ரெடியாகும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை செட்! 20 நுழைவு வாயில்கள்.. விஜய் மாநாடு திடல் நேரடி விசிட்
விக்கிரவாண்டி: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டுக்கான நுழைவு வாயிலின் முகப்பில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் தேற்றத்தை அமைக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
வரும் 27 ஆம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருக்கிறது. அதற்காகப் பந்தக்கால் நடும் விழா கடந்த 4 ஆம் தேதி அதிகாலை நடைபெற்றது. அப்போதே 3 ஆயிரம் பேர் கூடினார்கள் எனச் சொல்லப்படுகிறது. இந்த ஊரில் உள்ள கிராமத்து மக்களும் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடியதாகச் சொல்கிறார்கள்.

இந்த மாநாடு நடைபெற உள்ள மைதானம் ஒட்டியே முன்பக்கமாக தேசிய நெடுஞ்சாலை இருக்கிறது. அதேபோல் பின்பக்கம் அகல ரயில் பாதையும் இருக்கிறது. கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது ரயில் பாதையில் போய் யாரேனும் அசம்பாவித செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காக அந்த ரயில் தண்டவாளம் போகும் பகுதியை இரும்பு கம்பி வேலிகள் அமைத்து முழுதாக தடுத்து வருகிறார்கள். விக்கிரவாண்டி அருகே வி சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அச்சுத ஆஞ்சநேயர் ஆலயம்தான் சரியான லேண்ட் மார்க். இந்த மைதானத்தில் 80 அடி உயரத்திலும் 80 அடி அகலத்திலும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை முகப்பாக அமைக்க உள்ளனர். தற்போதைக்கு இந்த மைதான முன்னால் தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு நடைபெறும் திடல் என ஒரு பெரிய பதாகை வைத்துள்ளனர்.
இந்த மாநாட்டுக்கு மொத்தம் இரண்டு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட உள்ளது. ஆஞ்சநேயர் கோயில் அருகில் ஒரு நுழைவாயிலும் அடுத்து சில மீட்டர் தள்ளி பின்பக்கமாக ஒரு நுழைவாயிலும் அமைத்து வருகின்றனர். பின்பக்கம் உள்ள வாயில் வழியேதான் விஜய் மாநாட்டுப் பந்தலுக்குள் செல்ல இருக்கிறார். அதற்கான வசதிகள் அங்கே செய்யப்பட்டும் வருகின்றன. மொத்தம் 180 ஏக்கர் என்று சொல்லப்படுகிறது. அதில் தேவையான அளவு மட்டுமே மாநாட்டுக்கு எடுத்துள்ளனர்.
இந்த மாநாட்டுக்காக 2 ஏக்கர் நிலத்தைக் கொடுத்துள்ளவர் ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் என மொத்தம் 20 ஆயிரம் தவெக தரப்பிலிருந்து அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அப்படிப் பார்த்தால் இந்த இடத்திற்காக சுமார் 20 லட்சம் ரூபாய் வாடகையாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என எடுத்துக் கொள்ளலாம். இந்த இடத்தில் இதற்கு முன்பாக திமுக ஒரு மாநாடு நடத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தேர்தல் சமயத்தில் ஒரு கூட்டம் நடத்துவதாக இருந்துள்ளது. இறுதியில் இடைத் தேர்தல் புறக்கணிப்பு செய்தலால், அது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த வி சாலை சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் விஜய் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்துவதைப் பெருமையாகப் பார்க்கிறார்கள். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர் இந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இவர்கள் அனைவரும் விஜய் ரசிகர்கள். சில பெரியவர்கள் கூட விஜய் வருகையைப் பற்றி நேர்மறையாகவே கருத்துச் சொல்கிறார்கள். இரண்டு ஏக்கர் நிலத்தை வாடகைக்குக் கொடுத்தவர், 'பந்தக்கால் நட்ட விழா அன்றே அது வெற்றி மாநாடு என்பது புரிந்துவிட்டது. அந்தளவுக்கு ஒரு வரவேற்பும் கூட்டமும் விஜய்க்கு உள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது’ என்கிறார்.

இந்த இடத்தின் அருக்கேதான் சூர்யா காலேஜ் உள்ளது. அதன் பக்கத்தில் 35 ஏக்கர் நிலத்தில் கார் பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திடல் பின்பக்கமும் ஒரு வாகன நிறுத்துமிடம் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதற்காக இடங்களைத் தரைமட்டமாகச் சரி செய்ய ஜேசிபி இயந்திரங்கள் வேலை செய்து வருகின்றன. பந்தல் அமைப்பதற்கான இரும்பு தூண்கள் நிறைய வந்துள்ளன. மாநாட்டுப் பந்தலில் மொத்தம் 20 வழிகள் உள்ளன. 10 உள்ளே போவதற்கும் 10 வெளியேறுவதற்குமான என்று திட்டமிட்டுச் செய்து வேலை வருகின்றனர். இந்தத் திடலில் உள்ள கிணறுகளைத் தற்காலிகமாக மூடும் வேலைகள் நடக்கின்றன.
இந்த மாநாட்டுக்கான உபகரணங்கள் விசிக உளுந்தூர்பேட்டையில் நடத்திய இடத்திலிருந்தே கொண்டுவரப்படுகின்றன. இரண்டு பந்தலையும் ஒரே நிறுவனம்தான் ஒப்பந்தம் எடுத்துள்ளது. இங்கே வேலை செய்யும் ஆட்கள் விசிகவைவிட அதிக கூட்டம் வரும் என்றே சொல்கிறார்கள். ஆக மொத்தம் 4 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டை ஒழுங்காக நடத்துவதற்காக 10 ஆயிரம் தன்னார்வலர்கள் களம் இறக்கப்பட உள்ளனர். மேலும் மாவட்டம் தோறும் நிர்வாகிகள் போடப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications