இதோ டி.ராஜேந்தரும் புறப்பட்டுவிட்டார்.... நவம்பரில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம்...
சென்னை: தமிழகம் முழுவதும் லட்சிய திமுக சார்பில் வருகின்ற நவம்பர் மாதம் முதல் சுற்றுப்பயணம் ஆரம்பிக்க போவதாக அக்கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார். மேலும், கூட்டணி யாருடன் என்பதையும் விரைவில் தெரிவிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் டி.ராஜேந்தர் கூறியதாவது:
தமிழக சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. இதில் லட்சிய தி.மு.கவும் போட்டியிடும். தமிழ்நாட்டில் அ.தி. மு.க, தி.மு.க இரண்டு கட்சிகள்தான் பலம் வாய்ந்தவை. மற்ற கட்சிகள் எல்லாம் தனித்தனியாக நிற்கின்றன. இவற்றால் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை.

ஸ்டாலின் செல்லும் நமக்கு நாமே பயணம், அவர்களுக்கு அவர்களே. முடியட்டும், விடியட்டும் என சொல்கிறார்கள். எது முடியட்டும், எது விடியட்டும் என அடுத்த மாதம் சொல்கிறேன்.
நாங்களும் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வோம். விஜயகாந்த் போல் எதுவும் பேசாமல் இருக்கமாட்டோம். கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் பேசுவோம்

லட்சிய தி.மு.க இந்த தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணியில் சேரும். அது எந்த கூட்டணி என்பதை விரைவில் தகுந்த நேரத்தில் அறிவிப்பேன். ஏற்கனவே நான் பல்வேறு தேர்தல்களில் தேர்தல் பிரசாரம் செய்து இருக்கிறேன்.வருகிற நவம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்வேன்.
மக்களிடம் எனது கருத்துக்களை எடுத்துச் சொல்வேன். தேர்தலில் யார் போட்டி யிடுவது என்பது குறித்து பின்னால் முடிவு செய்யப்படும்.

சிம்பு போட்டியிடுவாரா என்று கேட்கிறார்கள். அவர் வழி வேறு, எனது வழி வேறு. சட்டசபை தேர்தலில் மக்கள் நலன் கருதி எங்கள் கட்சி தேர்தலை சந்திக்கும் அது பற்றி விவரங்களை பின்னர் தெரிவிப்பேன். தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைத்தாலும் மீண்டும் அங்கு செல்ல மாட்டேன்.
இவ்வாறு டி. ராஜேந்தர் கூறினார்.
மேலும், நடிகர் சங்க தேர்தல் குறித்து கேட்டதற்கு, கருத்து தெரிவிக்க மறுத்த டி.ராஜேந்தர் அது என்ன நாடாளப் போகும் குடியரசுத்தலைவர் தேர்தலா எனக் கேட்டார்.












Click it and Unblock the Notifications