எம்ஜிஆர் காலம் முதல் இதுவரை.. தமிழக சபாநாயகர்களும், நீதிமன்றங்களும் முரண்பட்ட முக்கிய நிகழ்வுகள்!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருந்து 79 திமுக எம்எல்ஏக்களை ஒரு வார காலம் சபாநாயகர் பி.தனபால் சஸ்பெண்ட் செய்த விவகாரத்தில் உடனடியாக தலையிட சென்னை உயர்நீதி மன்றம் மறுத்து விட்டது. இந்த விவகாரம் இன்று தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ஆர்.மஹாதேவன் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த ஒரு வார கால சஸ்பெண்ட் உத்தரவுக்கு உடனடியாக இடைக் காலத் தடை விதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த பெஞ்ச் இந்த மனு சம்மந்தமாக விளக்கம் அளிக்க சபாநாயகர் மற்றும் தமிழக சட்டமன்ற செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்திரவிட்டது.

ஒட்டு மொத்த திமுக எம்எல்ஏக்களையும் சஸ்பெண்ட் செய்ததன் மூலம் தங்களுக்கு வாக்களித்த சுமார் 35 சதவிகித மக்களின் குரல் சட்டமன்றத்தில் எடுபடாமல் புறந்தள்ளப் பட்டு விட்டதாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய மனுவில் தெரிவித்திருந்தார். சபாநாயகரின் நடவடிக்கை ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிப்பது மட்டுமின்றி, அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல் என்றும் திமுகவின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணை விரிவான விவாதத்திற்காக செப்டம்பர் 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப் பட்டிருக்கிறது. அரசு வழக்கறிஞர் சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலருக்கு கொடுக்கப் பட்ட நோட்டீஸை பெற்றுக் கொண்டார். ஆகவே இந்த நோட்டீஸூக்கு சபாநாயகரும், செயலாளரும் பதில் அளிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் கடந்த காலங்களில் இதுபோன்று சட்டமன்ற உத்தரவுகளுக்கு எதிராக நீதிமன்றங்களுக்கு போன விவகாரங்களில் சில நேரங்களில் நீதிமன்றங்களின் நோட்டீஸை ஏற்க சபாநாயகர்கள் மறுத்த முன்னுதாரணங்களும் ஓரளவு உண்டு.
தமிழக சட்டமன்ற சபாநாயகர்களுக்கும், நீதிமன்றங்களுக்குமான - சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் - மோதல் நீண்ட நெடியதோர் பாரம்பரியம் கொண்டது. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அநேகமாக ஒவ்வோர் சட்டமன்றத்திலும் சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து ஏதாவது ஒரு விவகாரத்தில் பாதிக்கப் பட்ட தரப்பு உயர்நீதி மன்றத்துக்கோ, உச்சநீதி மன்றத்துக்கோ சென்று கொண்டுதான் இருந்திருக்கிறது.
இத்தகைய சம்பவங்களில் முக்கியமானவை சிலவற்றை இங்கு பார்க்கலாம். இதில் விடுபட்ட சில சம்பவங்களும் இருக்கலாம்தான்.

இந்த 35 ஆண்டு கால வரலாற்றில் அநேகமாக முதல் மோதல் எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும்போது நடைபெற்றது. 1980ல் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் 1981ல் சட்டமன்றத்தில் பேசும்போது அரசின் சில நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் தொடுக்கப் படும் வழக்குகள் பற்றி இவ்வாறு பேசினார்; ''சமுதாய நலன் கருதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் எவ்வளவோ நலத்திட்டங்களை கொண்டு வருகின்றன. ஆனால் ஒரு சிலர் இதனை எதிர்த்து நீதிமன்றங்களுக்குப் போகின்றனர். அப்போது இந்த மனுக்களை ஏற்றுக் கொண்டு அரசின் திட்டங்களுக்கு நீதிமன்றங்கள் தடை உத்திரவுகளை பிறப்பிக்கின்றன. சமூக நீதிக்காகவும், சமுதாய நலனுக்காகவும் செய்யப் படும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக இத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்கும் போது நீதிமன்றங்கள் யோசிப்பதில்லை'' என்று சட்டமன்றத்தில் பேசினார்.
இந்தப் பேச்சை எதிர்த்து, எம்ஜிஆர் மீது, அவரது எம்எல்ஏ பதவியை பறிக்க உத்தரவிடக் கோரி (writ of quo warranto) அப்போது சட்டமன்ற மேலவை உறுப்பினராக, அதாவது எம்எல்சி யாக இருந்த திமுக வின் ஆற்காடு வீராசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சத்தியதேவ் இந்த மனுவை விசாரணைக்கு அனுமதித்து எம்ஜிஆருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
அப்போது சபாநாயகராக இருந்த க.ராஜாராம், இந்த நோட்டீஸை எம்ஜிஆர் வாங்க வேண்டாம், காரணம், நீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்டதுதான் சட்டமன்றமும். ஆகவே சட்டமன்றத்திற்குள் பேசிய ஒரு பேச்சுக்காக நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம், நிர்ப்பந்தம், முதலமைச்சருக்கோ, எம்எல்ஏ க்களுக்கோ இல்லை என்று கூறினார். பின்னர் இந்த விவகாரம் அப்படியே அமுங்கி போனது.
அந்தக் காலகட்டத்தில் தாங்கள் அரசால் உளவு பார்க்கப் படுகிறோம் என்று வெளிப்படையாகவே நீதிபதிகள் குற்றஞ் சாட்டினார்கள். (http://indiatoday.intoday.in/story/madras-hc-judges-condemn-m.g.-ramachahdran-government-for-keeping-surveillance-on-them/1/371635.html)
1984 - 1987 எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் சபாநாயகராக இருந்த பி.எச். பாண்டியனின் செயற்பாடுகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. வானளாவிய அதிகாரம் தனக்கிருப்பதாக பாண்டியன் வெளிப்படையாகவே சட்டமன்றத்தில் அறிவித்தார். 1985-86 ஆம் ஆண்டு காலத்தில் ''வணிக ஒற்றுமை'' என்ற பத்திரிகையின் ஆசிரியர் பால்ராஜ் என்பவரை சட்டமன்றத்தின் மாண்பை குலைக்கும் விதத்தில் செய்திகள் வெளியிட்டதாகக் கூறி மூன்று மாதங்கள் அவரை சிறைக்கு அனுப்பினார் பாண்டியன்.
இந்த காலகட்டத்தில் அட்டைப்பட கார்ட்டூனுக்காக ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியனுக்கு சிறை தண்டனை விதித்தார் பாண்டியன். பின்னர் மூண்டெழுந்த கண்டனங்களின் காரணமாக மூன்றே நாட்களில் எம்ஜிஆர், விகடன் ஆசிரியரை விடுதலை செய்தார். இந்த விவகாரங்கள் எல்லாமே நீதிமன்றத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டன.
1991 - 1996 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நீதிமன்றங்களுடன் சபாநாயகருக்கு மோதல் வருவது அடிக்கடி நிகழ்வாகவே இருந்தது. 1992ம் ஆண்டில் பத்திரிகையாளர் கே.பி. சுனில் எழுதிய ஒரு கட்டுரைக்காக அவரை கைது செய்து 15 நாட்கள் சிறையில் வைக்க சட்டமன்ற உரிமைக் குழு தீர்மானம் நிறைவேற்றியது. இதனை எதிர்த்து சுனில் உச்ச நீதிமன்றம் போனார். உச்ச நீதிமன்றம் கைது நடவடிக்கைக்கு தடை விதித்தது. ஆனால் இந்த உத்தரவு தன்னை கட்டுப்படுத்தாது என்றும், சென்னை போலீஸ் கமிஷனர் தன்னுடைய உத்தரவை செயற்படுத்த வேண்டுமென்றும் சபாயநாயகர் சேடப்பட்டி முத்தையா கூறினார்.
மீண்டும் சுனில் உச்ச நீதிமன்றத்துக்குப் போனார். ஒரு சனிக்கிழமையன்று அவசர நிகழ்வாக வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கையை சபாநாயகருக்கும், தமிழக அரசுக்கும் விடுத்தது. தங்களது உத்தரவை மீறினால் அதற்கான கடுமையான விலையை தமிழகத்தின் சம்மந்தப்பட்ட சிவில் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தது. விவகாரம் அத்தோடு அமுங்கிப் போனது.
1994ல் திமுக பேச்சாளர் வெற்றிக்கொண்டானை கைது செய்ய சட்டமன்ற உரிமைக் குழு தீர்மானம் நிறைவேற்றியது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்துக்குப் போனார் வெற்றிக்கொண்டான். அவரது மனுவை ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்றம் வெற்றிக் கொண்டானை கைது செய்ய தடை விதித்தது. இதே காலகட்டத்தில் ''முரசொலி'' பத்திரிகையில் ஜெயலலிதா மற்றும் தமிழக சட்டமன்றத்தை பற்றி அவதூறாக எழுதியதற்காக அப்பத்திரிகையின் ஆசிரியர் முரசொலி செல்வத்தை சட்டமன்றத்தில் கூண்டில் ஏற்றி அவருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற உரிமைக் குழு முடிவெடுத்தது.
இந்த தீர்மானத்தை எதிர்த்து முரசொலி செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு போனார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு, முரசொலி செல்வம் தமிழக சட்டமன்றத்தில் கூண்டில் ஏற்றப்பட்டார். அவருக்கு எதிராக கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது. இதற்காகவே பிரத்தியேகமாக அப்போது ஒரு கூண்டு செய்யப் பட்டதும் முக்கியமான நிகழ்வுதான்.
இந்த காலகட்டத்தில் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவுக்கு கிடைத்த மற்றோர் வெற்றி, அஇஅதிமுக உறுப்பினர்களாக இருந்த ஜி.விஸ்வநாதன் மற்றும் அழகு திருநாவுக்கரசு ஆகியோரை எம்எல்ஏ பதவியிலிருந்து அவர் டிஸ்மிஸ் செய்ததை செல்லுபடியாகும் என்று நீதிமன்றங்கள் அறிவித்தது. இந்த இருவரையும் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக சஸ்பெண்ட் செய்தது கட்சி தலைமை. பின்னர் இவர்கள் இருவரும் 1994ல் மதிமுகவில் சேர்ந்தனர்.
அப்போது அவர்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எம்எல்ஏ பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்தார் சேடப்பட்டி முத்தையா. இதனை எதிர்த்து இருவரும் முதலில் சென்னை உயர்நீதி மன்றத்தைநாடினர். சபாநாயகரின் தீர்ப்பு செல்லுபடியாகும் என்று தீர்ப்பு வந்தது. பின்னர் உச்ச நீதிமன்றத்துக்கு இருவரும் சென்றனர். அங்கும் இவர்களை சபாநாயகர் டிஸ்மிஸ் செய்தது செல்லுபடியாகும் என்று தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பு இன்று வரையில் சபாநாயகரின் அதிகார வரம்பில் ஒரு மைல் கல்லான தீர்ப்பு என்பது கவனிக்கத்தக்கது.
1996 - 2001 திமுக ஆட்சிக் காலத்தில் அஇஅதிமுக உறுப்பினர் தாமரைக்கனி மீது சபாநாயகர் பிடிஆர் பழனிவேல்ராஜன் எடுத்த நடவடிக்கை முக்கியமானது. சபையில் மானியக் கோரிக்கையில் பேசிக் கொண்டிருக்கும் போதே அப்போதய விவசாயத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் முகத்தில் தாமரைக் கனி ஓங்கி ஒரு குத்து விட்டார். இதில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட தாமரைக் கனி பின்னர் கைது செய்யப் பட்டார். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்கவும் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அவர் கைதான அடுத்த நாளே அஇஅதிமுக வின் ஓ.எஸ். மணியன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் தாமரைக் கனியை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. மேலும் தாமரைக் கனிக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதித்த சட்டமன்றத் தீர்மானத்திற்கும் இடைக் காலத்தடை விதித்த து உத்திரவு பிறப்பித்தது.
2001 - 2006 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் உரிமைக் குழு ''தி ஹிந்து'' நாளிதழின் ஆசிரியர் மற்றும் நிருவாகிகளுக்கு எதிராக 15 நாட்கள் சிறைத் தண்டனை விதித்தபோது அதனை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு போய் தடை வாங்கினார்கள். 2011 - 2016 ஜெ ஆட்சிக் காலத்தில் தேமுதிக உறுப்பினர்கள் ஆறு பேரை ஓராண்டுக்கு சபாநாயகர் தனபால் சஸ்பெண்ட் செய்தது செல்லாது என்று உச்சி நீதி மன்றம் இந்தாண்டு பிப்ரவரியில் தீர்ப்பளித்தது.
ஆகவே தொடர்ச்சியாகத்தான் இந்த மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் வேடிக்கையான விஷயம் திமுக வும், அஇஅதிமுக வும் ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சையும், எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சையும் பேசிக் கொண்டிருப்பது தான். திமுக ஆட்சிக் காலத்தில் சட்டமன்ற நடவடிக்கைகளை ஒளிபரப்ப ''கலைஞர்'' டீவி க்கு மட்டுமே அனுமதி கொடுக்கப் பட்டது. 2011 முதல் ''ஜெயா டீவி'' க்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப் படுகிறது.
இந்த அணுகுமுறையே அவலமானது. அனேகமாக வேறெந்த மாநிலத்திலும் இந்த முறை அதாவது, ஆளுங்கட்சிக்கு சொந்தமான டீவி க்கு மட்டுமே அம் மாநில சட்டமன்ற நடவடிக்கைகளை ஒளிபரப்ப அனுமதி கொடுக்கப்படும் ஓர வஞ்சனை கொண்ட அணுகுமுறை கிடையாது. இது பற்றி ஆச்சரியத்துடன் உச்ச நீதிமன்றமே ஒரு முறை வினா எழுப்பியிருக்கிறது. ''ஆம். ஆறு தேமுதிக உறுப்பினர்களின் ஓராண்டு சஸ்பெண்ட் பற்றிய வழக்கு வந்த போது சட்டமன்ற நிகழ்ச்சிகளை ''ஜெயா டீவி'' மட்டுமே ஒளிபரப்பு செய்கிறது என்ற போது நீதிபதிகள் ஆச்சரியத்துடன் கேட்டனர், ''அதெப்படி ஒரு தனியார் தொலைக் காட்சிக்கு மட்டும் அனுமதி கொடுக்கப் பட்டிருக்கிறது? அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷனுக்கு அனுமதி கொடுக்கப் படவில்லையா?'' என்று கேட்ட நீதிபதிகள் அதற்கு மேல் அந்த விஷயத்திற்குள் போகவில்லை'' என்று கூறுகிறார் வழக்கு விசாரணையின் போது உச்ச நீதி மன்றத்தில் இருந்த புது டில்லி வழக்கறிஞர் பிரபு.
தற்போது சென்னை உயர்நீதி மன்றம் அனுப்பியிருக்கும் நோட்டீஸூக்கு சபாநாயகர் எப்படி பதில் அனுப்ப போகிறார் என்று தெரியவில்லை. பெரியளவில் தற்போதைய விவகாரத்தில் மோதல் வர வாய்ப்புகள் குறைவு. காரணம் இந்த சஸ்பெண்ட் ஒரு வார காலத்துக்குத் தான். அதன் பின்னர் சகஜ நிலைமை தாற்காலிகமாக திரும்பலாம். அப்போது நீதி மன்ற வழக்குப் பற்றிய விவாதம் பெரியளவில் இருக்காது.
கிட்டத் தட்ட இன்னும் ஐந்தாண்டுகளுக்கு ஜெயலலிதாவை திமுக சமாளித்தாக வேண்டும். இதில் நீதிமன்றங்களின் தயவு கண்டிப்பாக பிரதான எதிர்கட்சிக்குத் தேவைப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஜெயலலிதாவின் நான்காவது ஆட்சிக் காலத்தின் முதல் ரவுண்டில் சட்டசபைக்கு உள்ளேயேயும், வெளியேயும் சபாநாயகர் வெற்றி பெற்று விட்டார். அடுத்தடுத்த ரவுண்டுகளில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய நாம் காத்திருக்கத் தான் வேண்டும். அது ஒரு சுவாரஸ்யமான காத்திருத்தல் தான்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications