என்னது திண்டுக்கல்லில் டெங்கு உயிரிழப்புகளே இல்லையா? அமைச்சர் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை
திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு உயிரிழப்புகளே இல்லை என அமைச்சர் சீனிவாசன் கூறியுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
திண்டுக்கல்: டெங்கு பாதிப்பால் உயிரிழப்புகள் திண்டுக்கல் மாவட்டத்தில் இல்லை என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மனித உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதுவரை 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 40 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். ஆனால் மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் 18 பேர்தான் உயிரிழந்துள்ளதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

திண்டுக்கல்லில் டெங்கு இல்லை
இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பே இல்லை என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இத்தனைக்கும் டெங்குவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டங்களும் கூட நடைபெற்றன.

ஐ. பெரியசாமி கண்டனம்
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில்தான் முதலில் டெங்கு பலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு பலி ஏற்பட்டது. ஆனால் அமைச்சர் சீனிவாசன் உண்மைக்கு புறம்பாக கூறியிருக்கிறார் என்றார்.

சீனிவாசன் பேச்சால் கடும் அதிருப்தி
திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டியைச் சேர்ந்த சூசைராஜ் மகள் செர்லின்பவிஸ்கா (வயது9), கன்னிவாடி அருகே குட்டத்து ஆவாரம்பட்டியைச் சேர்ந்த தோமையார் மகன் ஆல்பர்ட் (வயது 13), சாணார்பட்டி அருகே நத்தமாடிப்பட்டி நாகராஜன் மகள் பூஜா (வயது9) என திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 45 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் சீனிவாசன் பேச்சு திண்டுக்கல் மாவட்ட மக்களை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications