தெங்குமரஹடா கிராமத்துக்கே வந்த சுப்ரியாசாகு ஐஏஎஸ்.. காட்டை விட்டு வெளியேறும் மக்களின் அன்பு இதுதான்
ஊட்டி: ஈரோடு மாவட்டத்தின் எல்லையில் உள்ள தீவு பகுதியான நீலகிரி மாவட்டம், தெங்குமரஹடா கிராமத்தினரை அடர்ந்த வனப்பகுதியில் இருந்து பவானிசாகர் அணை அருகே மறுகுடியமர்வு செய்வது குறித்து வனத்துறை செயலர், ஈரோடு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட தெங்குமரஹாடா மாயாற்றின் அமைந்துள்ள ஒரு அடர்ந்த தீவு பகுதியாகும். மிக அழகான இந்த கிராமத்திற்கு வெளியாட்கள் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது.

தெங்குமரஹாடா கிராமத்துக்கு செல்ல நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களை கடந்து தான் போக முடியும். மேட்டுப்பாளையத்திலிருந்து சத்தியமங்கலம் வழியாக பவானிசாகர் சென்று, அங்கிருந்து சுமார் 25 கி.மீ.,அடர்ந்த வனப்பகுதி வழியாக தெங்குமரஹாடா கிராமத்துக்குச் செல்ல வேண்டும். இந்த கிராமத்துக்குச் செல்ல, கோத்தகிரி, மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை, மாலை என 2 அரசுப் பேருந்துகள் மட்டும் உள்ளன. வேறு எந்த பேருந்தும் அங்கு செல்ல முடியாது.
அடர்ந்த வனத்துக்குள் பயணித்து சென்றாலும் இந்த அரசு பேருந்துகள் தெங்குமரஹாடா கிராமத்துக்குள் நுழையமுடியாது . ஏனெனில் கல்லாம்பாளையம் வழியாக ஓடும் மாயாறு ஓடுகிறது. ஆற்றுக்கு முன்பாகவே பேருந்து நிறுத்தப்பட்டு விடும். ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தால் மட்டுமே பரிசல் மூலமாக மக்கள் கிராமத்துக்குள் செல்ல முடியும். கடந்த 1948ல் உருவான தெங்குமரஹடா கிராமம் பயிரிடுவதற்காக 100 ஏக்கர் நிலம் தெங்குமரஹடா கூட்டுறவு சங்கத்துக்கு கொடுக்கப்பட்டது. பின்னர் 500 ஏக்கர் வன நிலம் குத்தகையாகவும் அரசு வழங்கியது.
இந்த தெங்குமரஹடா கிராமம் தான் முதுமலை புலிகள் சரணாலயத்தின் கிழக்கு எல்லைப்பகுதியாக உள்ளது. தெங்குமரஹடா கிராமத்தை சுற்றி உள்ள நிலப்பரப்பு இந்தியாவில் எங்குமே காண முடியாத ஒரு அபூர்வமான நிலப்பரப்பு. சுற்றிலும் தீவு போல் உள்ள இந்த பகுதியை சுற்றிலும், புலி, யானை, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட விலங்குகள் அதிகம் காணப்படுகின்றன. அண்மையில் நடந்த புலிகள் கணக்கெடுப்பில், தெங்குமரஹடா கிராமத்தை சுற்றி 33 புலிகள் இருக்கின்றன
இதனிடையே மனிதர்கள் - விலங்குகள் மோதல் கருதி, வனப்பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றி வேறுபகுதியில் குடியேற்ற தமிழக அரசு முடிவு செய்தது. 2011ல், நிலத்தை திரும்ப எடுத்துக் கொள்வதற்கான பரிந்துரையை கோவை வன அதிகாரி வழங்கினார். இதனிடையே நீலகிரி மாவட்டம், குன்னுார் சப் - கலெக்டர் கிராம மக்களை கணக்கெடுத்து அறிக்கையும் அளித்தார்,
அரசின் அறிவிப்பின் படி, தெங்குமரஹடா கிராமத்தில், 497 குடும்பங்கள் உள்ளன. குடும்பங்களை வேறு இடத்தில் மாற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்றம் கலந்தாய்வு கூட்டம் நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து கிராமத்தினர் அடங்கிய கூட்டத்தில், சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் சரணாலயத்தின் கள இயக்குனர்கள், மசினகுடி பகுதி, கோவை மாவட்ட வனத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கிராமத்தினருடன் விரிவான விவாதமும் நடந்தது. போதிய இழப்பீடு அளித்தால், வேறு இடத்துக்கு குடிபெயர ஒப்புதலும் மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து கிராமத்தில் வசிக்கும் 497 குடும்பங்களுக்கும் தலா, 15 லட்சம் ரூபாய் என்ற கணக்கில், 74.55 கோடி ரூபாய் நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டது. தமிழக அரசுக்கும் இதற்கான பரிந்துரை, 2022 அக்டோபரில் அனுப்பி வைக்கப்பட்டது
இதையடுத்து, தெங்குமரஹடா கிராமத்தினரை இடமாற்றம் செய்ய, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் நிதி ஒதுக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தேசிய வனம் இழப்பீடு நிர்வாக நிதியில் தான் பணம் இருப்பதாக தெரிவித்தார்.
எனினும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு, மத்திய அரசு உடனே நிதி ஒதுக்க வேண்டும். அந்த நிதியை, தமிழக வனத் துறை தலைமை பாதுகாவலருக்கு இரண்டு மாதங்களில் ஒதுக்க வேண்டும். அந்த தொகையை, கிராமத்தினருக்கு வழங்கி, அதற்கு அடுத்த ஒரு மாதத்தில் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்" இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து, அக்டோபர் 10ல் அறிக்கை அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இக்கிராம மக்களைக் காலி செய்து மறுகுடியமர்வு செய்ய வனத்துறை முடிவு செய்திருக்கிறது. இதையடுத்து அங்குள்ள 497 குடும்பங்களை வேறு இடத்தில் குடியேற்ற வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து இதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். 497 குடும்பங்கள் குடியமர்த்துவதற்கு ஏதுவாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை அருகே பொதுப் பணித்துறைக்கு சொந்தமான 69 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த இடத்தில் தெங்கு மரஹாடாவில் வசிக்கும், 497 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
When the going gets tough the tough gets going 😊
— Supriya Sahu IAS (@supriyasahuias) September 8, 2023
Got a thrilling ride in our newly inducted Rescue and Rehabilitation vehicle while crossing Moyar river to reach Thengumarahada a remote village located near the Satyamangalam Tiger reserve in the buffer zone of Mudumalai Tiger… pic.twitter.com/m2pPFWSW3s
இதனிடையே தெங்கு மரஹாடா கிராமத்திற்கு நேற்று சென்ற தமிழக வனத்துறை கூடுதல் முதன்மை செயலர் சுப்ரியா சாகு, ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மற்றும் வனத்துறை அதிகாரிகள், வேறு இடத்தில் மறு குடியமர்வு செய்வது குறித்து கிராம மக்களுடன் கலந்துரையாடினார்கள்.
அதன்பின்னர், வனத் துறை கூடுதல் முதன்மை செயலர் சுப்ரியா சாகு, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை அருகே பொதுப் பணித்துறைக்கு சொந்தமான 69 ஏக்கர் நிலத்தை ஆய்வு செய்தார். இந்த இடத்தில் எப்படி 497 குடும்பங்கள் குடியமர்த்தப்பட உள்ளனர் அவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படுவது குறித்தும், பட்டா வழங்குவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். ஆய்வு முடிவகள் அறிக்கையாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக வனத்துறை முடிவு செய்துள்ளது.
இதனிடையே சுப்ரியா சாகு ஐஏஎஸ் தனது ட்விட்டர் பதிவில், தெங்குமரஹாடா கிராமத்தில் உள்ளூர் பழங்குடியின பெண்களை சந்தித்த அழகிய தருணத்தை வெளியிட்டிருந்தார். அவர்களின் புன்னகை, சிரிப்பு மற்றும் அவர்களின் அன்பை கண்டு அவர் பூரித்து போனார். காட்டை விட்டு வெளியேற போகும் நிலையில் அந்த மக்களின் அன்பான உபசரிப்பு அவரை நெகிழ வைத்தது.












Click it and Unblock the Notifications