயணசாமி அரசுக் காரைப் பயன்படுத்தாமல் சொந்தக் காரையே பயன்படுத்தி வருகிறார். முதல்வராகப் பதவியேற்க வந்தபோதும் கூட அவர் சொந்தக் காரில்தான் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications