2 மாத தலைமறைவு வாழ்க்கைக்கு பிறகு பலத்த பாதுகாப்புடன் பின்வாசல் வழியாக கோர்ட்டில் ஆஜரான எஸ்வி சேகர்
பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த எஸ்வி சேகர் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் பின்புற வாசல் வழியாக ஆஜரானார்.
Recommended Video

சென்னை: பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த எஸ்வி சேகர் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் பின்புற வாசல் வழியாக ஆஜரானார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த மே மாதம் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தடவினார். இந்த சம்பவம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
இதைத்தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் அந்த பெண் பத்திரிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டார். கன்னத்தை தடவியது ஏன் என விளக்கமும் அளித்தார்.

எஸ்வி சேகர் விமர்சனம்
ஆனால் இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் பெண் பத்திரிக்கையாளரை மிகவும் இழிவாக விமர்சித்திருந்தார்.

குவிந்த புகார்கள்
அதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு மாவட்ட காவல்நிலையங்களில் அவர் மீது பத்திரிக்கையாளர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

கைவிரித்த உச்சநீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் எஸ்வி சேகரை கைது செய்ய தடையில்லை என உத்தரவு பிறப்பித்தது. இதனால் பதறிய எஸ்வி சேகர் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து கைவிரித்தது.

ஜாலியாக உலா
இதைத்தொடர்ந்து எஸ்வி சேகர் எந்நேரத்திலும் கைதாகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக தலைமைச்செயலாளரான கிரிஜா வைத்தியநாதன் அவரின் உறவினர் என்பதால் எஸ்வி சேகரை கைது செய்ய போலீசார் தயக்கம் காட்டினர். இதனால் பொது நிகழ்ச்சிகளில் ஜாலியாக உலா வந்தார் எஸ்வி சேகர்.

எஸ்வி சேகர் ஆஜர்
இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளரை இழிவாக பேசிய வழக்கில் எஸ்வி சேகர் ஜூன் 20ஆம் தேதி ஆஜராகுமாறு எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதைத்தொடர்ந்து எஸ்வி சேகர் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பின்வாசல் வழியாக ஆஜர்
வீட்டில் இருந்தே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் எஸ்வி சேகர். மேலும் பாதுகாப்பு காரணமாக அவர் பின்வாசல் வழியாக அழைத்து செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.

61வது நாளில் ஆஜர்
கொலைக்குற்றவாளிகளே பிரதான வாயில் வழியாக ஆஜராகும் நிலையில் அச்சத்தின் காரணமாக எஸ்வி சேகர் பின்வாசல் வழியாக ஆஜராகியுள்ளார். 2 மாதங்களாக போக்கு காட்டி வந்த எஸ்வி சேகர் 61 வது நாளில் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications