கருணாநிதி வைர விழாவுக்காக ஒன்று கூடும் எதிர்க்கட்சிகள்... ஆட்டத்தை கலைக்க ரெய்டு வரலாம் என தகவல்!
எதிர்க்கட்சிகள் கருணாநிதியின் வைரவிழாவில் ஒன்று கூடுவதால் அதனை கலைக்கும் வகையில் திடீர் ரெய்டுகள் வரும் என்று பேச்சு அடிபடுகிறது.
சென்னை : திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்பது அரசியல் ரீதியானது அல்ல என்று கூறப்பட்டாலும் குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்கும் வேளையில் இவர்கள் ஒன்றுகூடுவது நல்லதல்ல என்று பாஜக நினைப்பதால் விரைவில் திமுக முக்கிய புள்ளிகள் வீடுகளில் ரெய்டுக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபையில் அடியெடுத்த வைத்து 60 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னையில் வைர விழா கொண்டாடப்படுகிறது, அவரது அவரது 94வது பிறந்தநாளான ஜூன் 3ம்தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் சிறப்பான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
விழாவிற்கு யார் யாரையெல்லாம் அழைப்பது என ஸ்டாலின் பட்டியலிட அதன்படி ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி பாஜக அல்லாத மற்ற மாநிலக் கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளுக்கு அழைப்பிதழ்களைக் கொடுத்துள்ளார். லாலுபிரசாத் யாதவ், ராகுல் காந்தி, நித்திஷ் குமார், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி திரளும் எதிர்க்கட்சிகள்
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வேண்டுகோளை ஏற்று, ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாயாவதி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பொது வேட்பாளரை நிறுத்த ஆலோசனை செய்து வருகின்றனர்.

சரியல்ல
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கலாமா அல்லது வேறு யாரை பரிந்துரைக்கலாம் என்று டெல்லியில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான கூட்டங்கள் அனல் பறக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறும் கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடுவது சரியானதல்ல என்று பாஜக கருதுகிறதாம்.

தயாராகும் ரெய்டுகள்
இதனால் இந்த விழாவை குழப்பும் வகையில் திட்டமிடல்கள் நடப்பதாக சொல்லப்படுகிறது. திமுகவின் முக்கிய புள்ளிகள் வீட்டில் ரெய்டு நடத்தி அதன் மூலம் ஆட்டையை கலைத்துவிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வருமான வரி மற்றும் சிபிஐயில் இருந்து கசிந்த சில தகவலின் படி விரைவிலேயே அடுத்த ரெய்டு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

என்ன பலன்
ரெய்டு நடக்கும் பட்சத்தில் கூட்டத்திற்கு போகலாமா, வேண்டாமா என்ற மன நிலைக்கு கட்சிகளைத் தள்ளி விடலாம் என்று கணக்கு போடப்பட்டுள்ளதாம். ஆனால் இதற்கு கட்சிகள் பயப்படுமா என்பது சந்தேகம்தா்.

சமிஞ்சை
பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவும் நேற்று பிரதமர் கட்டபஞ்சாயத்து செய்கிறார் என்று ஸ்டாலின் சொன்ன கருத்துக்கு படு டென்ஷன் ஆகி விட்டார். இதுகுறித்து அவர் கருத்து கூறியபோது, பிரதமர் குறித்து கூறியவற்றிற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார். அந்த விளைவு.. ரெய்டாக இருக்கலாம் என்றும் விஷயம் தெரிந்தவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications