மகனை வென்ற அப்பா! அதிமுக பக்கம் சாய்ந்த பாமக? யாருக்கு லாபம்?
தேர்தல் தேதியே வெளியாகிவிட்ட பிறகும் பாமக இன்னும் தனது கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இது ஒன்றும் புதியதல்ல. பாமக எப்போதும் தனது கூட்டணி குறித்த நிலைப்பாட்டைக் கடைசிக் கட்டத்தில்தான் அறிவிக்கும்.
பல தேர்தல்களில் ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளிடம் கூட்டணி பேசும் கலாச்சாரத்தை அதிகம் கடைப்பிடித்து வந்த கட்சியாக தமிழ்நாட்டில் பாமகதான் இருக்கிறது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. அன்று டாக்டர் ராமதாஸ் காலத்திலும் இதே மாதிரிதான் இருந்தது.

பாமகவின் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற அன்புமணி காலத்திற்குப் பின்பும் அதே நிலைதான் நீடிக்கிறது. கூட்டணிக் குறித்த நிலைப்பாட்டை எடுப்பதில் இந்தக் கட்சி கடந்த 30 ஆண்டுகளாக ஒரே மாதிரியான கொள்கையைத்தான் பயன்படுத்தி வருகிறது.
கடந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியில் பாமக போட்டியிட்டது. அதன்பின்னர் சில மாதங்கள் முன்னதாக பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. ஆனால், அதே கூட்டணியிலிருந்த பாமக இதுவரை பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆனால், அதே நேரம் அதிமுகவுடனும் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதனால்தான் பாமக மீது பலர் சமூகவலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்த விமர்சனங்களைப் பற்றி அன்புமணி ராமதாஸ், 'எங்களைக் கொச்சைப் படுத்தாதீர்கள்' என்று சமீபத்தில் கூட கருத்து தெரிவித்திருந்தார்.

பாமகவுக்குப் பின்பாக தொடங்கப்பட்ட தேமுதிக கூட கூட்டணி பேச்சுவார்த்தையை வெளிப்படையாக நடத்துகின்றது. அதேபோல் கூட்டணி குறித்து முடிவெடுப்பதில் கூட பாமகவைவிட வேகம் காட்டி வருகிறது. இந்தக் கட்சியைவிட அனுபவம் மிக்க பாமக ஒவ்வொரு முறையும் மிக ரகசியமாகவே கூட்டணி பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதைக் கடந்த கால அணுகுமுறையிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த முறை கூட்டணி இழுபறிக்குக் கட்சிக்குள் உள்ளக் கருத்து வேறுபாடுகளே காரணம் எனச் சொல்கிறார்கள்.
கட்சியின் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் பாஜகவுடன்தான் கூட்டணியைத் தொடர வேண்டும் என்பதில் உறுதி காட்டி வருவதாகச் சொல்லப்படுகிறது. இதே கூட்டணியில் நீடித்தால், மீண்டும் மோடி பிரதமரானால், அமைச்சரவையில் ஒரு மத்திய அமைச்சர் பதவியைப் பெறலாம் என்பது அன்பு மணியின் திட்டமாக உள்ளது.

அதேநேரத்தில் கட்சி ஆரம்பித்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாகும் கனவு நிறைவேறவில்லை. இவர்களுக்குப் பின்னால் கட்சி ஆரம்பித்த விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவே நாற்காலியில் அமர்ந்துவிட்டார். ஆனால், பாமகவுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இதுவரை எட்டாக்கனியாகவே உள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், அதே கூட்டணியுடன் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடலாம். பாஜகவும் பாமகவும் கூட்டணி ஆட்சியாக அதை அறிவிக்கலாம். அதன் மூலம் ஒரு கட்சிக்கு உத்வேகம் கிடைக்கும். எனவே பாஜக பக்கம் போவோம் என்று சொல்லி வந்துள்ளார் அன்புமணி.
ஆனால், கூட்டணி அமைப்பதில் வல்லவரான டாக்டர் ராமதாஸ், அதிமுகவுக்குச் செல்வதே சரி. தமிழ்நாடு முழுக்க பாஜக எதிர்ப்பு அலை வீசுகிறது. அந்த நேரத்தில் பாஜகவை ஆதரித்து நாமும் வீழ்ந்துவிட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அப்படி ராமதாஸ் போட்ட கணக்குகள் வெற்றியும் பெற்றுள்ளன. 2004 அவர் அமைத்த கூட்டணி வியூகத்தால் தான் அன்புமணி மத்திய சுகாதார அமைச்சரானார். அப்படி ஒரு கணக்கைப் போட்டவர் ராமதாஸ்.
ஆகவே அவரது அனுபவம் அதிமுக பக்கம் செல்வதே கட்சிக்கு நல்லது என்பது.
இப்படி மகனுக்கும் அப்பாவுக்கும் இருந்து வந்த கருத்து மோதலுக்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நேற்று டாக்டர் ராமதாஸை சந்திக்க தைலாபுரம் தோட்டம் சென்ற அன்புமணியிடம் பல விசயங்களை எடுத்துப் புரியவைத்துள்ளார் ராமதாஸ்.

அதிமுக அணிக்குப் போனால் குறைந்த பட்ச உத்தரவாதம் உண்டு. 5 எம்பி சீட்டுகளைக் கட்டாயம் வெல்ல முடியும். பாஜக மத்திய அமைச்சர் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் நம் கட்சிக்கே வேட்டு வைப்பார்கள். கட்சியை உடைக்கவும், ரெய்டு நடத்தி அடிபணிய வைக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே இப்போதைக்கு நாம் பாதுகாப்பான முடிவை எடுப்போம்.
அதிமுக அணியை ஆதரிப்போம் என்று ராமதாஸ் கூறிய அனைத்தையும் கேட்டு அன்பு மணி மனம் பழுத்துவிட்டதாம்.

அதை உறுதி செய்வதற்காகச் சேலம் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து கூட்டணி குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். பாமக தங்கள் பக்கம் வரச் சம்மதித்தால் எதையும் செய்து தருகிறோம் என்று எடப்பாடி இறங்கி வந்துள்ளார்.
அப்படியே கடந்த சட்டமன்றத் தேர்தல் போது வன்னியர் உள் ஒதுக்கீடு கொடுத்த விசயத்தையும் எடுத்துக் கூறியுள்ளார் எடப்பாடி. உடனே தொலைப்பேசி வாயிலாக அருள் மூலம் ராமதாசும் அன்புமணியும் எடப்பாடியுடன் பேசி உள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் 10+ 1 என்பதிலிருந்து பாமக கொஞ்சம் இறங்கி வந்ததாகச் சொல்கிறார்கள். மேலும் மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஆரணி, அரக்கோணம், விழுப்புரம், கடலூர், தருமபுரி ஆகிய தொகுதிகள் கட்டாயம் தேவை என்றும் வற்புறுத்தி உள்ளது பாமக தரப்பு.

அதற்கு எடப்பாடி பழனிசாமி வேண்டும் என்றால் எனது சேலம் தொகுதியைக் கூட விட்டுத் தருகிறோம். முதலில் கூட்டணியை உறுதி செய்யுங்கள் என தொலைப்பேசியில் அழுத்தம் தந்துள்ளார் என்றும் தகவல் கசிந்து வருகிறது.
அதிமுக அணிக்குள் பாமக வந்துவிட்டதால் பெரிய அளவுக்கு இலாபம் இல்லை என்றே அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். குறைந்த பட்சம் ஒரு கணிசமான வாக்குகளை அதிமுக அணி பெறுவதற்கு இந்தக் கூட்டணி உதவி உள்ளது. ஆனால், பெரிய வெற்றி அணியாக எல்லாம் மாறாது என்கிறார்கள்.
அது எந்தளவுக்கு உண்மை என்பதைத் தேர்தல் களம் தான் முடிவு செய்யும்.












Click it and Unblock the Notifications