நாம் தமிழர் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: காங். அலுவலக தாக்குதலுக்கு பதிலடியா?
சென்னை: சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது இன்று அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் இதை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இதையடுத்து அந்த 7 பேரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் 7 பேரின் விடுதலைக்கு எதிராக உள்ள காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழர் முன்னேற்றப் படையினர் ஆகியோர் நேற்று சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது வன்முறை வெடித்து சத்தியமூர்த்தி பவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து இன்று அதிகாலை சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே இன்று சென்னையில் இரண்டு இடங்களில் ராஜீவ் காந்தியின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications