கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 32 காரைக்கால் மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
நாகப்பட்டினம்: கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேலு, செல்லத்துரை, அன்பழகன் ஆகியோருக்கு சொந்தமான 3 விசைப்படகுகள் மற்றும் பட்டினச்சேரியைச் சேர்ந்த பொன்னுசாமிக்கு சொந்தமான 1 விசைப்படகு ஆகியவற்றில் 32 மீனவர்கள் கடந்த 15ம் தேதி மாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

அவர்கள் நேற்று முன்தினம் கோடியக்கரை அருகே சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகக் கூறி அவர்கள் 4 விசைப்படகுகளையும் சுற்றி வளைத்து 32 மீனவர்களையும் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். தற்போது மீனவர்கள் அனைவரும் திரிகோணமலையில் தங்க வைகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலுக்கு சென்ற மீனவர்கள் நேற்று காலையில் கரைக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரை திரும்பாமல் உள்ளதால் ஒருவேளை அவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்திருக்கக்கூடுமோ என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications