அரசியலுக்கு பிரேமலதா விஜயகாந்த் முழுக்கு..?
சென்னை: தேமுதிகவின் நிலை மோசமாகி விட்டதால் கட்சியைக் காப்பாற்றவும், தன்னால் கட்சி அழிந்தது என்ற நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும், அரசியலை விட்டு ஒதுங்கவும், இனி தேமுதிகவின் எந்த விவகாரத்திலும் தலையிடுவதில்லை என்றும் பிரேமலதா விஜயகாந்த் முடிவெடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதன் முதல் கட்டமாக சமீப காலமாக அவர் தேமுதிக தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருப்பதை சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். இனியும் அவர் கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டார் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் இதெல்லாம் வெறும் டிராமா. மக்களையும், கட்சியினரையும் ஏமாற்ற நாடகம் போடுகிறார்கள். பகிரங்கமாக பிரேமலதா இதை அறிவித்தால்தான் மக்கள் நம்புவார்கள் என்று வி.சி.சந்திரகுமார் உள்ளிட்டோ முன்னாள் அதிருப்தியாளர்கள் கூறியுள்ளனர்.

பிரேமலதா ஆதிக்கம்
கட்சி ஆரம்பித்தது முதலே தனது மனைவி மற்றும் மச்சானைக் கேட்காமல் எதையும் முடிவு செய்ததில்லை விஜயகாந்த். அவர்களுக்கு கட்சியில் அந்த அளவுக்கு மரியாதையும், மதிப்பும் கொடுத்து வைத்திருந்தார். ஆனால் சமீப ஆண்டுகளாக கட்சியில் பிரேமலதா ஆதிக்கம் தலை தூக்கியதாக தேமுதிகவினர் குமுறி வந்தனர்.

விஜயகாந்த்துக்கே மதிப்பில்லை
கட்சியில் விஜயகாந்த்துக்கே மதிப்பில்லை. எல்லா முடிவுகளையும் பிரேமலதாவும், அவரது தம்பியான சுதீஷும்தான் எடுக்கிறார்கள் என்று புலம்பல்கள் வெளியாக ஆரம்பித்தன.

கூட்டணிக் குழப்பம்
இதற்கு முத்தாய்ப்பாக வந்து சேர்ந்தது கூட்டணி குழப்பம். சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவை, கூட்டணியில் இணைக்க திமுக கடுமையாக முயன்றது. ஆனால் பிரேமலதாதான் அதற்கு தடை போட்டு விட்டதாக தேமுதிகவினர் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்தது.

பெரும் தோல்வி
இந்த நிலையில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்த தேமுதிக வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது. ஒரு இடத்திலும் அது வெல்லவில்லை. அதை விட மோசமாக விஜயகாந்த்துக்கே டெபாசிட் கிடைக்கவில்லை. மேலும் தேமுதிகவின் வாக்கு வங்கியும் சுத்தமாக காலியாகிப் போனது.

பிரேமலதா - சுதீஷ் மீது ஆத்திரம்
தேர்தல் தோல்விக்குப் பின்னர் இரு கட்டமாக கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார் விஜயகாந்த். அப்போது சொல்லி வைத்தாற் போல அத்தனை பேருமே, திமுகவுடன் கூட்டணி சேராததுதான் தோல்விக்குக் காரணம். அதேபோல பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் ஆகியோர் ரொம்பவே ஆடி விட்டனர். அவர்களால்தான் கட்சி அழிந்து போய் விட்டது என்று குமுறலை வெளிப்படுத்தினர்.

கரையும் கட்சி
இப்படி ஒரு பக்கம் இருக்கும் கட்சியினர் குமுறும் நிலையில் மறுபக்கம் கட்சி படு வேகமாக கரைந்து போய்க் கொண்டுள்ளது. இதுவரை 4 முன்னாள் எம்.எல்.ஏக்கள், 17 மாவட்டச் செயலாளர்கள் தேமுதிகவை விட்டு போய் விட்டனர். ஜூலை 17ம் தேதி வி.சி.சந்திரகுமார் அணி சேலத்தில் பிரமாண்ட விழா நடத்தி திமுகவில் இணையப் போகிறது. அப்போது மேலும் பல தேமுதிக நிர்வாகிகள் வருவார்கள் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தடுமாறும் விஜயகாந்த்
ஆனால் இப்படி கட்சி கரைந்து போவதைத் தடுக்க முடியாமல் தவித்துக் கொண்டுள்ளார் விஜயகாந்த். கட்சியினரையம் விட முடியவில்லை, மனைவி, மச்சானையும் விட முடியாமல் தவிக்கிறார்.

பிரேமலதா அதிரடி முடிவு
இந்த நிலையில் விஜயகாந்த்துக்கு தர்மசங்கடம் ஏற்படுத்த விரும்பாத பிரேமலதா அதிரடியாக அவரே ஒரு முடிவை எடுத்துள்ளாராம். அதாவது இனிமேல் தேமுதிக விவகாரத்தில் தலையிடுவதில்லை என்ற முடிவுதான் அது. கட்சியை விட்டு ஒதுங்கிக் கொள்ளவும் அவர் முடிவெடுத்துள்ளாராம்.

இனி வர மாட்டார்
சமீபத்தில் நடந்த தேமுதிக இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு வரவில்லை. இனிமேலும் எந்த நிகழ்ச்சிக்கும் அவர் வர மாட்டாராம். இனி கட்சிக்கு வெளியிலிருந்தபடியே கட்சியின் செயல்பாடுகளை அவர் பார்ப்பார் என்கிறார்கள்.

இதெல்லாம் டூப்பு
ஆனால் இதெல்லாம் வெறும் டிராமா. இதையெல்லாம் தேமுதிகவினரும், மக்களும் நம்ப மாட்டார்கள் என்று வி.சி.சந்திரகுமார் அணி கூறியுள்ளது. பிரேமலதாவே பகிரங்கமாக இதைச் சொல்லட்டும். பிறகு பார்க்கலாம் என்று அவர்கள் கூறி விட்டனர்.












Click it and Unblock the Notifications