பசுமை நிறைந்த நினைவுகளே... எஸ்.கே.வி பள்ளி மாணவர்களின் மலரும் நினைவுகள்!!
மதுரை: இந்த இடத்திலதான் நான் எப்பவுமே உட்கார்ந்து படிப்பேன்... எனக்கு கணக்கு சரியாவே வராது சார்தான் ஸ்பெஷல் கோச்சிங் கொடுத்து 150 மார்க் வாங்க வச்சாரு... கெமிஸ்ட்ரி சார் எப்பவுமே அடிக்கவே மாட்டாரு... இவை எல்லாம் ஸ்ரீ கந்தசாமி வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ படித்த மாணவர்களின் மலரும் நினைவுகள்.
75வது ஆண்டு பவளவிழா கொண்டாட்டங்கள் ஒருபுறம் களைகட்ட 1990களில் இருந்து கடந்த 2014ம் ஆண்டுவரை ஸ்ரீ கந்தாசாமி வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு ஆகஸ்ட் 15ம் தேதியன்று பாப்புநாயக்கன்பட்டியில் நடைபெற்றது.
நீண்ட நாள் கழித்து சந்தித்த பள்ளிக்கால நண்பர்கள் தங்களின் பழைய நினைவுகளை பசுமையாக அசைபோட்டவாரே மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.

வெளிநாட்டில் இருந்து
பழைய மாணவர்களின் சந்திப்புக்காகவே துபாய், அமெரிக்காவில் பணிபுரியும் நண்பர்கள் வந்திருந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். இந்த ஒரு நாளுக்காகவே காத்திருந்தோம் என்று கூறி தங்களின் பழைய நினைவுகளை அசைபோட்டனர்.

உதவி பேராசிரியர்
1991 பேட்ச் முரளி கிருஷ்ணன் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் உதவி பேராசிரியாக இருப்பதை பகிர்ந்து கொண்டார். 1992 பேட்ச் மாணவர்களில் போட்டி போட்டு படித்த லட்சுமியும் பாப்பையனும் விவசாயக் கல்லூரியில் படித்துள்ளனர். இதில் பாப்பையன் விவசாயத்துறை சார்ந்த நிறுவனத்தில் மிகப்பெரிய பணியில் இருப்பதாக கூறினார்.

விவசாயி சுந்தரமூர்த்தி
நான் மேனேஜரா இருக்கேன், நான் ஆசிரியராக இருக்கேன் என்று பலரும் கூற... சுப்லாபுரம் சுந்தரமூர்த்தியோ நான் விவசாயியாக இருக்கிறேன் என்று கூறினார். அவர் சொன்ன உடன் அரங்கத்தில் கரவொலி அடங்க சற்று நேரம் ஆனது.

ஞாபகம் வருதே…
மாணவர்களின் சேட்டைகளையும்... அவர்களின் செயல்பாடுகளையும் ஒவ்வொன்றாக நினைவுபடுத்தி பேசி பழைய நினைவுகளை அசைபோட்டார் கணித ஆசிரியர் ஷேக் முகபூப். ஆசிரியரை அண்ணா என்று அழைத்த மாணவிகளைப் பற்றியும் பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.

நினைச்சது நடந்தது
டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும் பள்ளிக்குப் பிள்ளைதான். மாணவர்கள் பலரும் அரசு வேளையில் இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும், தொழிலதிபர்களாக இருந்தாலும் ஆசிரியர்களுக்கு என்றைக்கும் மாணவர்கள்தான். அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் நினைத்தது நிறைவேறியது என்று மகிழ்ச்சி பொங்க கூறினார் வேதியியல் ஆசிரியரும் இன்றைய தலைமை ஆசிரியருமான எஸ். இளமாறன்.

ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு
ஏணிப்படிகளாய் இருந்து வாழ்க்கையில் உயரவைத்த ஆசிரியர்களுக்கு அன்புடன் நினைவு பரிசு அளித்து மகிழ்ந்தனர் பழைய மாணவர்கள்.

என்றும் இளமை
ஆகஸ்ட் 15 சுதந்திரதினம் என்பது இந்தியராய் பிறந்த அனைவராலும் மறக்கமுடியாது. அதே நாள் எங்கள் ஆசிரியருக்கும் பிறந்தநாள். என்றும் இளமையாய் இருக்கும் ஆசிரியருக்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தனர் மாணவர்கள்.

மாணவர்களுக்கு மரியாதை
பள்ளிக்கு வந்த பழைய மாணவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பொன்னாடை போர்த்தி மகிழ்வித்தார் தலைமை ஆசிரியர் இளமாறன். பள்ளியில் 1940ம் ஆண்டு படித்த மாணவர் ஒருவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

மலரும் நினைவுகள்
ஆண்டுகள் பல ஆனாலும், குடும்பம், குழந்தைகள், பணிச்சூழல் என பிசியான வாழ்க்கையிலும் பழைய மாணவர்கள் அனைவரும் சந்தித்து அசைபோட்டது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஆகஸ்ட் 15ல் சந்திக்கணும்
இனி ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி பழைய மாணவர்கள் சந்திப்பு நடைபெறவேண்டும். அடுத்த வருஷம் எல்லோரும் குடும்பத்தோடு அவசியம் வரணும் என்று ஆசிரியர்கள் கூற பள்ளியையும் உடன் படித்த நண்பர்களையும் விட்டு பிரிய மனமின்றி பிரிந்தனர்.












Click it and Unblock the Notifications