கருத்து கணிப்புகளில் பாஸாகும் தயாநிதி, வைகோ, பொன். ராதா, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன்
சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் பெரும்பாலானவற்றில் தயாநிதி, வைகோ உள்ளிட்ட சிலர் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்றே கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் தொலைக்காட்சிகள், வாரமிருமுறை இதழ்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. பொதுவாக அதிமுக அணிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று கூறுகின்றன கருத்து கணிப்புகள்.
2வது இடத்தை திமுகவும் அதன் பிறகு பாஜக அணியும் பெறும் என்று கூறுகின்றன. அதே நேரத்தில் தொகுதிவாரியான கருத்து கணிப்புகளில் பொதுவாக சில வேட்பாளர்களின் வெற்றியை அனைத்து கருத்து கணிப்புகளே உறுதி செய்து கட்டியம் கூறுகின்றன.

மத்திய சென்னை தயாநிதி மாறன்
இத்தொகுதியில் திமுகவின் தயாநிதி மாறன், அதிமுகவின் விஜயகுமார், தேமுதிகவின் ரவீந்தரன் ஆகியோர் களத்தில் உள்ளனர். இத்தொகுதி நிலவரம் குறித்து தொடக்கம் முதல் நேற்று இரவு இறுதியாக நடத்தியது வரை திமுகவின் தயாநிதி மாறனே வெல்வார் என்கிறது தந்தி டிவி கருத்து கணிப்பு. மேலும் வாரம் இருமுறை இதழ்களான நக்கீரன் மற்றும் ஜூனியர் விகடன் இரண்டுமே மத்திய சென்னையில் தயாநிதிமாறனே வெல்வார் என்று சொல்கின்றன.
பொதுவாக தயாநிதி மாறனின் தொகுதிப் பணிகள், திமுகவின் கட்சி பலம், சிறுபான்மை சமூகத்தினரின் பெரும்பான்மையான வாக்குகள் ஆகியவைதான் அவரது வெற்றிக்கு காரணம் என்று பட்டியலிடுகின்றன இக்கணிப்புகள்.

ஸ்ரீபெரும்புதூர் ஜெகத்ரட்சகன்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுகவின் ஜெகத்ரட்சகன், அதிமுகவின் ராமச்சந்திரன், மதிமுகவின் மாசிலாமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். நகரமும் கிராமங்களும் சார்ந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை ஆய்வு செய்த தந்தி டிவி முதலில் அதிமுகவுக்கு வெற்றி அதிகம் என்றது. ஆனால் இறுதி கணிப்பில் ஜெகத்ரட்சகனுக்கு வாய்ப்பு என்கிறது. அதேபோல் குமுதம் நடத்திய கருத்து கணிப்பில் ஜெகத்ரட்சகனுக்கு அமோக வெற்றி வாய்ப்பு என்று பட்டியலிட்டது. வாரம் இருமுறை இதழ்களான நக்கீரனும் ஜூவியும் கூட ஸ்ரீபெரும்புதூரில் திமுக வெல்வது உறுதி என்கின்றன.

விருதுநகர் வைகோ
விருதுநகர் தொகுதியைப் பொறுத்தவரையில் நக்கீரன் வாரமிருமுறை மட்டும் மதிமுக வேட்பாளர் வைகோ தோல்வி அடைவார். அத்துடன் திமுக வேட்பாளர் ரத்தினவேலு இங்கு வெல்வார் என்கிறது நக்கீரன். இத்தொகுதியில் திமுக சார்பில் ரத்தினவேலு, அதிமுக சார்பில் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் மாணிக்தாகூர் நிறுத்தப்பட்டுள்ளனர். தந்தி டிவி, ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழ், குமுதம் ஆகியவை வைகோதான் வெல்வார் என்கிறது. தந்தி டிவி கூட தொடக்கத்தில் அதிமுகவுக்கே அதிக வாய்ப்பு என்றும் மதிமுகவுக்கு 2வது இடம்தான் என்று கூறியது, ஆனால் இறுதி கணிப்பில் வெற்றி 'உத்தரவாதம்' என்ற முத்திரையை வைகோவுக்கு அளித்தது.

வைகோ மீதான அனுதாபம், தனிமனித செல்வாக்கு...
வைகோ மீதான அனுதாபப் பார்வை, அவரது தனிமனித செல்வாக்கு எல்லாவற்றையும் தாண்டி வைகோவுக்கு இங்கு கணிசமாக கைகொடுத்தது விஜயகாந்த் என்றுதான் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். விருதுநகர் தொகுதிக்கு விஜயகாந்த் வரும் வரை வைகோவின் வெற்றி ஊசலாட்டத்தில் இருந்தது.. அதன் பின்னர் அப்பகுதியில் உள்ள "நாயுடு" "நாயக்கர்" சமூகத்தினர் ஓட்டு பெரும்பான்மையாக வைகோவுக்கு விழும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாக மாறியது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் வைகோ வெல்வது எளிது என்றும் சொல்லப்படுகிறது.

ஈரோடு கணேசமூர்த்தி
ஈரோடு தொகுதியில் மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் செல்வகுமார சின்னையன், திமுகவின் பவித்திரவள்ளி களத்தில் உள்ளனர். அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோவின் வெற்றி விருதுநகரில் ஊசலாட்டம் என்று சொல்லப்பட்ட தொடக்க கருத்து கணிப்புகளின் போது கூட கணேசமூர்த்தி மீண்டும் வெல்வார் என்றே சொல்லப்பட்டது. அதே நேரத்தில் அதிமுகவுக்குத்தான் தொடக்கத்தில் தந்தி டிவி வெற்றி முகத்தை கொடுத்தது. குமுதமும் அப்படியே செய்தது. ஆனால் இறுதி நேர நிலைமை மாறிப் போனது. வாரமிருமுறை இழான ஜூவியும் ஈரோட்டில் கணேசமூர்த்தி வெல்வார் என்கிறது. ஆனால் நக்கீரன் அதிமுகதான் வெல்லும் என்கிறது.

பொன். ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் நிச்சயம் பாஜக வெல்லும் அனைத்து கருத்து கணிப்புகளும் உறுதியாக சொல்வது கன்னியாகுமரி தொகுதியைத்தான் இங்கு பாஜகவின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். தந்தி டிவி, குமுதம், நக்கீரன், ஜூனியர் விகடன் ஆகியவையும் பொன் .ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் என்றே கணித்துசொல்கின்றன.

டி.ஆர்.பாலு
தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளராக டி.ஆர்.பாலு அறிவிக்கப்பட்ட போது சிக்கல்தான் என்று சொல்லப்பட்டது .அந்த அளவுக்கு உட்கட்சி பூசல் கொடி கட்டிப் பறந்தது. ஆனால் போகப் போக நிலைமை மாறியது. தந்தி டிவியின் தொடக்க கருத்து கணிப்பில் திமுக- அதிமுக இடையே குறைவான இடைவெளி என்று சொல்லப்பட்டது. ஆனால் இறுதியில் டி.ஆர்.பாலு வெல்லவே வாய்ப்பு என்கிறது. குமுதம் மிக அதிகமான வாக்குகளை டி.ஆர்.பாலு பெறுவார் என்றது. இதையே ஜூனியர் விகடனும் நக்கீரனும் வழிமொழிந்தும் இருக்கின்றன.












Click it and Unblock the Notifications