முதல்வர் ஆவதற்கு விஜயகாந்துக்கு என்ன தகுதி இருக்கு?: சீமான் ஆவேசம்
காஞ்சிபுரம்: தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதல்வராவதற்கு என்ன தகுதி உள்ளது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரியில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
முதல்வராவதற்கு விஜயகாந்திற்கு என்ன தகுதி உள்ளது? மக்கள் நலக் கூட்டணியில் உள்ள திருமாவளவன் தியாகம் மற்றும் போராட்டத்திற்கு விஜயகாந்த் ஒரு துளி கூட ஈடாக மாட்டார்.
6 மாதத்திற்கு முன்பே அவர் மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்திருக்க வேண்டியது தானே? ஏன் தற்போது சேர்ந்துள்ளார்? தமிழகத்தை தமிழனால் ஆள முடியவில்லை. தமிழன் என்று கூறும் திராவிடர்களே ஆட்சி செய்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டு அது தேசிய விளையாட்டாக அறிவிக்கப்படும். எங்கள் ஆட்சியில் தரமான கல்வி, நல்ல குடிநீர், சாலைவசதி, தடையில்லா மின்சாரம், அனைவருக்கும் சமமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
திமுகவும், அதிமுகவும் தான் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டுள்ளன. மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு அளித்தால் மட்டும் கடந்த 50 ஆண்டுகளில் செய்யாததை எல்லாம் இந்த 5 ஆண்டுகளில் செய்து விடுவார்களா?
யாரையும் நம்பி பலன் இல்லை என்பதால் நாம் தமிழர் கட்சி தேர்தல் களத்தில் குதித்துள்ளது. எங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications
