தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம்... சபதம் ஏற்றுள்ள மாடுபிடி வீரர்கள்
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை கண்டித்து மதுரை மாவட்டம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தவும் தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கி அமல்படுத்த வேண்டும். தடையை நீக்காவிட்டால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 6 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதேபோல், ஊமச்சிகுளத்தில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சத்திரபட்டி அருகேயுள்ள காஞ்சரம்பேட்டை பகுதியில் காளை வளர்ப்போர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளர்கள், மாடுபிடி வீரர்கள் என ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர்.
எஸ்.ஆலங்குளம் பகுதியிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ளதால், சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, கூலமேடு கிராமத்தில், வாடிவாசல் பகுதி பொதுமக்கள் கண்களில், கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து கடந்த 7ம் தேதி அறிவிக்கை வெளியிட்ட மத்திய அரசு, ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று சிக்னல் கொடுத்தது. இதனையடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் ஜல்லிக்கட்டுக்கு தயாராகுமாறு தமிழக மக்களுக்கு உத்தரவிட்டார்.

உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
இதனை எதிர்த்து பீட்டா உள்ளிட்டபல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவே, மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசின் அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்ததோடு, ஜல்லிக்கட்டு நடத்தவும் தடை விதித்து உத்தரவிட்டனர். இதனால் ஏமாற்றமடைந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மீண்டும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.

பாலமேட்டில் உண்ணாவிரதம்
மாட்டுப்பொங்கலுக்கு இன்னும் ஒரு தினம் மட்டுமே உள்ளதால் பாலமேட்டில் கடைகளை அடைத்து எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. 3வது நாளாக இன்று மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாடிவாசல் பகுதியில் இருந்து பேருந்து நிலையம் வரை கறுப்புக்கொடிகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

அலங்காநல்லூரில் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு பிரபலமான அலங்காநல்லூரிலும் மூன்றாவது நாளாக இன்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலூர் அருகே மாடுகளுடன் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாகும் வரை உண்ணாவிரதம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று மாடு பிடி வீரர்கள், மாடு வளர்ப்போர் ஐம்பது பேர் சாகும் வரை உண்ணாவிரதத்தை துவக்கினர். தமிழர்களின் பராம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோரிக்கை குறித்து ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மூலம் அரசுக்கு தெரிவிப்பதாக உறுதியளித்தனர். அதையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. பின் அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி காளைகளுடன் தல்லாகுளம் தபால் தந்தி அலுவலகம் முன்பு மறியலிலும் ஈடுபட்டனர். அங்கும் போலீசார் கேட்டு கொண்டதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

சேலத்தில் கறுப்புத்துணி
சேலம் மாவட்டம் ஆத்தூரில் பொங்கலை ஒட்டி, 18ம் தேதி, இங்கு ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். இந்நிலையில், தடை விதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், நேற்று மாலை, 3:00 மணியளவில், வாடிவாசல் பகுதியில், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், ஊர் முழுவதும், கறுப்பு கொடி கட்டியும், தங்களது கண்களில் கறுப்பு துணி கட்டியும் எதிர்ப்பை தெரிவித்தனர்; பெண்கள், ஒப்பாரி வைத்து அழுதனர்.மாடுபிடி வீரர்கள், 10 பேர், பஞ்சாயத்து அலுவலகம் எதிரே உள்ள, 60 அடி உயர மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி மீது ஏறி, தற்கொலை செய்வதாக, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தடையை மீறுவோம்
தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கி அமல்படுத்த வேண்டும். தடையை நீக்காவிட்டால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்றார்.

சிவகங்கை போராட்டம்
சிவகங்கை அருகே, ஜல்லிகட்டிற்கு அனுமதி வழங்க கோரியும், பீட்டா அமைப்பிற்கு தடைவிதிக்க கோரியும் 22 கிராம மக்கள் ஒன்றிணைந்து காளைகளுடன் மறியலில் ஈடுபட முயன்றனர். காவல்துறையினரின் சமாதானத்தைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி புதூர் கிராமத்தை சேர்ந்த ஜல்லிகட்டு ஆர்வளர்கள் மற்றும் இளைஞர்கள் அங்குள்ள தர்ம முனீஸ்வரர் ஆலயம் ஏதிரே 10ற்கும் மேற்பட்டவர்கள் மொட்டையடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மறியல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை மறியல், ஆர்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஜல்லிக்கட்டு ஆர்வளர்கள் ஈடுபட்டனர். சத்தியமங்கலம் கிராம மக்கள் திருச்சி புதுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தடையை மீறி மஞ்சுவிரட்டு
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே வீரளூர், மேல் சோழங்குப்பம், பாலுார் மேல் பாலுார், காந்தப்பாளையம், ஆதமங்கலம் புதுார் உட்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொங்கல் விழாவை முன்னிட்டு, மஞ்சு விரட்டு விழா நடத்துவதற்காக, நுாற்றுக்கும் மேற்பட்ட காளைகளை பயிற்சியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.நீதிமன்றம் தடை விதித்தாலும், திட்டமிட்டபடி பொங்கல் விழாவில், மஞ்சு விரட்டு விழா நடத்துவோம். மீறி போலீசார் கைது செய்தாலும், சிறைக்கு செல்ல தயாராக உள்ளோம்' என கிராம மக்கள் கூறியுள்ளனர்.

ரோக்ளா ரேஸ்
நாகை மாவட்டம் திருக்கடையூரில் ரேக்ளா ரேசுக்கு தடை விதித்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் 1 மணி நேரம் நாகை, சென்னை இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சீமான் அறிவிப்பு
சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவு அளித்த நடிகைகள் எமி ஜாக்சன், நக்மா மற்றும் வித்யாபாலன் ஆகியோருக்கும் சீமான் கண்டனம் தெரிவித்தார்.
குதிரைப் பந்தயம் மற்றும் யானைப் பந்தயம் போன்றவற்றிற்கு தடை கோராத சிலர், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மட்டும் தடை கோருவது நியாயமற்றது என்றும் சீமான் கூறியுள்ளார்.

காளைகள் வாடிவாசல் வருமா?
பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று இன்னமும் நம்பிக்கையுடன் வாடிவாசல்கள் அலங்கரிக்கப்பட்டன. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் வாடிவாசல்கள் களைகட்டின. ஆனால் உச்சநீதிமன்றத்தின் திடீர் தடையால் ஜல்லிக்கட்டு ஆர்வலகர்கள் ஏமாற்றமடைந்தனர். காளைகள் வாடிவாசல் வருமா? என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?












Click it and Unblock the Notifications