கற்பனைக்கோட்டை கட்டும் தேமுதிக- ம.ந.கூ... தேர்தல் வரை நீடிக்குமா?: பொன்.ராதா சந்தேகம்
நாகர்கோவில்: கற்பனைக் கோட்டை கட்டி, வெற்றி பெற்றால் தங்களுக்கு முதல்வர், துணை முதல்வர் என பதவிகளைப் பிரித்துக் கொண்டிருக்கும், தே.மு.தி.க. - மக்கள்நலக்கூட்டணி தேர்தல் வரை நீடிப்பது சந்தேகம் தான் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட பாஜக பெரியோர் சந்திப்பு நிகழ்ச்சி நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, நாகர்கோவில் பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தியை அறிமுகப்படுத்தி பேசினார்.
முன்னதாக செய்தியாளர்கள் மத்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில்,

பெரியோர் சந்திப்பு...
நாகர்கோவிலில் நடைபெறும் பெரியோர் சந்திப்பு நிகழ்ச்சியில் இன்று பங்கேற்கிறேன். நாளை நடைபெறும் தேர்தல் குழு நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்து கொள்கிறேன்.

விதைக்கப்பட்ட பணம்...
தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பு பல இடங்களில் பணம் விதைக்கப்பட்டு உள்ளது. பணம் உள்ளதாக புகார் வந்தால் உடனடியாக தேர்தல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று சோதனை நடத்த வேண்டும். பணத்தை சேகரித்து வைக்க அரசு வாகனங்கள் பயன்படுத்தப்பபடுகிறது.

இருண்ட காலம்...
அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்றால் தமிழகத்திற்கு இருண்ட காலமாகிவிடும். கடந்த 67 ஆண்டுகாலம் நடைபெறும் இருண்டகால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர பாரதீய ஜனதாவால்தான் முடியும்.

கற்பனைக் கோட்டை...
மக்கள் நலக்கூட்டணி அவர்களுக்கு என்று ஒரு கற்பனைக் கோட்டை கட்டி செயல்படுகிறார்கள். அவர் துணை முதல்வர், இவர் மந்திரி என்று கற்பனைக்கோட்டை கட்டுகிறார்கள். மக்கள் நலக் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு கருத்து உள்ளது. இதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடும் உள்ளது.

சந்தேகம்...
தே.மு.தி.க. - வைகோ தலைமையிலான மக்கள் நலக்கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா? என்ற நிலை உள்ளது. கருத்துக்கணிப்புகள் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு சாதகமாக மாறி, மாறி வருகிறது. பணம் படைத்தவர்கள் அவர்கள் வசதிக்கு தக்க கருத்துக்கணிப்பை உருவாக்கி வருகிறார்கள்.

கருத்துக்கணிப்புகள்...
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நடந்த கருத்துக் கணிப்புகள் எல்லாம் பொய்த்து போனது. கருத்துக்கணிப்புகளை நம்ப மக்கள் தயாராக இல்லை. கருத்துக்கணிப்புகளை வைத்து தமிழக மக்களை முட்டாளாக்க முடியாது.

புதிய அரசு...
கூட்டணி கட்சிகளுடன் நாங்கள் பேச்சு நடத்தி வருகிறோம். நாளை அல்லது நாளை மறுநாள் இறுதி முடிவு எட்டி விடும். 60 சதவீத இளைஞர்கள் புதிய அரசு வர விரும்புகிறார்கள். அவர்கள் பாரதீய ஜனதாவை நம்புவதால் எங்களுக்கு முதல் நிலை கிடைக்கும். பின்னால் வருபவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

சிவசேனா...
பாரதீய ஜனதா பெரும்பான்மையான இடங்களை பிடிக்கும். சிவசேனா 30 தொகுதியில் போட்டியிடுவதாக வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். எல்லோரும் இணைந்து போட்டியிடவே நாங்கள் விரும்புகிறோம்' என்றார்.












Click it and Unblock the Notifications