கிராமங்கள், நகரங்களில் குடிநீர் பஞ்சத்தை தீர்க்க நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசு சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று அறிவித்துள்ளார். இதில், நகராட்சி, கிராமப்புறங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான அம்சங்களை அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வறட்சி காரணமாக நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கென 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

வறட்சி காரணமாக கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கென 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
வறட்சி காரணமாக வன உயிரினங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அவற்றுக்குத் தேவையான தீவனம் மற்றும் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
பொதுப்பணித் துறை மூலமாக நிலத்தடி நீர்த்தேக்கும் அமைப்பு, நிலத்தடி நீர் செரிவூட்டும் அமைப்பு போன்ற நீராதாரங்கள் மேம்படுத்தும் பணிகள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications