குன்னூர், சென்னை ராணுவப் பயிற்சிப் பள்ளி விழாக்கள்.. தமிழகம் வந்தார் பிரணாப் முகர்ஜி
கோவை: இரண்டு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தமிழகம் வந்தடைந்தார். குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சிப் பள்ளியில் நடைபெறும் விழாவில் பங்கேற்க அவர் வருகை தந்தார்.
விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்த பிரணாப் முகர்ஜியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் பூங்கொத்து கொடுத்தது வரவேற்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரணாப் முகர்ஜி குன்னூர் சென்றார்.

குன்னூரில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு விட்டு கோவையில் இருந்து தனி விமானத்தில் சென்னைக்கு புறப்படுகிறார். சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வரும் குடியரசத்தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் காரில் ராஜ்பவன் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டு செல்கிறார். இரவு 7 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்துக்கு குடியரசுத்தலைவர் வருகிறார். அங்கு விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விட்டு இரவு 9 மணிக்கு மீண்டும் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டு செல்கிறார்.
2வது நாளான சனிக்கிழமையன்று அதிகாலை 6.40 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்கு வருகிறார். அங்கு ராணுவ பயிற்சி முடித்துவிட்டு பணிக்கு செல்லும் அதிகாரிகள் விழாவில் கலந்துகொள்கிறார்.
குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி மதியம் 12 மணிக்கு பரங்கிமலையில் இருந்து சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்கும் வங்கி விழாவில் கலந்துகொள்கிறார். மதியம் 1.45 மணிக்கு விழாவை முடித்துக்கொண்டு மதியம் 2.15 மணிக்கு மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்துக்கு வந்து சேருகிறார். அங்கு வழியனுப்பு விழா நடக்கிறது. அதன்பின்னர் மதியம் 2.20 மணிக்கு தனி விமானத்தில் பிரணாப் முகர்ஜி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
குடியரசுத்தலைவரின் வருகையை முன்னிட்டு டெல்லியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு சிறப்பு படையை சேர்ந்த 40 அதிகாரிகள் சென்னை வந்தனர். அவர்கள் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இடங்கள், விமான நிலையம், ராணுவ பயிற்சி மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குடியரசுத்தலைவர் வருகைக்காக சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications