11 மாடிக் கட்டிட விபத்துக்கு தரமற்ற கட்டுமானப் பொருட்களே காரணம்: ஹைகோர்ட்டில் அறிக்கை
சென்னை: ‘‘கட்டிடம் தனது சுய எடையையே தாங்க முடியாததாக இருந்துள்ளது. பெரிய புயலோ, நிலநடுக்கமோ இல்லாத நிலையிலேயே அது சரிந்து விழுந்துள்ளது என்று நிபுணர்கள் அறிக்கை அளித்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த ஜூன் 28-ந் தேதி 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 61 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். 27 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி ஹைகோர்ட்டில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரிக்கின்றனர். இந்த மனு தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

சிறப்பு விசாரணைக்குழு
இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு விசாரணை குழு நியமிக்கப்பட்டது. அதில் வடக்கு மண்டல இணை போலீஸ் கமிஷனர், ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களின் கட்டிட கலை, கட்டமைப்பு பொறியியல் நிபுணர்கள் இடம் பெற்றிருந்தனர்.

தரமற்ற கட்டுமானப்பொருள்
விசாரணைக்கு உதவியாக இருந்த நிபுணர் குழு, அந்த கட்டிடத்தின் தன்மை, கான்கிரீட்டின் தரம், ஸ்டீல், மண்ணின் தன்மை போன்றவை குறித்து சோதனை செய்தது. கான்கிரீட்டின் தன்மை குறைந்தபட்ச தரத்தை கொண்டதாக இல்லை என்றும், கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஸ்டீலும் தாங்கும் சக்தியுடன் இருக்கவில்லை என்றும் நிபுணர்கள் அறிக்கை கொடுத்தனர்.

ஒழுங்கற்ற வடிவமைப்பு
நிபுணர்கள் இணைந்து அளித்துள்ள அறிக்கையில், ‘‘கட்டிடம் தனது சுய எடையையே தாங்க முடியாததாக இருந்துள்ளது. பெரிய புயலோ, நிலநடுக்கமோ இல்லாத நிலையிலேயே அது சரிந்து விழுந்துள்ளது. தூண்களும் சரிவர அமைக்கப்படவில்லை. இவையெல்லாம் சேர்ந்து அந்த கட்டிடத்தின் வடிவமைப்பை ஒட்டுமொத்தமாக நிலையற்றதாக ஆக்கி இருந்தன. எனவே எப்போதும் விழலாம் என்ற நிலையில்தான் அந்த கட்டிடம் இருந்தது.

விழுவதற்கு காத்திருந்தது
ஆட்கள் குடி ஏறி எடை கூடாத நிலையிலேயே அந்த கட்டிடம் நிலையற்றதாகத்தான் இருந்தது. சிறிய புயல், மழை, சிறிய அதிர்வு, நிலநடுக்கம் போன்றவை நிகழ்ந்தால், உடனே அந்த கட்டிடம் சரிவுக்கு உள்ளாகியிருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், அது விழுவதற்கு காத்திருந்தது என்றுதான் கூறமுடியும்'' என்று கூறப்பட்டுள்ளது.

பலமில்லாத அஸ்திவாரம்
மேலும், மண் பற்றிய பரிசோதனையில், ‘‘11 மாடி கட்டிடத்தையும் தாங்கிக்கொள்ளும் பலம், அஸ்திவாரத்துக்கு இல்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுபவமற்ற பொறியாளர்கள்
கீழ் தளத்தில் கார் பார்க்கிங் வசதிக்காக பல தூண்களை அகற்றியுள்ளனர். தூணில் காணப்பட்ட கட்டுக் கம்பிகள் எதுவும் நிர்ணயிக்கப்பட்ட முறைப்படி முறுக்கப்படவில்லை. கட்டுமானத்துக்கு அனுபவமற்ற பொறியாளர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

600 பேரிடம் விசாரணை
சிறப்பு விசாரணை குழுவால் 600 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பான இறுதி அறிக்கை 25-ந் தேதியன்று ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

9 பேர் மீது குற்றச்சாட்டு
இந்த வழக்கில் பிரைம் சிருஷ்டி ஹவுசிங் நிறுவனத்தைச் சேர்ந்த மனோகரன் உள்பட 9 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக 334 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 137 ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications