கட்சி, ஆட்சி இரண்டிலும் சசிகலா நடராஜன் ஆதிக்கம்.. ஜெயலலிதா விருப்பத்திற்கு எதிராக தடாலடி மூவ்கள்!
அதிமுக கட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நிர்வாகத்தில் சசிகலா நடராஜன் தலையீடு அதிகரித்துள்ள நிலையில், ஜெயலலிதாவின் விருப்பத்திற்கு மாறாக அவர் முடிவுகளை எடுக்க தொடங்கியுள்ளார்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி மற்றும் கட்சி நிர்வாக முடிவுகளுக்கு நேர் எதிராக அவரது தோழி சசிகலா செயல்பட்டு வருகிறார் என கொதித்துப்போயுள்ளனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
அப்பல்லோவில் ஜெயலலிதா அட்மிட்டாகி கிட்டத்தட்ட 41 நாட்கள் ஆகிறது. இந்த 41 நாட்களும் ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வமற்ற கேர் டேக்கராக இருக்கிறார் சசிகலா.
ஆட்சியிலும் கட்சியிலும் உச்சபட்ச அதிகாரம் செலுத்துபவராக இருக்கிறார். இந்த சூழலில், ஜெயலலிதாவின் உத்தரவுகளுக்கும் முடிவுகளுக்கும் எதிராக சசிகலா செயல்படுவதாக அதிமுகவின் மேலிட தலைவர்களிடம் எதிரொலிக்கிறது.

தமிழக நலனுக்காக ஜெயலலிதா எதிர்ப்பு
அவர்களிடம் நாம் பேசியபோது இந்த முணுமுணுப்பை கேட்க முடிந்தது., மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை தமிழகத்தின் நலன் சார்ந்து அணுகுவதே ஜெயலலிதாவின் சிந்தனை. அதனால்தான் தமிழக நலன்களுக்கு எதிரான மத்திய அரசின் மின்சார சீர்த்திருத்த திட்டம் (உதய்), தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், புதிய கல்வி கொள்கை உள்ளிட்டவைகளை தொடர்ச்சியாக எதிர்த்து வந்தார்.

சசிகலாவை கைக்குள் போட்ட மத்திய அரசு
அதேசமயம், அந்த திட்டங்களில் பல திருத்தங்களையும் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதனை மத்திய அரசு ஏற்கவில்லை ; அதனால் அவைகளுக்கு ஜெயலலிதா ஒப்புதலும் தரவில்லை. ஆனால், தற்போது ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த உண்மைகளை அறிந்த மத்திய அரசு, அதிகாரமிக்கவராக வலம் வரும் சசிகலாவை அரசின் உயரதிகாரிகள் மூலமாக பேச வேண்டிய தொனியில் பேசியது.

ஜெயலலிதாவுக்கு எதிரான முடிவு
சசிகலாவின் உத்தரவுகளுக்கேற்ப அமைச்சர்களும் அதிகாரிகளும் செயல்பட்டு வருவதால், தொடர்ச்சியாக ஜெயலலிதா எதிர்த்து வந்த மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க அவர்களுக்கு உத்தரவு போட்டார். அதற்கேற்ப கேபினெட்டில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இது ஆட்சி ரீதியாக ஜெயலலிதாவின் முடிவுகளுக்கு எதிரானது.

கட்சி ரீதியாகவும் எதிர் முடிவு
அதேபோல, சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் உட்பட 12 பேரை கட்சியை விட்டு நீக்கினார். அவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என கடுமையாக உத்தரவும் போட்டார் ஜெயலலிதா. ஆனால், இன்றைக்கு நடராஜனை தவிர அத்தனை பேரும் அப்பல்லோவுக்கு வந்து சசிகலாவை பார்த்து பேசி விட்டு செல்கிறார்கள். பல்வேறு காரியங்களை செய்ய அவர்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷனும் கொடுத்து வருகிறார் சசிகலா.

நீண்ட ஆலோசனைகள்
மேலும், அப்பல்லோவுக்கு நடராஜன் வருவதில்லையே தவிர, அவரின் ஆலோசனையைப் பெற்றே முடிவுகளை எடுக்கிறார் சசிகலா. இதற்காக, தினமும் இரவு நேரங்களில் நீண்ட நேரம் தொலைபேசிகளில் உரையாடல் நடக்கிறது. இது, கட்சி ரீதியாக ஜெயலலிதாவின் உத்தரவுகளுக்கு எதிரானது என்று விவரிக்கிறார்கள் சீனியர் ரத்தத்தின் ரத்தங்கள்.












Click it and Unblock the Notifications